search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியினர் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட போது எடுத்த படம்
    X
    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியினர் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட போது எடுத்த படம்

    டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- காரைக்குடி காளை இன்று மோதல்

    டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சென்னையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-காரைக்குடி காளை அணிகள் மோதுகின்றன.
    சென்னை:

    டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்றிரவு (வெள்ளிக்கிழமை) அரங்கேறும் 16-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-காரைக்குடி காளை அணிகள் மோதுகின்றன.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் முறையே திருவள்ளூர் வீரன்ஸ், கோவை கிங்சை சாய்த்தது. 3-வது ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்சிடம் போராடி தோல்வி கண்டது. அதே சமயம் காரைக்குடி அணி 2 வெற்றி (திருவள்ளூர், மதுரை அணிக்கு எதிராக), 2 தோல்வி (தூத்துக்குடி, கோவைக்கு எதிராக) என்று 4 புள்ளிகளுடன் உள்ளது. இவ்விரு அணிகளும் 3-வது வெற்றியை வசப்படுத்தி புள்ளிபட்டியலில் முன்னேற வரிந்து கட்டி நிற்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

    போட்டி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீசின் சுழற்பந்து வீச்சாளர் ஜோயல் ஜோசப் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘ஒரு நேரத்தில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். இடையில் ஒரு ஆட்டத்தில் கண்ட தோல்வி பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி விடாது. தூத்துக்குடிக்கு எதிரான மோதலில் அந்த அணியை 150 முதல் 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருந்தால் வெற்றி பெற்று இருக்க முடியும். ஒரு தோல்வியால் எங்கள் அணியின் உத்வேகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. எங்களது பேட்ஸ்மேன்கள் நல்ல பார்மில் தான் இருக்கிறார்கள். ஆனால் ஆட்டத்தில் களம் காணும் போது நிலவிய சூழ்நிலையால் சோபிக்க முடியாமல் போய் விட்டது.

    கேப்டன் சதீஷ் முழங்காலில் காயம் அடைந்து வேகமாக ஓட முடியாத நிலை ஏற்பட்டதால் முந்தைய ஆட்டத்தில் தொடக்க வீரராக ஆடினார். அவரது காயத்தின் தன்மை குறித்து தெரியவில்லை. ஆனால் நாளைய (அதாவது இன்று) ஆட்டத்தில் அவர் ஆடுவார் என்று நம்புகிறேன்’ என்றார். இந்த போட்டியில் விளையாடும் எல்லோரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால் சேப்பாக்கம் மைதானத்தின் தன்மை தெரியும். காரைக்குடி காளை இங்கு முதல்முறையாக ஆடுவதில் பெரிய வித்தியாசம் எதுவும் இருக்காது’ என்றும் குறிப்பிட்டார்.

    கடந்த ஆண்டில் இவ்விரு அணிகளும் சந்தித்த ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 67 ரன்கள் வித்தியாசத்தில் காரைக்குடி காளையை தோற்கடித்து இருந்தது நினைவு கூரத்தக்கது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: ஆர்.சதீஷ் (கேப்டன்), தலைவன் சற்குணம், கோபிநாத், வசந்த் சரவணன், கார்த்திக், சசிதேவ், அந்தோணி தாஸ் ,யோமகேஷ், சாய் கிஷோர், ஜோயல் ஜோசப், அலெக்சாண்டர்.

    காரைக்குடி காளை: பத்ரிநாத் (கேப்டன்), அனிருதா, விஜயகுமார், ஸ்ரீனிவாசன், ஷாஜகான், கணபதி, ராஜ்குமார், சோனு யாதவ், சுரேஷ்பாபு, சுனில் சாம், மோகன் பிரசாத்.

    இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. 
    Next Story
    ×