search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பிரிந்த தம்பதிகளை சேர்ந்து வாழ வைக்க உகந்த காலம் எது?- பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி
    X

    பிரிந்த தம்பதிகளை சேர்ந்து வாழ வைக்க உகந்த காலம் எது?- பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி

    • திருமணம் முடிந்து 1 மாதம் முதல் அதிகபட்சம் 3 மாதத்திற்குள் ஜோதிடரையும் வக்கீலையும் அணுகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.
    • திருமண காலங்களில் அஷ்டம சனி நடந்தால் மற்றவருக்கு அதனால் பாதிப்பு இல்லாமல் இருத்தல் உத்தமம் ஆகும்.

    இன்று சமுதாயத்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளில் தம்பதியினரின் கருத்து வேறு பாடும் ஒன்றாகும். வாழவும் முடியாமல் மீளவும் முடியாமல் 19 வயது முதல் வயது வரம்பின்றி திருமண வாழ்க்கையில் மன வேதனையை அனுபவிக்கிறார்கள். திருமணம் முடிந்து 1 மாதம் முதல் அதிகபட்சம் 3 மாதத்திற்குள் ஜோதிடரையும் வக்கீலையும் அணுகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. அது மட்டுமா? 40 வருடம் இல்லற வாழ்வில் ஆதர்சன தம்பதியாக வாழ்ந்து பேரன், பேத்தி எடுத்தவர்கள் கூட முதுமையில் பிரிந்து வாழ விரும்புகிறார்கள்.

    ஒரு குறித்த வயது வரை பெற்றோருடன் வாழும் மனிதன் தன் வாழ்வின் கடைசி நாள்வரை இணைந்து வாழ்வது, வாழ விரும்பவது வாழ்க்கை துணையுடன் மட்டுமே. மனிதர்களின் தனிமை உணர்வை வாழ்க்கைத் துணையால் மட்டுமே நீக்க முடியும். மனித வாழ்வில் மிகக் கொடூரமான அத்தியாயம் என்பது பிரிந்து வாழ்வது மற்றும் தனிமை. வாழ்க்கை துணையின் இறப்பு, விவகாரத்து போன்ற காரணங்கள் இனி சேர்ந்தே வாழ முடியாது என்ற நிலை வரும் போது அடுத்த கட்டத்தை நோக்கி அடி எடுத்து வைக்கும் சிந்தனை தோன்றும்.. கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி பிரிந்து வாழும் போது ஏற்படும் தனிமை வாழ்கையை நரகமாக்குகிறது. வாழ்வின் இன்பமான நாட்களை நினைவுகளை அசை போட்டு வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் இல்லற சிறையில் கைதியாக வாழ்கிறார்கள். மறுபடியும் இணைந்து வாழ்வோமா? என்ற கேள்விக்குறியுடன் பலரின் வாழ்க்கை தொடர்கிறது. பல இடங்களில் தம்பதிகள் விவகாரத்தும் கொடுக்காமல், சேர்ந்தும் வாழாமல் இரண்டும் கெட்டான் நிலையிலேயே வாழ்கிறார்கள். மைசூர் மகாராஜா பேலஸ் போல் அரண்மனை போன்ற வீட்டில் வாழ்பவர்கள் கூட பேசிக்கொள்ளாமல் ஆளுக்கொரு ரூமில் தனியாக மனம் ஒட்டாமல் வாழ்கிறார்கள். தற்காலத்தில் பணம் சம்பாதிப்பதைவிட ஒருவரின் மனதில் இடம் பிடித்து ஆதர்சன தம்பதியராய் வாழ்வது மிகக் கடினமாக இருக்கிறது.

    திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி பிரிந்து வாழ காரணம் என்ன? அவர்களை சேர்த்து வைக்க முடியுமா? தம்பதிகளிடையே ஏற்படும் பிரிவினை, தனிமைக்கான காரணம், தீர்வு குறித்த ஜோதிட ரீதியான ஆய்வே இந்தக் கட்டுரை.

    கணவன் மனைவி பிரிவினை ஏற்பட ஜோதிட ரீதியான காரணங்கள்:

    ஜோதிடத்தின் ஏழாமிடம் எனும் களத்திர ஸ்தானமே ஒரு பெண்ணுக்கு எத்தகைய கணவன் அமையும் என்பதை தெரிவிக்கும் இடமாகும். அதன்படி ஒரு பெண்ணின் ஜாதகத்தின் களத்திர ஸ்தானத்திற்கு சூரியன், குரு, புதன் சம்பந்தம் பெற உயர்குடியில் பிறந்த கணவனும், சந்திரன் சம்பந்தம் பெற அன்பு, பண்பும் கொண்ட கணவனும், செவ்வாய் சம்பந்தம் இருந்தால் முன்கோபமும், அவசர புத்தியும் கொண்ட கணவனும், சுக்கிரன் நிற்க காரகோ பாவகநாஸ்தி என்றாலும் கூட சுக்கிரன் சம்பந்தம் பெற அன்பான மனைவியை நேசிக்க கூடிய கணவனும்

