search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்
    X

    முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடக்கிறது.
    போர்ட் ஆப் ஸ்பெயின்:

    இங்கிலாந்தில், சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய இந்திய அணி இறுதிசுற்றில் பாகிஸ்தானிடம் மோசமான தோல்வியை தழுவியது.

    சாம்பியன்ஸ் கோப்பை முடிந்ததும், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி அங்கிருந்து நேரடியாக வெஸ்ட் இண்டீசுக்கு புறப்பட்டு சென்றது.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு அனில் கும்பிளேவின் முதல் பயணமாக வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் அமைந்தது. சரியாக ஓராண்டுக்கு பிறகு இந்திய அணி மீண்டும் அங்கு சென்றிருக்கிறது. ஆனால் இந்த முறை பயிற்சியாளர் பதவியில் கும்பிளே இல்லை. கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் பதவியை துறந்து விட்டார். இந்த விவகாரத்தை சுற்றி நிறைய சர்ச்சைக்குரிய விஷயங்கள் உலா வரும் சூழலில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுடன் மோத உள்ளது.

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடர் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படவில்லை என்றாலும் வலுவான இந்திய அணியே அனுப்பப்பட்டு இருக்கிறது.



    இந்த தொடரில் இந்திய தரப்பில் சில பரீட்சார்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் களம் இறங்க வாய்ப்பு கிடைக்காத ரஹானே, முகமது ஷமி, தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு இந்த தொடரில் நிச்சயம் ஏதாவது ஒரு ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்கும்.

    தொடக்க வீரர் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதால் ஷிகர் தவானுடன் ரஹானே அல்லது ‘இளம் புயல்’ ரிஷாப் பான்ட் ஆகியோரில் ஒருவர் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவார்கள். அதே போல் சாம்பியன்ஸ் கோப்பையில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவின் சுழற்பந்து வீச்சு சுத்தமாக எடுபடவில்லை. அவர்களில் ஒருவரை கழற்றி விட்டு ‘சைனாமேன்’ வகை பவுலர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. கும்பிளே விலகிய நிலையில், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், கேப்டனுக்கு எதிராக எதையும் சொல்லப்போவதில்லை. அதனால் கேப்டன் விராட் கோலி, ஆடும் லெவன் அணியை தனது இஷ்டத்துக்கு தேர்வு செய்வதில் எந்த தொந்தரவும் இருக்காது.

    இந்தியாவுடன் ஒப்பிடும் போது தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் கத்துக்குட்டி அணி தான். சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டி ஒன்றில் தோல்வி அடைந்தது. அந்த அணியில் இடம் பெற்றுள்ள 13 வீரர்களையும் சேர்த்தாலே அவர்கள் விளையாடிய ஒரு நாள் போட்டிகளின் மொத்த எண்ணிக்கை 213 மட்டுமே. நமது அணியில் யுவராஜ்சிங் ஒருவரே 301 ஒரு நாள் போட்டியில் விளையாடி இருக்கிறார். இதில் இருந்தே வெஸ்ட்இண்டீஸ் அணியின் அனுபவத்தை தெரிந்து கொள்ள முடியும்.

    உலக தரவரிசையில் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டதால் தான் வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு தகுதி பெறவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

    இருப்பினும் எவின் லீவிஸ், ரோஸ்டன் சேஸ், விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப், ஜோனதன் கார்டர், கீரன் பவெல் ஆகியோரிடம் நல்ல பேட்டிங் திறமை இருக்கிறது. அதனால் இந்திய அணிக்கு கடும் சவால் அளிக்க முயற்சிப்பார்கள்.

    பெரும்பாலும் இங்குள்ள ஆடுகளங்களின் தன்மை மெதுவாக (ஸ்லோ) இருக்கும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

    இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அந்த நாட்டு அணிக்கு எதிராக நேரடி ஒருநாள் தொடரில் ஆடுவது இது 8-வது முறையாகும். இதில் 4 தொடரை வெஸ்ட் இண்டீசும், 3 தொடரை இந்தியாவும் கைப்பற்றியுள்ளன. கடைசி இரு தொடர்களில் (2009-ம் ஆண்டில் 2-1, 2011-ம் ஆண்டில் 3-2) இந்தியாவின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. இந்த தொடரிலும் அது தொடரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.



    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ஷிகர் தவான், ரஹானே அல்லது ரிஷாப் பான்ட், விராட் கோலி (கேப்டன்), டோனி, யுவராஜ்சிங், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், அஸ்வின் அல்லது குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், முகமது ஷமி அல்லது உமேஷ் யாதவ்.

    வெஸ்ட் இண்டீஸ்: கீரன் பவெல், எவின் லீவிஸ், ஷாய் ஹோப், ஜோனதன் கார்டர், ஜாசன் முகமது, ரோஸ்டன் சேஸ், ரோவ்மன் பவெல், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ஆஷ்லே நர்ஸ் அல்லது தேவந்திர பிஷூ, மிக்யூல் கம்மின்ஸ், அல்ஜாரி ஜோசப்.

    இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டென்3 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 
    Next Story
    ×