search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.என்.பி.எல்.: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தூத்துக்குடி
    X

    டி.என்.பி.எல்.: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தூத்துக்குடி

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வெற்றி பெற்றது
    நெல்லை:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் நெல்லை சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் கடந்த ஆண்டு 2-வது இடம்பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், நடப்பு சாம்பியனான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும்  பலப்பரீட்சை நடத்தின

    டாஸ் வென்று முதலில் ஆடிய தூத்துக்குடி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது. அபாரமாக விளையாடிய தொடக்க வீரர் வாஷிங்டன் சுந்தர், சதம் அடித்தார். 61 பந்துகளை எதிர்கொண்ட அவர் 11 பவுண்டரி 4 சிக்சருடன் 107 ரன்கள் குவித்தார். கவுசிக் காந்தி 35 ரன்கள் எடுத்தார். சேப்பாக் சூப்பர் கில்லிஸ் தரப்பில் அலெக்சாண்டர் 2 விக்கெட்டும், யோ மகேஷ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.



    இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களம் இறங்கியது.

    தொடக்க வீரர்களாக கோபிநாத், சதீஷ் ஆகியோர் களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் 2-வது ஓவரை அதிசயராஜ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் 1 ரன்கள் எடுத்த நிலையில் கோபிநாத் க்ளீன் போல்டானார். 3-வது பந்தில் ரன்ஏதும் எடுக்காத நிலையில் சதீஷ் ரன்அவுட் ஆனார். 2 ரன்கள் எடுப்பதற்குள் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முக்கிய இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது.

    3-வது விக்கெட்டுக்கு அந்தோணி தாஸ் உடன் தலைவன் சற்குணம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. குறிப்பாக அந்தோணி தாஸ் சிறப்பான ஆடினார். அணியின் ஸ்கோர் 62 ரன்னாக இருக்கும்போது தலைவன் சற்குணம் 15 பந்தில் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

    மறுமுனையில் விளையாடிய அந்தோணி தாஸ் 27 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 43 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அப்போது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 8.4 ஓவரில் 73 ரன்கள் எடுத்திருந்தது.



    அடுத்து வந்த வசந்த் சரணவன் (8), சசிதேவ் (10) யோ மகேஷ் (7) விரைவில் வெளியேற சென்னை சேப்பாக் கல்லீஸ் அணியின் தோல்வி உறுதியானது. விக்கெட் கீப்பர் கார்த்திக் மட்டும் அவுட்டாகாமல் 35 பந்தில் 39 ரன்கள் எடுக்க சென்னை சேப்பாக் கில்லீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. இதனால் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் தூத்துக்குடி அணி தான் விளையாடிய நான்கு போட்டியிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3 போட்டியில் இரண்டில் வெற்றி பெற்று 3-வது இடத்தில் உள்ளது.
    Next Story
    ×