    சனி சம்பந்தம் பெற மந்த புத்தியும், அதிகமான துக்கம், தூக்கம் நிறைந்த வயோதிக கணவரையும், ராகு இருந்தால் அடிமைத் தொழிலோ, பாவத் தொழிலோ செய்து கூட குடும்பத்தை காக்கும் கணவனும், கேது இருந்தால் தன் சுயபுத்தியால் நவீன தொழில் செய்து குடும்பம் நடத்தும் கணவனும் அமைவார். இது ஒருவருடைய பிராரப்த கர்மாவால் இணைக்கப்படும் கர்ம வினைத் தொடர்ச்சி என்பதால் நம் பிராப்தம் என்ன என்பதை அறிந்து அதற்கு பொருத்தமான வரன், வதுவுடன் இணைந்து வாழும் போது பெரிய மன வேதனை வராது.

    பெண்கள் ஜாதகத்தில் களஸ்திர ஸ்தானமான ஏழாமிடத்திலும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாமிடத்திலும் குரு சுக்கிர இணைவோ, குரு சந்திரன் இணைவோ இருந்து, ஆண்கள் ஜாதகத்தில் இரண்டு, ஏழாமிடத்தில் சுக்கிரன் கேதுவோ, சுக்கிரன் ராகுவோ இருந்தால் இல்லற வாழ்வை சீர்குலைப்பது மட்டுமல்லாமல் பிரிவையும், வேதனையும் தருகிறது என்பதால் இந்த அமைப்புள்ள ஜாதகத்தை இணைப்பதில் கவனம் தேவை. தவறான திருமணப் பொருத்தமே பலரின் பிரிவினைக்கு காரணமாக அமைகிறது. ஒருவரின் ஏழாமிடம் திருமண வாழ்க்கையில் பிரிவினையைத் தரும் விதத்தில் இருந்தால் மிக கவனமாக பொருத்தம் பார்க்க வேண்டும்.

    தம்பதிகள் இருவரது ஜாதகத்திலும் ஜாதகரை வழிநடத்ததும் உயிர் மற்றும் உடலாக செயல்படக்கூடிய லக்னம், ராசி மற்றும் அதன் அதிபதிகள் பலம் இழக்காமல் திரிகோண சம்பந்தம் பெற வேண்டும். திரிகோண சம்பந்தம் இல்லாவிட்டாலும் 6,8,12 ஆக இருக்கக் கூடாது.

    திருமணம் தொடர்பான பாவங்களான ஒன்றாம் இடமான லக்னம், இரண்டாமிடமான குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானமான ஏழாமிடம் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம்மிடம் ஆகிய ஸ்தானங்களும், அதன் அதிபதிகளும் வலிமையுடன் இருக்க வேண்டும். இந்த ஸ்தானங்களில் பாவ கிரகங்களோ அல்லது மறைவு ஸ்தான அதிபதிகளின் சம்பந்தம் இல்லாமல் இருக்க வேண்டும். அத்துடன் அதன் அதிபதிகள் நீசம், பகை, வக்கிரம், மறைவு, அஸ்தமனம் அடையாமல் இருக்க வேண்டும்.மிகக் குறிப்பாக ஏழாம் அதிபதி வக்ரம் பகை, நீசம், அஸ்தமனம் பெறாமல் இருக்க வேண்டும்.

    6,8,12-ம் அதிபதிகளின் தசாபுத்தி காலங்களில் பிரிவினை ஏற்படுவதை தவிர்க்க தசா சந்தி பொருத்தம் மிகவும் முக்கியம். ராகு, கேதுக்களின் தசாபுத்தி நடந்தாலும் மிக கவனமாக பொருத்த வேண்டும்.

    7-ம் அதிபதியின் சாரநாதன் வலிமையுடன் இருக்க வேண்டும். பெண் ஜாதகத்தில் செவ்வாய் ராகு,கேது சம்பந்தம் ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் ராகு கேது சம்பந்தம் இல்லாமல் இருக்க வேண்டும். பெண் ஜாதகத்தின் சுக்கிரனுக்கும் ஆண் ஜாதகத்தின் செவ்வாய்க்கும் சம்பந்தம் இருக்க வேண்டும்.

