search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேட்டிங்கில் முன்னேற்றம் தேவை- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சன்னிகுமார் கருத்து
    X

    பேட்டிங்கில் முன்னேற்றம் தேவை- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சன்னிகுமார் கருத்து

    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் மதுரை அணியுடனான தோல்வி குறித்து பேட்டிங்கில் முன்னேற்றம் தேவை என சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சன்னிகுமார் கருத்து தெரிவித்துள்ளார். #TNPL2018 #CSG #MP
    நெல்லை:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மதுரையிடம் வீழ்ந்து 2-வது தோல்வியை தழுவியது.

    நெல்லையில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய மதுரை பாந்தர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்எடுத்தது.

    கே.கவுசிக் 21 பந்தில் 37 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்), கஜீத் சந்திரன் 29 பந்தில் 37 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), நிலேஷ் சுப்பிரமணியன் 28 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி) எடுத்தனர். முருகன் அஸ்வின், சன்னிகுமார் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், சித்தார்த் 2 விக்கெட்டும், அலெக்சாண்டர் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    154 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பின்னர் விளையாடியது. அந்த அணி 20 ஓவர்களில் 127 ரன்னில் (ஆல்அவுட்) ஆனது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 26 ரன்னில் தோற்றது.

    கார்த்திக் அதிகபட்சமாக 28 ரன்னும் (1 பவுண்டரி, 1 சிக்சர்), கங்கா ஸ்ரீதர் ராஜூ 24 ரன்னும் (3 பவுண்டரி), முருகன் அஸ்வின் 17 பந்தில் 22 ரன்னும் (1பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ரகீல்ஷா, வருண் சக்கரவர்ததி ஆகியோர் தலா 3 விக்கெட்டும், கிரண் ஆகாஷ் 2 விக்கெட்டும், கவுசிக் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 2-வது தோல்வியை தழுவியது. தொடக்க ஆட்டத்தில் திருச்சி வாரியர்சிடம் தோற்றது. போட்டி முடிந்த பிறகு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சன்னிகுமார் சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது அணியின் முடிவு. எங்களது பந்துவீச்சு பலம் வாய்ந்தது. இதனால் தான் எதிர் அணியை 153 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினோம். எங்களது பேட்டிங் தான் சிறப்பாக அமையவில்லை. ஆடுகளம் மிகவும் மெதுவாக இருந்தது. பேட்ஸ்மேன்கள் இன்னும் சற்று நம்பிக்கையோடு விளையாடி இருக்க வேண்டும்.

    அதேநேரத்தில் மதுரை அணி பந்துவீச்சாளர்கள் திறமையாக பந்து வீசினார்கள்.

    எங்களது பந்துவீச்சும், பீல்டிங்கும் நன்றாக இருக்கிறது. ஆனால் பேட்டிங்கில் தான் இன்னும் முன்னேற்றம் தேவை. அடுத்தப்போட்டியில் நாங்கள் திறமையை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. நிச்சயமாக வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    டி.என்.பி.எல். வரலாற்றில் மதுரை அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இந்த வெற்றி குறித்து அந்த அணி வீரர் வருண் சக்கரவர்த்தி கூறியதாவது:-

    இந்த வெற்றியை பெருமையாக கருதுகிறேன். முதல் ஆட்டத்தில் நிறைய தவறுகள் செய்தோம். இந்த ஆட்டத்தில் நம்பிக்கையோடும், கனவோடும் விளையாடி வெற்றி பெற்றுள்ளோம். இதை தக்க வைத்துக்கொள்வோம்.



    சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் ஆடுகளம் இருந்தது. ரகீல்ஷாவுடன் இணைந்து சிறப்பாக பந்துவீசியது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்தர போட்டிகளில் நிறைய அனுபவம் பெற்றவர் என்பதால் அவரிடம் இருந்து நான் சிறப்பானவற்றை கற்றுக்கொள்ள முயற்சித்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது 3-வது ஆட்டத்தில் காரைக்குடி காளையுடன் வருகிற 21-ந்தேதி மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. மதுரை அணி 3-வது போட்டியில் ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்சை 22-ந்தேதி சந்திக்கிறது. இந்த ஆட்டம் திண்டுக்கல்லில் நடக்கிறது.

    இன்று ஓய்வு நாளாகும். நாளை நடைபெறும் 7-வது ‘லீக்’ ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. #TNPL2018 #CSG #MP
    Next Story
    ×