search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சென்னை சித்தர்கள்: ஸ்ரீமகா தேவேந்திர சரஸ்வதி சுவாமிகள்-திருவொற்றியூர்
    X

    சென்னை சித்தர்கள்: ஸ்ரீமகா தேவேந்திர சரஸ்வதி சுவாமிகள்-திருவொற்றியூர்

    • சிவபெருமான் வட்ட வடிவபாறையை கொண்டு மூடியதால், கண்ணகியின் பெயர் நாளடைவில் வட்டப்பாறை அம்மன் என்று மாறியது.
    • பெண்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற மஞ்சள், குங்குமம் தெளித்து இந்த அம்மனை வேண்டிக் கொள்கிறார்கள்.

    பாண்டிய மன்னன் தனக்கு இழைத்த அநீதிக்காக மதுரையையே எரித்தவள் கண்ணகி. கணவனின் கொலைக்காக ஊரை எரித்த அவளுக்கு அதன் பிறகும், ஆவேசமும், ஆத்திரமும் அடங்கவில்லை. மிகவும் உக்கிரமாக அவள் மாறி இருந்தாள்.

    அந்த உக்கிரத்துடன் அவள் ஒவ்வொரு தலமாக சென்று கொண்டிருந்தாள். அவளது உக்கிரம் பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவள் வட சென்னையில் உள்ள ஒற்றியூர் ஈசன் ஆலயத்துக்கும் வந்தாள். அவளது உக்கிரத்தை தணிக்க சிவபெருமான் முடிவு செய்தார்.

    அதன்படி ஆலயத்தின் கருவறை அருகே கிணற்றுக்கு பக்கத்தில் சிவனும், பார்வதியும் அமர்ந்து சொக்கட்டான் விளையாடினார்கள். அந்த சமயத்தில் உக்கிரத்தோடு கண்ணகி அங்கு வந்தாள். இதைக் கண்ட சிவபெருமான் சொக்கட்டான் காய்கள் ஒன்றை அருகில் இருந்த கிணற்றுக்குள் தள்ளிவிட்டார்.

    அந்த சொக்கட்டான் காயை எடுத்துத் தரும்படி அவர் கண்ணகிக்கு உத்தரவிட்டார். இதனால் கண்ணகி கிணற்றுக்குள் இறங்கினார். அந்த சமயத்தில் வட்ட வடிவிலான பாறையை எடுத்து அந்த கிணற்றை சிவபெருமான் மூடினார். இதனால் கண்ணகியின் உக்கிரத்தில் இருந்து மக்கள் தப்பினார்கள்.

    இதுதான் செவிவழி செய்தியாக காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது. சிவபெருமான் வட்ட வடிவபாறையை கொண்டு மூடியதால், கண்ணகியின் பெயர் நாளடைவில் வட்டப்பாறை அம்மன் என்று மாறியது. திருவொற்றியூர் வடிவுடையம்மன் சமேத தியாராஜ சுவாமிகள் ஆலயத்தில் பிரகாரத்தில் வட்டப்பாறை அம்மன் சன்னதி அமைந்துள்ளது.

    பெண்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற மஞ்சள், குங்குமம் தெளித்து இந்த அம்மனை வேண்டிக் கொள்கிறார்கள். சித்திரை மாதம் வட்டப்பாறை அம்மனுக்கு விழா நடத்தப்படுகிறது. வடதிசை நோக்கி அருளாட்சி செய்யும் வட்டப்பாறை அம்மன் அதன்பிறகும் கூட மிகவும் உக்கிரமாகவே இருந்து வந்ததாக சொல்கிறார்கள்.

    இதன் காரணமாக வட சென்னை மக்கள் அந்த ஆலயத்துக்கு செல்லவே ஒரு காலத்தில் பயந்தனர். வட்டப்பாறை அம்மனை சாந்தப்படுத்த உயிர் பலிகளும் அடிக்கடி கொடுக்கப்பட்டன. இந்த நிலையில்தான் திருவொற்றியூர் தலத்துக்கு ஆதி சங்கரர் வருகை புரிந்தார். அவர் அந்த தலத்தில் நடந்து வந்த உயிர் பலிகளை கண்டு மிகவும் வருந்தினார்.

    உயிர்பலி இடவேண்டாம். நான் வட்டப்பாறை அம்மனை சாந்தப்படுத்துகிறேன் என்று உறுதி அளித்தார். அதன்படி ஆலயத்தின் அருகில் ஆசிரமம் வைத்து தங்கியிருந்து மிகப்பெரிய பூஜைகள் நடத்தினார். யாகங்கள் செய்து மக்களிடம் நம்பிக்கையை உருவாக்கினார். பிறகு சக்கரம் ஒன்றை உருவாக்கினார்.

