search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெல்போர்ன் டெஸ்ட்- வெற்றியை நெருங்கியது இந்தியா
    X

    மெல்போர்ன் டெஸ்ட்- வெற்றியை நெருங்கியது இந்தியா

    மெல்போர்னில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றியை நெருங்கியது. #AUSvIND
    மெல்போர்ன்:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் எந்த ஒரு வீரரும்  25 ரன்களை கூட தொடவில்லை. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 66.5 ஓவர்களில் 151 ரன்களில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. பும்ரா 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    292 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பாலோ-ஆன் வழங்கவில்லை. ஒரு வேளை கடைசி நாளில் பேட்டிங் செய்யும் நிலை ஏற்பட்டால் சேசிங் செய்வது மிகவும் கடினம் என்று கருதிய இந்திய அணி நிர்வாகம் 292 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடுவது என்று முடிவு செய்தது.


    ஆனால் 2-வது இன்னிங்ஸ் இந்தியாவுக்கு திருப்திகரமாக அமையவில்லை. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் மிரட்டினார். இந்திய வீரர்கள் மயங்க் அகர்வாலை தவிர முன் வரிசை வீரர்கள் அனைவரும் சொதப்பினார். இதனால் இந்திய அணி 2-வது இன்னிங்சில் நேற்றைய ஆட்ட நேர முடிவில், 27 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று தொடர்ந்து ஆடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்து இருந்த போது தனது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சின் 292 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து இந்திய அணி, 399 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

    இதனைத்தொடர்ந்து இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்சை துவங்கி ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மைதானம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் பேட்ஸ்மேன்கள் நிதானமாக ரன் சேர்த்தனர்.


    நிதானமாக ஆடிக்கொண்டிருந்த கவாஜா, 33 ரன்கள் சேர்த்த நிலையில் முகமது ஷமியிடம் விக்கெட்டை இழந்தார்.  இதேபோல் ஷேன் மார்ஷ் (44) விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார். மிட்செல் மார்ஷ் 10 ரன்கள் எடுத்த நிலையில் அவரை ஜடேஜா அவுட் ஆக்கினார். நீண்டநேரம் தாக்குப்பிடித்து ஆடிய ஹெட் 34 ரன்களில் அவுட் ஆனார். 157 ரன்களுக்குள் 6 விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா. வெற்றிக்கு 242 ரன்கள் தேவைப்பட்டது.

    ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர் வீரர்கள் வெளியேறியதையடுத்து, இந்தியா வெற்றியை நெருங்கியது. எனினும் விக்கெட்டைக் காப்பாற்ற பின்வரிசை வீரர்கள் தீவிர முயற்சி எடுத்தனர். மிகவும் நிதானமாக ஆடிய டிம் பெயின் 26 ரன்களில் ஜடேஜாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். ஸ்டார்க் 18 ரன்கள் மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்பினார். அப்போது அணியின் ஸ்கோர் 215/8

    கடும் நெருக்கடிக்கு மத்தியிலும் பொறுப்புடன் ஆடிய கம்மின்ஸ் அரை சதம் கடந்தார்.  அவர் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. கம்மின்சுடன் லயன் (6 ரன்) களத்தில் உள்ளார்.

    ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு இன்னும் 141 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 2 விக்கெட்டுகளே உள்ளன. இதன்மூலம் இந்தியா வெற்றியை நெருங்கி உள்ளது. நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் 2 விக்கெட்டுகளையும் இந்தியா கைப்பற்றி, கணிசமான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  #AUSvIND #TeamIndia
    Next Story
    ×