என் மலர்

  செய்திகள்

  வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பாவ்டிஸ்டா.
  X
  வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பாவ்டிஸ்டா.

  சென்னை ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் மெட்விதேவ் - பாவ்டிஸ்டா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை ஓபன் டென்னிஸ் திருவிழாவில் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் மெட்விதேவ், ஸ்பெயினின் பாவ்டிஸ்டா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
  சென்னை:

  22-வது சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஒற்றையர் பிரிவில் நடந்த ஒரு அரைஇறுதியில் இஸ்ரேலின் துடி செலாவும், ரஷியாவின் டேனில் மெட்விதேவும் பலப்பரீட்சையில் இறங்கினர்.

  அனுபவம் வாய்ந்த துடிசெலா முதலாவது செட்டில் 7-வது கேமை பிரேக் செய்ததுடன் அந்த செட்டையும் தனக்குரியதாக மாற்றினார். அடுத்த செட்டில் அவருக்கு மெட்விதேவ் கடும் சவால் அளித்தார். இருவரும் தலா இரு கேமில் சர்வீசை பிரேக் செய்ததால் 6-6 என்று சமநிலையை அடைந்தது. இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட டைபிரேக்கரில் மெட்விதேவின் கை ஓங்கியது.

  இதனால் ஆட்டம் 3-வது செட்டுக்குள் நகர்ந்தது. இந்த செட்டில் முதல் கேமிலேயே துடிசெலாவின் சர்வீசை மெட்விதேவ் முறியடிக்க அவருக்கு புது நம்பிக்கை பிறந்தது. அதில் இருந்து மளமளவென புள்ளிகளை குவித்த மெட்விதேவ், துடி செலாவின் போராட்டத்துக்கு முடிவு கட்டினார்.

  2 மணி 6 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த மோதலில் மெட்விதேவ் 4-6, 7-6 (7-2), 6-2 என்ற செட் கணக்கில் துடிசெலாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். உலக தரவரிசையில் 99-வது இடம் வகிக்கும் 20 வயதான மெட்விதேவ், ஏ.டி.பி. வகை போட்டி ஒன்றில் இறுதிசுற்றை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.

  மற்றொரு அரைஇறுதியில் பாவ்டிஸ்டா அகுத் (ஸ்பெயின்), பெனோய்ட் பேரை (பிரான்ஸ்) எதிர்கொண்டார். முதல் 6 கேம்களில் இருவரும் தங்களது சர்வீசை மட்டுமே புள்ளியாக மாற்றினர். 8-வது கேம் தான் திருப்புமுனையாக அமைந்தது. அது பெனோய்ட் பேரின் சர்வீஸ். அதில் அவர் பந்தை வலையில் அடித்தும், வெளியே தள்ளியும் அடுத்தடுத்து தவறுகள் இழைக்கவே, பாவ்டிஸ்டா அகுத் அந்த சர்வீசை பிரேக் செய்ததுடன், செட்டையும் சொந்தமாக்கினார்.

  2-வது செட்டிலும் தொடக்கத்தில் இருந்தே பாவ்டிஸ்டா அகுத் ஆதிக்கம் செலுத்தினார். எதிராளியின் 1-வது மற்றும் 3-வது கேம்க்கு உரிய சர்வீசை பாவ்டிஸ்டா எளிதில் தகர்த்தெறிந்தார். இதனால் டென்ஷன் ஆன, பெனோய்ட் பேர் நிதானத்தை இழந்தார். கோபத்தில் பந்தை பலகையில் அடித்தார். தேவையில்லாமல் பேட்டை தரையில் அடித்தார். இது போன்ற அவரது பலவீனங்களை பாவ்டிஸ்டா சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, இந்த செட்டிலும் பெனோய்ட் பேரை அடக்கினார்.

  68 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் பாவ்டிஸ்டா அகுத் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பெனோய்ட் பேரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 3-வது முறையாக சென்னை ஓபனில் அரைஇறுதியை தாண்ட முடியாமல் (ஏற்கனவே 2013, 2016-ம் ஆண்டிலும் அரைஇறுதியில் தோற்று இருந்தார்) ஏமாற்றத்துடன் பெனோய்ட் பேர் நடையை கட்டினார்.

  அதே சமயம் 2013-ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் தோற்று இருந்த தரவரிவசையில் 14-வது இடத்தில் உள்ள 28 வயதான பாவ்டிஸ்டா அகுத் இந்த முறை சென்னை ஓபனை முதல்முறையாக ருசிக்க பிரகாசமான வாய்ப்பு உருவாகியுள்ளது.

  இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.05 மணிக்கு நடக்கும் இறுதி ஆட்டத்தில் பாவ்டிஸ்டா அகுத்- மெட்விதேவ் மோதுகிறார்கள். இருவரும் சர்வதேச போட்டியில் நேருக்கு நேர் சந்திக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.
  Next Story
  ×