    அதிசக்தி வாய்ந்த அந்த சக்கரத்தை வட்டப்பாறை அம்மன் சன்னதியில் பிரதிஷ்டை செய்தார். அதன்பிறகு வட்டப்பாறை அம்மனின் ஆக்ரோஷம், ஆவேசம் அனைத்தும் அடங்கியது. அன்பும், அருளும் தரும் தெய்வமாக அவள் மாறினாள். அவளை மாற்றிய சிறப்பு ஆதி சங்கரருக்கே உண்டு.

    அவர் ஆசிரமம் அமைத்திருந்த இடத்தில் தற்போதும் சிறப்பான பூஜை வழிபாடுகள் நடந்து வருகின்றன. வடிவுடையம்மன் ஆலயத்தின் தெற்கு பிரகார வீதியில் 3-ம் எண்ணில் இந்த கட்டிடம் அமைந்துள்ளது. ஆதிசங்கரர் பூஜித்த அந்த இடத்தை காஞ்சி காமகோடி பீடம் பராமரித்து வருகிறது.

    காஞ்சி மடத்தின் பீடாதிபதியாக பொறுப்பேற்பவர்கள் இந்த மடத்துக்கும் வந்து செல்வதுண்டு. அந்த வகையில் இந்த மடத்துக்கு 61-வது பீடாதிபதி ஸ்ரீமகா தேவேந்திர சரஸ்வதி சுவாமிகளும் அடிக்கடி வந்துள்ளார்.

    இவர் காஞ்சி சங்கர மடத்தில் 1704-ம் ஆண்டு முதல் 1746-ம் ஆண்டு வரை 42 ஆண்டுகள் பீடாதிபதியாக இருந்துள்ளார். இவர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர். இவர் பெரும்பாலும் திருவொற்றியூர் ஆதி சங்கரர் அமைத்த அந்த மடத்தில் தியானத்தில் இருப்பதை விரும்பியதாக கூறப்படுகிறது.

    இதனால் இந்த மடத்துக்கும், பீடாதிபதி ஸ்ரீமகா தேவேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கும் அதிக நெருங்கிய தொடர்பு உண்டு. பீடாதிபதி ஸ்ரீமகா தேவேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு பெற்றோர் சூட்டிய பெயர் நாராயணன். இவர் காலத்தில் மதுரை அரசனாக விளங்கிய ஸ்ரீ விஜயரங்க சொக்கநாத நாயக்கர், இவரை "லோக குரு சுவாமுலைன ஸ்ரீசங்கராசார்ய சுவா முலவாரு" என ஒரு செப்பேட்டில் குறித்திருக்கிறார். 1723-ல் வேட்டவலம் ஜமீன்தார் "தணிக்கத் தாம்பட்டு" என்ற கிராமத்தை ஸ்ரீமடத்துக்கு நன்கொடையாக அளித்திருக்கின்றார்.

    ஸ்ரீசர்வஜ்ஞ சதாசிவேந்தர் சரஸ்வதி சுவாமிகள் தொகுத்தெழுதிய 'புண்ய சுலோக மஞ்ஜரி' என்ற நூலுக்கு இவர் விரிவுரை எழுதியிருந்தார். புண்ய சுேலாக மஞ்ஜரி பரிசிஷ்டா என்ற 13 பாடல்கள் கொண்ட இவரது நூல் 56 முதல் 60 வரையுள்ள ஆச்சார்யர்களின் சித்தி காலத்தை விளக்குகின்றது. சதாசிவ பிஹ்மேந்த்ரா அருளிய குரு ரத்ன மாலாவிறகு குரு ரத்ன மாலா சூஷ்மா என்ற உரையை இவர் எழுதியிருக்கிறார். இதில் ஏராளமான உபமானங்கள் இருப்பதாக ஆவணங்கள் கூறுகின்றன.

    விஜயரங்க சொக்காத நாயக்கர் கஜாரண்ய சேத்திரம், ஜம்புகேஸ்வரம் மடத்தில் ஆச்சார்யாளின் உத்தரவுபடி நிரந்தரமாக நித்ய அன்னதானம், நைவேத்தியம் நடைபெற பூமிதானம் அளித்திருக்கிறார். இதற்கான செப்பேடு திருவானைக்காவலில் உள்ளது.

    இவர் கி.பி.1746 குரோதன கார்த்திகை வளர்பிறை நவமியில் திருவொற்றியூரில் சித்தி அடைந்தார்.

