search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கண்ணதாசனின் கண்ணீர் கடிதமும் காமராஜர் நினைவிடத்தில் ஏற்றிய கற்பூரக் கவிதையும்
    X

    கண்ணதாசனின் கண்ணீர் கடிதமும் காமராஜர் நினைவிடத்தில் ஏற்றிய கற்பூரக் கவிதையும்

    • சொல்ல முடியாத சோகங்களுக்கு தனியாக உட்கார்ந்து அழுவது ஒன்றுதான் பரிகாரம்.
    • திரண்டு வந்த மக்களின் கண்களில் புரண்டு வந்த கண்ணீர் வெள்ளத்தில் சென்னை மாநகரமே நனைந்து கொண்டிருக்கிறது.

    தொழுதற்குரிய ஒரு தலைவனின் தோலும், எலும்பும் சாம்பலாகியிருக்கும் நேரத்தில் தொலை தூரத்தில் இருந்து (மலேசியாவில் இருந்து) எனது எழுதுகோலில் கண்ணீரை நிரப்பி இக்கடிதத்தை எழுதுகிறேன்.

    ரத்தம் வழிந்து கொண்டிருக்கும் என் இதயத்தில் அந்த சுத்தத் தலைவனின் சுந்தர ரூபம் மட்டுமே தெரிகிறது. ஒட்டு மொத்த தமிழகமே சென்னையில் வந்து சங்கமித்திருக்கும் அந்த சோகக் காட்சிகள் எனது கற்பனையில் விரிகிறது. பூவினங்கள் பொறுமுகின்றன. புள்ளினங்கள் புரள்கின்றன. ஐயோ ஆவினங்கள் அரற்றுகின்றன. மரம், செடி, கொடிகள் அனைத்தும் மரண கீதம் இசைத்துக் கொண்டிருக்கின்றன.

    திரண்டு வந்த மக்களின் கண்களில் புரண்டு வந்த கண்ணீர் வெள்ளத்தில் சென்னை மாநகரமே நனைந்து கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் அருகில் இருக்க முடியவில்லையே. இப்படி மலேசியாவில் வந்து மாட்டிக் கொண்டேனே என்ற துயரம் என்னை வாட்டி வதைக்கிறது.

    அழுவாறை ஆற்றுவார் யார்?

    தேம்புவாரைத் தேற்றுவார் யார்?

    காந்தியத்தின் கடைசித்தூண் சாய்ந்து விட்டது. உண்மைதான். அது காட்டிய பாதையும், ஊட்டிய உணர்வும் அப்படியே தான் இருக்கிறது. அதை மாற்ற எவராலும் முடியாது. எல்லோரும் அழுது கொண்டிருந்தால் யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? எனவே அவன் தொட்டுச் சென்ற கொள்கைக் கொடியை ஏந்திப் பிடிப்பதும்தான் நமது கட்டாயக் கடமையாகும். அதைச் செய்து முடிக்க உறுதி ஏற்பது ஒன்றுதான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

    அடிக்கவும், அணைக்கவும் தெரிந்த தந்தையை இழந்து தவிக்கிறேன். அவரது பிரிவும், மறைவும், நான் அனாதையாகி விட்டது போல் ஓர் உணர்வை ஏற்படுத்துகிறதே.

    மரணத்தால் ஏற்படுகிற துயரத்தை, மறுநாளோ அல்லது அதற்கு அடுத்த நாளோ மறந்து விடக் கூடிய சக்தி எனக்குண்டு. ஆனால் நான் நேசித்து, பூசித்த தலைவனின் மரணத்தை மறக்க முடியவில்லையே. துயரம் என்னைத் துளைத்தெடுக்கிறதே.

    பெற்றோரை இழந்த போதும், உற்றார் உறவினரை இழந்த போதும், நண்பர்களை இழந்த போதும் ஏற்பட்ட துயரங்களில் இருந்து என்னால் ஆறுதல் பெற முடிந்தது. ஆனால் எனது தலைவனை இழந்த துயரத்தில் இருந்து என்னால் விடுபட முடியவில்லையே. அரங்கத்தில் ஒருவனாகவும், அந்தரங்கத்தில் வேறு ஒருவனாகவும் வாழுகிற சுரங்க உள்ளங்களுக்கு மத்தியிலே திறந்த புத்தகமாக வாழ்ந்தவனல்லவா என் தலைவன்.