    தம்பதிகளின் ஜீவன காரகன் குருவும், கர்ம காரகன் சனியும் மற்றவருக்கு பொருந்தும் விதமாக அமையும் போது திருமணத்திற்கு பிறகு பொருளாதார நெருக்கடி வராது. ராகு/கேது, செவ்வாய் தோஷத்தால் கருத்து வேறுபாடு வராமல் பொருத்த வேண்டும். சுக்கிரன், சந்திரன் சம்பந்தம் இருப்பவர்களுக்கு மாமியாரால் டார்ச்சர் இருக்கும். இது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும். மாமியாரால் பிரச்சினையை அனுபவிப்பவருடைய எல்லா ஜாதகத்திலும் சுக்கிரன், சம்பந்தம் இருக்கும். இதற்கு தம்பதியினரின் சுக்கிரன், சந்திரன் ஈர்க்கும் விதமாக பொருத்தம் செய்ய வேண்டும்.

    திருமண காலங்களில் அஷ்டம சனி நடந்தால் மற்றவருக்கு அதனால் பாதிப்பு இல்லாமல் இருத்தல் உத்தமம் ஆகும். தம்பதிகள் இருவருக்கும் புத்திர தோஷமும், தசவித பொருத்தத்தில் ராசிப் பொருத்தம்,ரஜ்ஜு பொருத்தம், யோனிப் பொருத்தம், மகேந்திரப் பொருத்தம் மிக முக்கியம். குறைந்த பட்சம் இந்த 4 பொருத்தம் இல்லாத ஜாதகங்களை பொருத்தக்கூடாது. அத்துடன் சூட்சம கட்டப் பொருத்தம் மிக முக்கியம்.

    தம்பதியினரின் பிரச்சினையை உலவியல் ரீதியாக ஆய்வு செய்யும் போது பல காரணங்கள் உண்மையான பிரச்சினையாகவும் சில காரணங்கள் மிகவும் அநர்த்தமாகவும் இருக்கிறது. அவை எதனால் என்றும் பார்க்கலாம்.

    ஒரு வீட்டிற்கு ஒரே குழந்தை இருப்பதே முதல் காரணம். ஒரு குழந்தையை அளவு கடந்த அன்பினை செலுத்தி வளர்த்து விடுகிறார்கள். அந்த குழந்தை தனக்கே கட்டுப்பட்டு தன் விருப்ப படியே இருக்க வேண்டும் என்ற பெற்றோர்களின் எண்ணம் பல குழந்தைகளின் திருமண வாழ்வை அழிக்கிறது. சம்பந்திகளின் கருத்து வேறுபாடு தம்பதியினரின் நெருக்கத்தை குறைக்கிறது. விட்டுக் கொடுத்து வாழும் தன்மை குறைவதால் சிறிய விஷயத்தை பெரியதாக்கி தம்பதியினரை பல பெற்றோர்கள் பிரித்து விடுகின்றனர். திருமணத்திற்கு முன்பு சம்பந்திகளிடம் கருத்து வேறுபாடு வந்தால் திருமணத்தை ரத்து செய்வது திருமணத்திற்கு பிறகு தம்பதியினரை வாழவிடாமல் செய்வதைவிட உத்தமம். திருமணமாகி 1 மாதம் அதிகபட்சம் 3 மாதத்திற் கெல்லாம் ஜோதிடரையும் நீதிமன்றத்தையும் அணுகுபவர்கள் முதலில் கூறும் பிரச்சினை சம்பந்திகள் பிரச்சினைதான். தம்பதியினர் மன மகிழ்ச்சியுடன் இருந்தால் மட்டுமே இல்வாழ்கை இனிமையாக இருக்கும். பெற்றோர்களின் ஈகோ தம்பதியினருக்கு நிம்மதியின்மையை தருகிறது.

    தற்காலத்தில் ஆண், பெண் இருவரும் வேலைக்கு சென்றால் மட்டுமே பொருளாதார நெருக்கடி இல்லாமல் இருக்கும் என்ற நிலை இருப்பதால் தம்பதிகள் இருவருமே வேலைக்கு செல்கிறார்கள். இருவருக்கும் ஆண், பெண் நண்பர்கள் அதிகமாக இருக்கிறார்கள். தம்பதிகள் தங்களுக்குள் நல்லிணக்கம் ஏற்பட்ட பிறகு தங்களுடைய நண்பர்களை வாழ்க்கை துணைக்கும் குடும்பத்திற்கும் அறிமுகம் செய்வது உத்தமம். திருமணத்திற்கு முன்பே நண்பர்களை அறிமுகம் செய்து வீண் வதந்தி, பிரச்சினைகளை தவிர்த்தால் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். அத்துடன் ஆணுக்கு வருமானம் அதிகமாகவும் பெண்ணுக்கு வருமானம் குறைவாகவும் இருந்தால் நல்லது. ஆணுக்கு வருமானம் குறைவு அல்லது வேலையே இல்லாமல் திருமணம் செய்யும் போது ஒரிரு மாதத்தில் பிரச்சினை வந்துவிடுகிறது. இது தம்பதிகளுக்கு ஈகோ பிரச்சினை வந்து மற்றவரை அடக்க முயல்கிறார்கள்.

