search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக்கிய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    X

    முக்கிய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். #IPL2018 #VIVOIPL #RCBvSRH

    பெங்களூரு:

    ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பார்தீவ் பட்டேல், விராட் கோலி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பார்தீவ் பட்டேல் 1 ரன்னிலும், விராட் கோலி 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

    அடுத்து டி வில்லியர்ஸ் உடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார். இருவரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் பந்து வீச்சை துவம்சம் செய்தார்கள். இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 14 ஓவரில் முடிவில் 144 ரன்கள் குவித்திருந்தது. ரஷித் கான் வீசிய 15-வது ஓவரின் 2-வது பந்தில் டி வில்லியர்ஸும், 4-வது பந்தில் மொயீன் அலியும் ஆட்டமிழந்தனர்.



    டி வில்லியர்ஸ் 36 பந்தில் 12 பவுண்டரி, 1 சிக்சருடன் 69 ரன்களும், மொயீன் அலி 34 பந்தில் 2 பண்டரி, 6 சிக்சருடன் 65 ரன்களும் குவித்தனர். 

    அடுத்து வந்த கொலின் டி கிராண்ட்ஹோம் அதிரடியாக விளையாடி 17 பந்தில் ஒரு பவண்டரி, 4 சிக்சருடன் 40 ரன்களும், சர்பராஸ் கான் 8 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 22 ரன்களும் குவிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபத்திற்கு 219 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். ஐதராபாத் அணி பந்துவீச்சில் ரஷித் கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.



    இதையடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் களமிறங்கினர். 2-வது ஓவரை சவுத்தி வீச அந்த ஓவரில் தவான், ஹேல்ஸ் இருவரும் தலா ஒரு சிக்ஸர் அடித்தனர். ஐதராபாத் அணி 5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்தது.

    5-வது ஓவரை சஹால் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் தவான் ஆட்டமிழந்தார். அவர் 18 ரன்கள் எடுத்தார். மோயின் அலி வீசிய 8-வது ஓவரின் கடைசி பந்தை ஹேல்ஸ் தூக்கி அடித்தார். அந்த பந்து சிக்ஸர் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பவுண்டரி கோட்டில் நின்று கொண்டிருந்த டி வில்லியர்ஸ் அந்த பந்தை கேட்ச் பிடித்தார். இதனால் ஹேல்ஸ் 24 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 



    வில்லியம்சனின் சிறப்பான ஆட்டத்தால் ஐதராபாத் அணி 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய வில்லியம்சன் 28 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து வில்லியம்சன், மணிஷ் பாண்டே இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் குவித்தனர். இதனால் ஐதராபாத் அணி 15 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவரில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 67 ரன்கள் தேவைப்பட்டது. சிறப்பாக விளையாடிய மணிஷ் பாண்டேவும் அரைசதம் கடந்தார்.

    17-வது ஓவரை வீசிய சவுத்தி 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 18-வது ஓவரை மொகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரில் ஐதராபாத் அணி 14 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி இரண்டு ஓவரில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை சவுத்தி வீசினார். அந்த ஓவரில் ஐதராபாத் அணி 15 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது.



    கடைசி ஓவரை சிராஜ் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் வில்லியம்சன் ஆட்டமிழந்தார். அவர் 42 பந்தில் 81 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத்தொடர்ந்து தீபக் ஹூடா களமிறங்கினார். இறுதியில் ஐதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. 

    இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்து கொண்டது.  பெங்களூரு அணியின் டி வில்லியர்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #IPL2018 #VIVOIPL #RCBvSRH
    Next Story
    ×