search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேப்டன் பதவியில் டோனியின் நிழலாக அஸ்வின்- ஆரோன் பிஞ்ச் புகழாரம்
    X

    கேப்டன் பதவியில் டோனியின் நிழலாக அஸ்வின்- ஆரோன் பிஞ்ச் புகழாரம்

    கேப்டன் பதவியில் அஸ்வின் அமைதியான முறையில் திட்டத்தை செயல்படுத்துகிறார் எனவும் டோனியின் நிழலாக அவர் இருப்பதாகவும் பஞ்சாப் அணியை சேர்ந்தவரான ஆரோன் பிஞ்ச் புகழாரம் சூட்டியுள்ளார்.#IPL2018 #AaronFinch #Ashwin
    இந்தூர்:

    ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி ராஜஸ்தானை வீழ்த்தி 6-வது வெற்றியை பெற்றது.

    இந்தூரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன்னே எடுக்க முடிந்தது. பட்லர் 39 பந்தில் 51 ரன் (7 பவுண்டரி) எடுத்தார். முஜீப் கூர் ரகுமான் 3 விக்கெட்டும், ஆண்ட்ரூடை 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் ஆடிய கிங்ஸ் லெவன் 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 54 பந்தில் 84 ரன் (7 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார்.

    பஞ்சாப் அணி பெற்ற 6-வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றி குறித்து அந்த அணி கேப்டன் ஆர்.அஸ்வின் கூறியதாவது:-

    கடந்த சில போட்டிகளில் நாங்கள் தோல்வியை தழுவினோம். இதனால் புள்ளிகள் பட்டியலில் முன்னேறவில்லை. பதற்றம் ஏற்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்று முன்னேறி இருக்கிறோம். ஒரு பேட்ஸ்மேன் கடைசி வரை நின்று விட்டால் அது போதுமானது. எங்களின் கடந்த சில வெற்றி பந்து வீச்சாளர்களால் கிடைத்தது.

    கேப்டனான நான் எனது அணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி செயல்பட்டுக்கொண்டு இருக்கிறேன். கேப்டன் பொறுப்பு என்பது பீல்டிங்கை அமைப்பது, பந்து வீச்சாளர்களை மாற்றுவது, பேட்டிங் ஆர்டரை சரியாக திட்டமிடுவது ஆகும்.

    இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் அஸ்வின் கேப்டன் பதவியை பஞ்சாப் அணி வீரரும், ஆஸ்திரேலியாவை சேர்ந்தவருமான ஆரோன் பிஞ்ச் பாராட்டி உள்ளார். அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    அஸ்வினின் தலைமையின் கீழ் விளையாடுவது சிறந்த அனுபவமாகும். சுழற்பந்து வீரரான அவர் அணியை குழுவாக அமைத்து ஊக்குவிப்பதில் அபாரமாக செயல்படுகிறார்.



    இக்கட்டான நேரத்தில் அவர் சரியான முறையில் கையாள்கிறார். அவர் அமைதியான முறையில் திட்டத்தை செயல்படுத்துகிறார். இதை அவர் டோனியிடம் இருந்து தவிர வேறு யாரிடமும் கற்று இருக்க முடியாது. கேப்டன் பதவியில் டோனியின் நிழலாக அஸ்வின் உள்ளார்.

    கேப்டன் பதவியில் அவர் சிறப்பாக செயல்படுகிறார். இந்த பதவியில் அவருக்கு அனுபவம் குறைவாக இருந்தாலும் சரியான முடிவுகளை எடுக்கிறார். வெற்றிகரமான கிரிக்கெட் வீரரான அவரது முடிவுக்கு டோனியின் செயல்பாடே காரணமாக இருக்கிறது.

    இவ்வாறு ஆரோன்பிஞ்ச் கூறியுள்ளார்.#IPL2018 #AaronFinch #Ashwin
    Next Story
    ×