search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவாஜா, ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல் ஆட்டத்தால் இந்தியாவுக்கு 314 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
    X

    கவாஜா, ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல் ஆட்டத்தால் இந்தியாவுக்கு 314 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

    உஸ்மான் கவாஜா, ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியாவுக்கு 314 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா #INDvAUS
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சு தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் கவுல்டர்-நைல் நீக்கப்பட்டு ரிச்சர்ட்சன் சேர்க்கப்பட்டார்.

    ஆஸ்திரேலிய அணியினில் உஸ்மான் கவாஜா, ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஓவர் செல்லச்செல்ல அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இதனால் 9.5 ஓவரில் 50 ரன்னைத் தொட்ட ஆஸ்திரேலியா 16.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. ஆரோன் பிஞ்ச் 51 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். மறுமுனையில் உஸ்மான் கவாஜா 56 பந்தில் 8 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.



    24.4 ஓவரில் ஆஸ்திரேலியா 150 ரன்னைத் தொட்டது. இருவரும் சிறப்பாக விளையாடியதால் ஆஸ்திரேலியா எளிதாக 300 ரன்னைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருவரும் சதத்தை நோக்கிச் சென்றனர். ஆனால் 193 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆஸ்திரேலியா முதல் விக்கெட்டை இழந்தது.

    ஆரோன் பிஞ்ச் 99 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அடுத்து மேக்ஸ்வெல் களம் இறங்கினார். மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாட கவாஜா 107 பந்தில் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 104 ரன்னில் முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார்.



    அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 31 பந்தில் தலா மூன்று பவுண்டரி, சிக்சருடன் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா புயல் வேகத்தில் பீல்டிங் செய்து பந்தை டோனியிடம் வீசி, டோனி அற்புதமான வகையில் ரன்அவுட் ஆக்கினார்.

    மேக்ஸ்வெல் அவுட்டாகும்போது ஆஸ்திரேலியா 42 ஓவரில் 258 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் வேகத்தில் மந்தநிலை ஏற்பட்டது. ஷான் மார்ஷ் 7 ரன்னிலும், ஹேண்ட்ஸ்காம்ப் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

    ஸ்டாய்னிஸ் (31), கேரி (21) ஓரளவிற்கு விளையாட ஆஸ்திரேலியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் 314 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்குகிறது.
    Next Story
    ×