    தமிழகத்தில், தேசிய பாரம்பரியத்தால் கட்டப்பட்ட மணி மண்டபத்தின் கடைசித் தூனும் சாய்ந்து விட்டால் இந்த நாட்டை, மக்களை யார்தான் காப்பாற்றுவது? என்ற கவலையில் என் உள்ளமல்லவா உடைந்து கிடக்கிறது. இதுவரை என்ன செய்தோம்? இனிமேல் என்ன செய்யப் போகிறோம்? என்ற கேள்விதான் விசுவரூபம் எடுத்து நிற்கிறது.

    எனது துயரங்களை எல்லாம் அவரிடம் சொல்லித்தான் நான் அழுதிருக்கிறேன். அவரை இழந்து விட்ட பின்பு இனி யாரிடம் சொல்லி அழுவேன்?

    "ராமா... ராமா..." என்று ராமநாமத்தை உச்சரிக்கும் தேரையின் உடம்பில், ராமனுடைய கணையே பாய்ந்தது போல, "காமராஜ்... காமராஜ்.." என்று கோஷமிட்ட எனது உடம்பில் அவரது மரணம் என்ற கணை பாய்ந்து விட்டதே. இந்த துக்கத்தில் இருந்து நான் மீளுவது எப்படி?

    சொல்ல முடியாத சோகங்களுக்கு தனியாக உட்கார்ந்து அழுவது ஒன்றுதான் பரிகாரம். அதைத் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை. எனவே கண்ணீரின் கடைசிச் சொட்டு இருக்கும் வரை அழுகிறேன். கல்லும் கண்ணீர் வடிக்கும் ஒரு காவியத்தை அட்டை போட்டு அழகு பார்த்தோமே தவிர அதன் உள்ளழகை நாம் உணரவில்லையே? என்றுதான் எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

    தசரதன் பிரிந்த நேரத்திலேதான், ராமனின் வனவாசமும் ஆரம்பமானது. இப்போது அப்படி ஒரு நிலைமை எனக்கு வந்து விட்டதாகவே என் உள்மனம் உரைக்கிறது. ஆர்ப்பாட்டத்திலும், ஆரவாரத்திலும தோய்ந்திருந்த என்னை, இப்போது மவுனமும், மயக்கமும் ஆட்கொண்டு ஒரு பற்றற்ற நிலைக்கு கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது.

    எனது இதயம் கவர்ந்த தலைவனின் இறுதி யாத்திரையில் பங்கு கொள்ள முடியாத பாவியாகி விட்ட எனக்கு, ஒரே ஒரு "வெளிச்சம்" என் கண் முன்னே தோன்றி ஆறுதல் தருகிறது. எனது தலைவனின் அன்னை யார் சிவகாமி அம்மாள் மறைந்த போது 23.1.1969 அன்று நவசக்தியில் எழுதிய கட்டுரைத்தான் அது.

    நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றிச் செய்தியை கேட்ட பின்பு தான் அன்னை சிவகாமி மறைந்தார்கள். பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய அன்னைக்கு மாதம் 120 ரூபாய் அனுப்பியதோடு சரி, அன்பையும், பாசத்தையும் தவிர வேறு எதையும் தன் தாய்க்கு அந்த மனிதன் தந்ததில்லையே.

    அந்த புண்ணியவானை இந்த பூமிக்கு கொடுத்த புண்ணியவதி போய்ச் சேர்ந்து விட்டாளே. இதோ அழுகுரல்கள் ஆங்காங்கே ஒலிக்கிறதே விருதுநகர் வீதியெல்லாம் மக்கள் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறதே. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு கருப்புச் சின்னம் அணிந்து துக்கம் அனுசரித்த காட்சிகள் திரைப்படமாய் விரிகிறதே.

    நேரு மறைந்த போது டெல்லி எவ்வாறு இருந்ததோ அப்படி அல்லவா ஆகி விட்டது விருதுநகர். ஒரு சின்ன சந்துக்குள்ளே சிறிய வீட்டுக்குள்ளே கிடத்தப்பட்டிருந்த சிவகாமி அன்னையின் சடலத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த கூட்டம் சாமி பார்க்க வந்த திருவிழாக் கூட்டத்தையும் போல் இருந்தது. விஞ்சி நிற்கிறதே... இது வல்லவோ மகராசனை ஈன்ற மாதரசியின் பெருமை.

