search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4-வது வெற்றி: ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தியது சிறப்பானது - அருண்குமார்
    X

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4-வது வெற்றி: ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தியது சிறப்பானது - அருண்குமார்

    மதுரை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தியது சிறப்பானது என சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர் அருண்குமார் கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மதுரையை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது.

    சென்னையில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய மதுரை சூப்பர் ஜெயன்ட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்தது. ஷிஜித் சந்திரன் 37 பந்தில் 61 ரன்னும் (3 பவுண்டரி, 5 சிக்சர்), அருண் கார்த்திக் 37 பந்தில் 55 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஆர்.சதீஷ் 2 விக்கெட்டும், யோமகேஷ், சாய் கிஷோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தலைவன் சற்குணம் 30 பந்தில் 41 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), சசிதேவ் 22 பந்தில் 30 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), அந்தோணிதாஸ் 16 பந்தில் 26 ரன்னும் (2 பவுண் டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பெற்ற 4-வது வெற்றியாகும். இதன் மூலம் ‘பிளே ஆப்’ சுற்றை நெருங்கிவிட்டது.

    இந்த வெற்றி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர் அருண்குமார் கூறியதாவது:-

    நாங்கள் சரியான முறையில் திட்டமிட்டு விளையாடினோம். எங்கள் திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டது. கேப்டன் சதீஷ் அனுபவம் வாய்ந்தவர். அவர் பின்வரிசையில் இறங்குவது நல்லது என்று கருதி அந்தோணிதாசை அவருக்கு முன்னதாக களம் இறக்கினோம்.

    மதுரை அணி ஒரு கட்டத்தில் மிகவும் சிறப்பாக விளையாடியது. 13-வது ஓவரில் நாங்கள் 3 விக்கெட்டை வீழ்த்தினோம். இது சிறப்பானது. இதன் மூலம் ஆட்டத்தை எங்கள் பக்கம் கொண்டுவர முடிந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மதுரை அணி ஒரு கட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 12-வது ஓவர் முடிவில் 116 ரன் எடுத்து இருந்தது. சதீஷ் வீசிய ஆட்டத்தின் 13-வது ஓவரில் அந்த அணி 3 விக்கெட்டை இழந்தது. முதல் பந்தில் அருண்கார்த்திக் ஆட்டம் இழந்தார். 2-வது பந்தில் ‌ஷஜித் சந்திரன் அவுட் ஆனார். கடைசிபந்தில் ஷாருக்கானை அருண் குமார் ‘ரன்அவுட்’ செய்தார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6-வது ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்சை சந்திக்கிறது. இந்த ஆட்டம் வருகிற 9-ந் தேதி திண்டுக்கல்லில் நடக்கிறது.

    நெல்லையில் இன்று நடைபெறும் 20-வது ‘லீக்’ ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-காரைக்குடி காளை மோதுகின்றன.
    Next Story
    ×