    பொருந்தாத இரு ஜாதகங்களை இணைத்து தரும் படி ஜோதிடரை நிர்பந்தம் செய்தல் கூடாது. இரு குடும்பத்தின் தொழில், தகுதி ஒத்து போகும் போது திருமண பொருத்தத்தை பெரிதாக கருதாமல் திருமணம் நடந்த பிறகு வருந்தி பிரயோ சனம் இல்லை.

    ஆண் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் அமர்ந்த இடத்தில் பெண் ஜாதகத்தில் சனி இருப்பதும் பெண் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் அமர்ந்த இடத்தில் ஆண் ஜாதகத்தில் சனி இருப்பதும் சிறப்பில்லை. இந்த அமைப்பு இருந்தால் திருமணத்திற்கு பின் தொழில் வேலையில் பாதிப்பு ஏற்பட்டு, ஜாதகனுக்கு கையில் பணம் தங்காது , சுப மங்கலப் பொருட்கள் சேராது, , குடும்பத்தில் பிரிவினை ஏற்படும், சரியான தூக்கம் வராது.

    6, 7-ம் அதிபதி ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால் திருமணத்தில் தடை ஏற்படும்.அதிர்ஷ்ட வசமாக திருமணம் நடந்தாலும், (எத்தனை திருமணம் நடந்தாலும்) அத்தனையும் தோல்வியில் முடியும்.

    ஜனன கால ஜாதகத்தில் 2, 7-ம் பாவகம், அதிபதிகள் 6,8-ம் அதிபதிகளுடன் சம்பந்தம் பெறும் போது விவகாரத்து ஏற்படும்.

    2, 7-ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறும் வக்ர கிரகங்கள் பிரிவினையை தரும். 2, 7-ம் பாவகம், அதிபதிகள் 12-ம் பாவகம், அதிபதிகளுடன் சம்பந்தம் பெறும் போது பிரிவினை ஏற்படுகிறது. லக்ன சுப வலுப் பெற்றவர்களுக்கு 12-ம் அதிபதி, 12-ல் நின்ற கிரகங்களின் அந்தர காலங்களில் சுபமாகவோ/அசுபமாகவோ குறுகிய பிரிவினை ஏற்படுகிறது. 12-ம் அதிபதி குறுகிய கால தசை நடத்தும் கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், கேது போன்ற கிரகங்களாக இருந்தால் பாதிப்பும் குறுகிய காலமாகவே இருக்கிறது. நீண்ட காலம் தசை நடத்தும் குரு, சனி, ராகு, புதன், சுக்கிர தசைகள் வாழ்நாள் முழுவதையும் பிரிவினையுடனே கழிக்கச் செய்கிறது. லக்னம் வலிமை இழந்தவர்களில் பலர் வாழ்க்கை துணையுடன் சேருவோமா? என்ற சந்தேகத்துடன் ஜோதிடரை அணுகுகிறார்கள்.

    ஜோதிட ரீதியான தீர்வு

    பெண்கள் ஜாதகத்தின் ஜனன சுக்கிரனுக்கு கோச்சார செவ்வாய் சம்பந்தம் பெறும் போதும் ஜனன 7-ம் அதிபதிக்கு கோச்சார 5-ம் அதி பதிக்கு சம்பந்தம் பெறும் போதும் சேர்ந்து வாழும் மன நிலையும் ஈர்ப்பும் உருவாகும் காலம். ஆண் ஜாத கத்தின் ஜனன செவ்வாய் அல்லது குருவுக்கு கோச்சார குரு அல்லது சுக்கிரன் சம்பந்தம் பெறும் போதும் ஜனன 7ம் அதிபதி கோச்சார 5-ம் அதிபதி சம்பந்தம் பெறும் போதும் முயற்சி செய்தால் நல்ல தீர்வு கிடைக்கும். கோச்சார குரு 2, 7-ம் அதிபதியுடன் சம்பந்தம் பெறும் போதும் சேர்ந்து வாழும் மனநிலை உருவாக்கும். சில தம்பதியினர் குழந்தை பிறந்த பிறகு பிரியும் நிலை ஏற்படும். குழந்தை பிறந்த பிறகு பிரித்தவர்கள் குழந்தையின் 9-ம் அதிபதிக்கு கோச்சார குரு சம்பந்தம் பெறும் காலத்தில் சேரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

    பரிகாரம்

    திருச்செங்கோடு அர்த்தநாதீஸ்வரர் வழிபாடும் சங்கரன் கோவில் சங்கர நாராயணர், கோமதியம்மன் வழிபாடும் கைமேல் பலன் தரும்.

    Next Story
    ×