    மரணத்தின் போது மாலை வாங்குவதற்கு யாரோ பத்து ரூபாய் கொடுக்கிறார்கள். பன்னீர் வாங்குவதற்கு இன்னொருவர் பணம் கொடுக்கிறார். பல்லக்கு கட்டுகிறவர் இலவசமாய்க் கட்டித் தருகிறார். வந்தவர்களுக்கு ஒருவேளை சோறு போட இடமுமில்லை. பணமும் இல்லை. பத்து வருஷம் ராஜாங்கம் நடத்தினான் மகன். அவனைப் பெற்றதாய் வாழ்ந்த கதை இப்படி.

    அன்னையின் அருகில் நின்று அந்த மகன் (காமராஜர்) பன்னீர் தெளித்த போது, பார்த்த மக்கள் கண்களில் எல்லாம் கண்ணீர் பெருகியது. கல் நெஞ்சு மனமும் உருகியது. காலை 10.30 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. அந்த ஊர்வலத்தில் அன்னை பெற்ற மகன் பொறுமையாக நடந்து வந்தானே. அதுதான் அன்னையிடம் அவர் காட்டிய நீண்ட அன்பு.

    அன்னையின் பக்கத்தில் அந்த மகன் நீண்ட நேரம் இருந்தது. இதுதான் முதல் முறை. இனிமேல் நினைத்தாலும் அதற்கு வாய்ப்பில்லையே. இறுதி யாத்திரை அல்லவா இது. மக்கள் கூட்டத்தால் இடுகாடு திக்கித் திணறிற்று தாய்க்கு அள்ளி வைத்து அழகு பார்க்க முடியாத தங்க மகன் கொள்ளி வைத்து கதை முடித்தான்.

    கடைசியாக இழையோடிக் கொண்டிருந்த பாச நூலும் அறுந்து விட்டது. அந்த அற்புத அன்னையை அவன் நினைக்காவிட்டாலும் நாம் நினைப்போமே. அன்னை பெயரில் நாடெங்கும் மன்றங்கள் அமைப்போமே.

    "நல்முத்தை ஈன்றெடுத்த அன்னையே

    நாள் தோறும் நினைவில் வைப்போம் உன்னையே" என்று உருகி உருகிக்கரைந்து எழுதியிருக்கிறார் கண்ணதாசன்.

    இந்தக் கட்டுரையின் வாசகங்கள் ஒவ்வொன்றும் நினைவுக்கு வந்து மனக் கதவைத் தட்டி... தேறுதல் தருவது ஒன்று தான் கண்ணதாசனுக்கு மனதளவில் அன்று ஆறுதலாக அமைந்தது. மலேசியத் தமிழர்களின் நீண்ட நாள் ஆசையை நிறை வேற்றுவதற்காக வந்த கண்ணதாசன், அவர்களை ஏமாற்ற விரும்பவில்ல... மனதை ஒருவழியாக தேற்றிக் கொண்டு, ஏற்கனவே ஒப்புதல் கொடுத்த இடங்களுக்கு எல்லாம் சென்று, இலக்கியத்தையும் ஆன் மீகத்தையும் இணைத்து, பல சொற்பொழிவுகளைச் சிறப்பாக ஆற்றினார். ஒவ்வொரு கூட்டத்திலும் காமராஜரின் பெருமைகளையும், சாதனைகளையும் அவருடன் தனக்கிருந்த தொடர்புகளையும் முதற் கண் பேசி விட்டுத் தான் இலக்கியத்திற்குள்ளும், ஆன்மீகத்திற்குள்ளும் போனார். மலேசியத் தமிழர்கள் ஏற்கனவே காமராஜரைப் பற்றி ஓரளவே இதுவரை அறிந்துள்ளார்கள். ஒவ்வொரு கூட்டத்திலும் காமராஜரைப் பற்றிய கண்ணதாசனின் பேச்சைக் கேட்டு காமராஜரின் பெருமையை உணர்ந்து வியந்து போனார்கள். அதுவும் கண்ணதாசனுக்கு மிகப்பெரும் ஆறுதலாக அமைந்தது. எவ்வளவு விரைவாக மலேசியக் கூட்டங்களை முடிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் கண்ணதாசன். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியதும், காமராஜர் நினைவிடத்திற்கு நேராகச் சென்று அஞ்சலி செலுத்தினார். நினைவிடத்தில் கால் வைத்தவுடனேயே, கவிஞரின் இதயம் படபடத்தது. கால்கள் தடுமாறியது. கண்களில் இருந்து கண்ணீர் வெள்ளம் கரைபுரண்டது. சிறுபிள்ளை அழுவதைப் போல, கண்களைக் கசக்கியபடி, தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார் கண்ணதாசன்.

