search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்னை ஆல் ரவுண்டராகவே மதிப்பிடுகிறேன்; 5-வது இடத்திற்கும் தயார்- அஸ்வின் சொல்கிறார்
    X

    என்னை ஆல் ரவுண்டராகவே மதிப்பிடுகிறேன்; 5-வது இடத்திற்கும் தயார்- அஸ்வின் சொல்கிறார்

    113 ரன்னும், 7 விக்கெட்டும் வீழ்த்தியதால்தான் நான் ஆல் ரவுண்டர் அல்ல; ஏற்கனவே நான் ஆல் ரவுண்டர்தான் என்று அஸ்வின் கூறியுள்ளார்.
    இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் டெஸ்ட் தொடங்கும் முன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஐந்து பேட்ஸ்மேன்கள், ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவதாகக் கூறினார். இதனால் பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படும். அத்துடன், விக்கெட் கீப்பர் சஹா மற்றும் அஸ்வின் ஆகியோர் பேட்டிங்கில் அதிக பங்களிப்பை வழங்க வேண்டும் என்று கூறினார்.

    அதன்படி முதல் டெஸ்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அஸ்வின் 6-வது நபராக களம் இறங்கினார். இறங்கியதுடன் கேப்டனின் நம்பிக்கையை வீணடிக்காமல் 253 பந்துகளை சந்தித்து 113 ரன்கள் குவித்தார். அத்துடன் 2-வது இன்னிங்சில் 83 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்கள் அள்ளினார்.

    இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அஸ்வின் இந்த போட்டியின் மூலம் ஆல் ரவுண்டராக மாறியுள்ளார் என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஆனால், நான் எப்போதுமே ஆல் ரவுண்டர்தான் என்று அஸ்வின் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அஸ்வின் கூறுகையில் ‘‘ஆன்குவா தொடரில் 6-வது நபராக களம் இறங்கியது ஆச்சர்யம் அளிக்கிறது. போட்டி நடந்த நாள் காலையில் என்னிடம் விராட் கோலி வந்து பேசினார். அப்போது நீங்கள்தான் 6-வது நபராக களம் இறங்க வேண்டும் என்றார். அவர் சொன்னதும் நான் உண்மையிலேயே அதை விரும்பினேன். உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் உங்களை 6-வது இடத்தில் களம் இறக்க விரும்புகிறோம். இந்த மாற்றம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் என்றார். இதனால் 6-வது இடத்தில் களம் இறங்கி சிறப்பாக விளையாடி, அணிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினேன்.

    நான் எப்போதும் என்னை ஒரு ஆல் ரவுண்டராகவே மதிப்பிடுகிறேன். ஆல் ரவுண்டராக என்னை நான் பார்க்கவில்லை என்பதை ஏற்கமாட்டேன். 8-வது இடத்தில் களம் இறங்குவதை விட, நான் ஏற்கனவே 6-வது இடத்தில் களம் இறங்கி விளையாடி இருந்தால் இன்னும் அதிகப்படியான சதம் அடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆகவே நான் இந்த இடத்தை நல்ல முறையில் தொடங்கியுள்ளேன்.

    6-வது இடத்தில் களம் இறங்குவது போல், ஐந்தாவது இடத்திலும் களம் இறங்கி என்னால் சமாளிக்க முடியும். இங்கிருந்து பலன்மேல் பலன் பெற்று என்னால் மேலே செல்லமுடியும் என்று நம்புகிறேன்.

    துணைக் கண்டத்தில் நான் ஐந்து விக்கெட்டுக்களுக்கு மேல் பல முறை எடுத்துள்ளேன். ஆசியாவை விட்டு வெளியே ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்த வேண்டும் என்று விரும்பினேன். தற்போது அது நடந்துள்ளதால் அதிக மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்றார்.
    Next Story
    ×