    1742-ல் (துந்துபி ஆண்டு) சென்னை, தம்புசெட்டி தெருவில் 119-ம் எண்ணுள்ள கட்டிடம் வஜ்ரால தியாகராஜூடு அவர்களால் சுவாமிகளுக்கு கட்டிக் கொடுக்கப்பட்டு அதில் சுவாமிகள் வசித்திருக்கிறார் என்றும் அங்குள்ள கல்வெட்டு கூறுகிறது.

    திருவொற்றியூரில் அவர் முக்தியடைந்த இடத்தில் அவருக்கு அதிஷ்டானம் அமைக்கப்பட்டுள்ளது. மடத்தின் ஒரு ஓரத்தில் அந்த அதிஷ்டானம் அமைந்துள்ளது. சுமார் 275 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட அந்த அதிஷ்டானம் இன்றும் மக்களால் போற்றி பாதுகாக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

    300 ஆண்டுகளை நெருங்குவதால் அதிஷ்டானம் பகுதியில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. கால ஓட்டத்தில் சுற்றியுள்ள பகுதிகளின் நிலமட்டம் உயர்ந்திருப்பதால் தற்போது அந்த அதிஷ்டானம் சற்று பள்ளத்தில் குகைக்குள் இருப்பது போல காட்சி அளிக்கிறது.

    இந்த ஜீவ சமாதியில் சிறிய லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. எதிரே துளசி மாடம் அமைந்துள்ளது. எப்போதும் தீபம் எரிந்துகொண்டு இருக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். அந்த சிறிய பகுதியில் அமர்ந்து தியானம் செய்வதற்கும் வசதி உள்ளது.

    அங்கு அமர்ந்து தியானம் செய்தால் பீடாதிபதி ஸ்ரீமகா தேவேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளை மிக எளிதாக பெற முடியும். வியாழக்கிழமைகளில் நிறைய பேர் அங்கு வந்து தீபம் ஏற்றி இந்த மகானை வழிபட்டு செல்கிறார்கள். குறிப்பாக பெண்கள் அதிகளவு இங்கு வருகிறார்கள்.

    அந்த அதிஷ்டானத்தில் தீபம் ஏற்றி வழிபட்டு தியானம் செய்தால் மன அமைதி கிடைப்பதாக பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள். இவர் மகா யோகியாக திகழ்ந்தவர். அந்த ஆற்றல் அலைகள் இன்னமும் அந்த அதிஷ்டானத்தில் நிறைந்து வருவதை எளிதில் உணர முடிகிறது.

    தினமும் காலை அந்த அதிஷ்டானத்தில் பீடாதிபதி ஸ்ரீமகா தேவேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலை விளக்கேற்றி நைவேத்தியம் செய்கிறார்கள். இந்த அதிஷ்டானம் அமைந்துள்ள இடத்துக்கு மகா பெரியவா பல தடவை வந்து சென்றுள்ளார்.

    மகா பெரியவாவின் உத்தரவின் பேரில்தான் இந்த மடம் சீரமைக்கப்பட்டு தினசரி பூஜைகளுக்கு கொண்டுவரப்பட்டது. ஆதிசங்கரர் மற்றும் மகா பெரியவா விரும்பி அமர்ந்த இடம் என்பதால் இந்த மடம் கூடுதல் சக்தியுடன் திகழ்கிறது. வடிவுடையம்மன் கோவிலுக்கு அருகிலேயே அமைந்திருப்பதால் அந்த ஆலயத்துக்கு வழிபட செல்பவர்களும் இந்த மடத்துக்கு வந்து செல்கிறார்கள்.

    ஆனால் வடிவுடையம்மன் ஆலயத்துக்கு வழிபட வரும் பக்தர்களில் 99 சதவீதம் பேருக்கு இப்படியொரு மகான் தெற்கு பிரகாரம் தெருவில் இருக்கிறார் என்பது தெரியாமலேயே உள்ளது. அடுத்த முறை வடிவுடையம்மன் ஆலயத்துக்கு செல்லும்போது இந்த அதிஷ்டானத்துக்கும் சென்று வாருங்கள். ஆதிசங்கரர், மகா பெரியவா பாதம் பட்ட இடத்தில் வழிபாடு செய்யுங்கள். நிச்சயமாக கூடுதல் புண்ணியம் கிடைக்கும்.

    அருகிலேயே காஞ்சி சங்கர மடத்தின் 55-வது பீடாதிபதியின் அதிஷ்டானமும் அமைந்துள்ளது.

    Next Story
    ×