    "நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அப்பாவின் அழுகை நிற்கவில்லை. என்கிறார் கவிஞரின் புதல்வரான அண்ணாத்துரை கண்ணதாசன்..." பண்டித ஜவகர்லால் நேரு இறந்த போதும் அப்பா இதே போலத்தான் தேம்பி தேம்பி அழுதார். நாங்கள் தேற்றிய பொழுது ஓரளவு சமாதானமானார். ஆனால், இப்போது அவரையும் மீறிக்கொண்டு வந்த அழுகையை யாராலும் நிறுத்த முடியவில்லை என்றார் அண்ணாத்துரை கண்ணதாசன். கண்ணதாசன் சென்னை திரும்பிய செய்தியறிந்த படத் தயாரிப்பாளர்கள் எல்லாம் மீண்டும் கவிஞர் வீட்டு வாசலிலே காத்திருந்தனர். எழுதுகோலை எடுத்து எப்போது கவிஞர் எழுதுவார் என்று வார்த்தைகளும் வரிசை கட்டி நின்றன.

    சிறிய ஓய்வுக்குப் பின்னர். ஒவ்வொரு தயாரிப்பாளராக அழைத்து பாடல் எழுதும் பணியை முடித்துக் கொடுத்தார் கண்ணதாசன். கண்ணதாசன் பாட்டுத்தான் வேண்டுமென்று காத்திருந்த தயாரிப்பாளர்களுக்கு அளப்பரிய மகிழ்ச்சி.

    இருப்பினும் கண்ணதாசன் மனமோ நிலை கொள்ளாமல் தான் இருந்தது. நிரந்தர நினைவுச் சின்னமாக கடற்கரையில், காந்தி சிலைக்கு அருகே வித்தியாசமான முறையில் சிலை ஒன்று அமைத்திட விரும்பினார் கண்ணதாசன். உடனே தனது ஆருயிர் நண்பர் பழ.நெடுமாறனை அழைத்து ஆலோசனை கலந்தார். நல்ல யோசனை என்று எல்லோரும் வரவேற்க செட்டி நாட்டரசார் எம்.ஏ.எம்.ராமசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டு வெகுவேகமாக வேலைகள் நடந்தன.

    அப்போது தமிழகத்தில் கவர்னர் ஆட்சி நடை பெற்றுக் கொண்டிருந்தது. ஆளுநராக இருந்த "சுகாதியர்" அவர்கள் நேரடியாக கடற்கரைக்கு வந்து சிலை வைக்கும் இடத்தை தேர்வு செய்து கொடுத்து அனுமதியும் வழங்கியதோடு, காமராஜர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக ஆக்கி, அதற்கான உத்தரவையும் பிறப்பித்தார்.

    காமராஜர் மறைந்த பிறகு வந்த, பிறந்த நாளான 1976 ஜூலை 15-ம் நாள் அன்று காமராஜர் நினைவு இல்லத்திற்கு ஆயிரக்கணக்கானோரை அழைத்துச் சென்று, கற்பூரம் ஏற்றி வழிபட்டு காமராஜர் பற்றிய கற்பூரக் கவிதை ஒன்றினையும் நினைவிடத்தில் வைத்து வணங்கினார் கண்ணதாசன். இதோ அந்தக் கவிதை...

    நீயிலாத் தமிழ்நாடு

    நிழலில்லா மனிதர் வீடு

    வாயிலா விலங்கு கூட

    வாழ்ந்திடச் செய்த தாயே...

    தாயிலாப் பிள்ளை யானோம்

    தலைவனை இழந்த பின்னே...

    கோயிலில் கூடியுள்ளோம்

    கொற்றவா... வாழ்த்துவாயே...

    இந்த உருக்கமான கவிதைக்கு இசையமைக்கப் பட்டு பிரபல பின்னணிப் பாடகி டி.கே.கலா பாடி எல்லோரையும் கண்கலங்க வைத்தார். மேலும் கண்ணதாசன் எழுதிய பல பாடல்களையும் பாடி எல்லோரையும் உருக வைத்தார். இறுதியாக கவியரசரும், நெடுமாறனும் பேசி எல்லோரையும் அழவைத்தனர். தாங்களும் அழுதனர். "ஆற்றொனாத் துயரம் வரும்போதெல்லாம், அழுவது ஒன்றுதான் எனக்கு நிம்மதி" என்று கண்ணதாசன் ஏற்கனவே பல இடங்களில் எழுதிய வைர வரிகளை நினைத்து பார்க்கிறேன்.

    அடுத்த வாரம் சந்திப்போம்.

    Next Story
    ×