search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி20 கிரிக்கெட்: மேக்ஸ்வெல் அதிரடி சதத்தால் ஆஸி. 263 ரன்கள் குவித்து உலக சாதனை
    X

    டி20 கிரிக்கெட்: மேக்ஸ்வெல் அதிரடி சதத்தால் ஆஸி. 263 ரன்கள் குவித்து உலக சாதனை

    இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 263 ரன்கள் குவித்து உலக சாதனைப் படைத்துள்ளது.
    இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் பல்லேகெலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணியின் வார்னர், மேக்ஸ்வெல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் 4.5 ஓவரில் 57 ரன்னாக இருக்கும்போது வார்னர் 16 பந்தில் 28 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.

    அடுத்து கவாஜா களம் இறங்கினார். மறுமுனையில் மேக்ஸ்வெல் வாணவேடிக்கை நிகழ்த்தினார். பந்தை பவுண்டரிக்கும, சிக்சருக்கும் பறக்க விட்டார். 27 பந்தில் அரைசம் கடந்த மேக்ஸ்வெல் 49 பந்தில் 11 பவுண்டரி, 5 சிக்சருடன் சதம் அடித்தார். டி20 கிரிக்கெட்டில் மேக்ஸ்வெல்லின் முதல் சதம் இதுவாகும்.

    கவாஜா 22 பந்தில் 36 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அடுத்து மேக்ஸ்வெல் உடன் ட்ராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் இலங்கையின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. இந்த ஜோடி கடைசி 40 பந்தில் 109 ரன்கள் குவித்தது. ஹெட் 18 பந்தில் 45 ரன்கள் குவித்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். மேக்ஸ்வெல் 65 பந்தில் 14 பவுண்டரி, 9 சிக்சருடன் 145 ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருக்க, ஆஸ்திரேலியா 20 ஓவரகள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் குவித்தது.

    இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற பெருமையை பெற்றது. இதற்கு முன் இலங்கை அணி, இந்தியாவிற்கு எதிராக 260 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×