search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடரும் தோல்வி - 2014 போல மீண்டெழுந்து அதிர்ச்சி அளிக்குமா மும்பை இந்தியன்ஸ்
    X

    தொடரும் தோல்வி - 2014 போல மீண்டெழுந்து அதிர்ச்சி அளிக்குமா மும்பை இந்தியன்ஸ்

    மூன்று முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி தற்போது பரிதாபமான நிலையில் உள்ளது. 2014-ம் ஆண்டில் இதே போன்ற நிலையில் இருந்து அந்த அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி ஆச்சரியப்பட வைத்தது. #MumbaiIndians

    மூன்று முறை ஐபிஎல் சாம்பியன், இரண்டு முறை சாம்பியன் லீக் கோப்பையை கைப்பற்றிய அணி என பலத்த எதிர்ப்பார்ப்புகளோடு இந்தாண்டு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது கடும் நெருக்கடியான நிலையில் உள்ளது. விளையாடிய 8 போட்டிகளில் 2-ல் மட்டுமே அந்த அணி வெற்றி பெற்றுள்ளது.

    சென்னை மற்றும் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டிகளில் மட்டுமே மும்பை வென்றுள்ளது. கிட்டத்தட்ட வெளியேறிவிட்ட நிலைதான், ஆனால், ஏதாவது அதிசயம் நடந்தால் மும்பை பிளே-ஆப் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை ஒட்டி முதல் பாதி ஐபிஎல் ஆட்டங்கள் துபாயில் நடந்தன.

    தற்போது போலவே, அப்போதும் மும்பை அணி தொடர்ந்து தோல்விகளை மட்டுமே பெற்றது. முதல் ஐந்து போட்டிகளில் தொடர் தோல்வியை அடுத்து ஆறாவது போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. அதனை அடுத்து பெங்களூர் அணியை வென்றாலும், சென்னைக்கு எதிரான அடுத்த போட்டியில் தோல்வி மீண்டும் கிடைத்தது.

    கெய்ரோன் பொல்லார்ட்

    தற்போதைய நிலை போல அப்போதும், எட்டு போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி. மும்பை இனி அவ்வளவுதான், வெளியேறிவிட்டது என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால், திடீர் விஸ்வரூபம் எடுத்த அந்த அணி யாருக்கு எதிராக தோற்றதோ அந்த அணிகளை அடித்து துவைத்து தொடர் வெற்றிகளை பெற்று பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.

    முதல் எட்டு போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி என்ற நிலையில், அடுத்த ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே மும்பை தோல்வி அடைந்திருந்தது. பிளே-ஆப் சுற்றில் மும்பை வெளியேறியது என்றாலும், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

    இந்த ஆண்டும், இதே போன்ற அதிசயங்கள் நடக்கும் என மும்பை ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு உள்ளனர். ரசிகர்கள் எதிர்பார்ப்பு தவிர வீரர்கள் செயல்பாடும் முக்கியமான ஒன்றே. எப்போதாவது அடிக்கும் கேப்டன் ரோகித் சர்மா இனி எல்லா ஆட்டங்களிலும் ஜொலிக்க வேண்டியது அவசியமான ஒன்று.

    கெயில், பிராவோ, ரஸ்ஸெல் ஆகிய மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் மற்ற அணிகளில் கலக்கிக்கொண்டிருக்க, மும்பை அணியில் உள்ள கெய்ரோன் பொல்லார்ட் எதற்கு இருக்கிறோம் என தெரியாமலேயே இருக்கிறார். பாண்டியா சகோதரர்கள், இஷான் போன்ற இளம் வீரர்கள் தங்களது திறனை இன்னும் காட்ட வேண்டும்.

    பந்து வீச்சு பிரிவிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்தால் மட்டுமே அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி சாத்தியம். அனைத்து போட்டிகளில் வென்றாலும், மற்ற அணிகளின் வெற்றி - தோல்வியை பொறுத்தே மும்பை பிளே-ஆப் செல்லும் வாய்ப்பு உள்ளது. #MumbaiIndians #IPL2018
    Next Story
    ×