search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் கம்பீருக்கு மீண்டும் வாய்ப்பு?
    X

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் கம்பீருக்கு மீண்டும் வாய்ப்பு?

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. அனுபவ வீரர் கவுதம் கம்பீருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
    மும்பை :

    5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக அலஸ்டயர் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இன்று இந்தியாவுக்கு வருகை தருகிறது. வங்காளதேச தொடரை முடித்து விட்டு அங்கிருந்து நேரடியாக மும்பைக்கு வந்து இறங்கும் இங்கிலாந்து அணிக்கு பயிற்சி ஆட்டம் எதுவும் கிடையாது. 5-ந்தேதி மும்பையில் உள்ள சி.சி.ஐ கிளப்பில் பயிற்சி மேற்கொள்ளும் இங்கிலாந்து அணியினர் பிறகு முதலாவது டெஸ்ட் நடக்கும் ராஜ்கோட்டுக்கு (நவம்பர் 9-13) புறப்படுகிறார்கள். எஞ்சிய 4 டெஸ்டுகள் முறையே விசாகப்பட்டினம் (நவ.17-21), மொகாலி (நவ.26-30), மும்பை (டிச.8-12), சென்னை (டிச.16-20) ஆகிய இடங்களில் நடக்கிறது.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் மும்பையில் கூடி அணியை தேர்வு செய்கிறார்கள்.

    அண்மையில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி ‘நம்பர் ஒன்’ இடத்தை கைப்பற்றியது. இந்த தொடரின் போது காயமடைந்த பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல், வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் ஆகியோர் அதன் பிறகு எந்த போட்டியிலும் ஆடவில்லை. அவர்கள் இன்னும் உடல்தகுதியை நிரூபிக்கவில்லை. எனவே அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று தெரிகிறது. இதே போல் விரலில் காயத்தால் அவதிப்படும் ஷிகர் தவானுக்கும் இடம் கிடைப்பது சந்தேகம் தான்.

    அதே சமயம் 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இந்தூரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் களம் கண்ட மூத்த வீரர் கவுதம் கம்பீர் அதில் அரைசதம் அடித்ததுடன், சில தினங்களுக்கு முன்பு ரஞ்சி கிரிக்கெட்டில் ஒடிசாவுக்கு எதிராக 147 ரன்களும் விளாசி இருப்பதால் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிக்குன் குனியா காய்ச்சலால் நியூசிலாந்து தொடரை தவற விட்ட வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா அதில் இருந்து குணமடைந்து ரஞ்சி போட்டியில் விளையாடினார். இதனால் அவர் தேசிய அணிக்கு திரும்புவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. மற்றபடி நியூசிலாந்து தொடரில் விளையாடிய இந்திய அணியில் எந்த மாற்றமும் இருக்காது.

    சுழற்பந்து வீச்சு தாக்குதலுக்கு அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா ஆகியோருடன் ஜெயந்த் யாதவின் பெயரும் பரிசீலிக்கப்படலாம். இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படும் வீரர்கள் 5-ந்தேதி ராஜ்கோட்டுக்கு செல்கிறார்கள். அங்கு டெஸ்ட் நடப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×