search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை டோனியிடம் இருந்து கற்றேன்- தினேஷ் கார்த்திக்
    X

    ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை டோனியிடம் இருந்து கற்றேன்- தினேஷ் கார்த்திக்

    ஒரு ஆட்டத்தை எப்படி வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதை டோனியிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். #INDvBAN #DineshKarthik #Dhoni
    கொழும்பு:

    இலங்கையில் நடந்த 3 நாடுகள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது. பரபரப்பான இறுதிப்போட்டியில் வங்காளதேசத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இந்தியா கோப்பையை வெல்ல தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் காரணமாக இருந்தார். 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 29 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் சிக்சர் அடித்து முத்திரை பதித்தார்.

    20 ஓவர் சர்வதேச போட்டியில் 5 ரன் தேவை இருக்கும்போது சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்த முதல் வீரர் என்ற சாதனையை தினேஷ் கார்த்திக் படைத்தார்.

    நியூசிலாந்தை சேர்ந்த குப்தில், ஸ்காட்லாந்து வீரர் ரியான் ஆகியோர் இதற்கு முன்பு 4 ரன் தேவைப்பட்ட போது சிக்சர் அடித்து வெற்றி பெற வைத்து இருந்தனர்.

    இந்த நிலையில் கடைசி பந்தில் சிக்சர் அடித்தது டோனியிடம் இருந்து கற்ற திறமை என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-



    இதுபோன்ற ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை அனுபவத்தின் பலனாக கிடைப்பது என்று நினைக்கிறேன். இத்திறமைகளை விலைக்கு வாங்க முடியாது. அனுபவத்தின் காரணமாகவே கற்றுக் கொள்ள முடியும்.

    இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் நிதானமாக கையாள வேண்டும். இதற்கு டோனியின் ஆட்டங்கள் சிறந்த உதாரணம். அவர் எவ்வளவு நிதானத்துடன் கையாள்வார் என்பதை பார்த்து இருக்கிறோம். அவரை போன்றவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள முடியும். ஒரு ஆட்டத்தை எப்படி வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதை டோனியிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.

    கடைசி பந்தில் சிக்சர் அடித்ததை மிகவும் அற்புதமாக உணர்கிறேன். இதை என் வாழ்நாள் முழுவதும் நினைவலைகளில் இருக்கும்.

    கடந்த ஒரு ஆண்டாக எனது கிரிக்கெட் பயணம் நன்றாக இருக்கிறது. இந்திய அணியில் இடம் பெற்றது கடைசி வரை களத்தில் நின்று வெற்றி பெற்றது பெருமை அளிக்கிறது.

    இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

    இதற்கிடையே தினேஷ் கார்த்திக்கின் ஆட்டத்தை இந்திய அணி கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளார்.

    அவர் கூறும்போது, “கிரிக்கெட்டின் அற்புதமான ஆட்டம் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம். நம்ப முடியாத வகையில் இருந்தது. வீரர்கள் கூட்டு முயற்சி நன்றாக இருந்தது” என்றார். #NidahasTrophy #INDvBAN #DineshKarthik #Dhoni #MSDhoni
    Next Story
    ×