search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    திரைக் கடல் பயணம்- எந்தக் கதை வெற்றி பெறுகிறது?
    X

    கவிஞர் மகுடேசுவரன்


    திரைக் கடல் பயணம்- எந்தக் கதை வெற்றி பெறுகிறது?

    • நம் அண்டை வீட்டில் நடப்பதைப் போன்ற கதைகளும் வெற்றி பெற்றிருக்கின்றன.
    • செல்வம் குவித்தவர்களின் கதைகளும் வெற்றி பெற்றிருக்கின்றன.

    தமிழ்த் திரையுலகில் எத்தகைய கதைகள் வெற்றி பெறுகின்றன? அதுதான் ஆயிரம் பொற்காசுகள் மதிப்புள்ள கேள்வி. அதற்கு விடை தேடித்தான் கோடம்பாக்கத்தில் உள்ள இயக்குனர்களும் முதலாளிகளும் கதாசிரியர்களும் கலைஞர்களும் மண்டையைப் பிய்த்துக்கொள்கிறார்கள். அந்தக் கேள்விக்கான விடையைக் கண்டுபிடித்துவிட்டேன் என்று யாருமே நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல முடியாது. ஏனென்றால் வானளாவிய வெற்றியைப் பெற்றவர்களும் தொடர்தோல்வி என்ற படுகுழியில் வீழ்ந்திருக்கிறார்கள்.

    அரசர் அரசியர் கதைகளும் வெற்றி பெற்றிருக்கின்றன. நம் அண்டை வீட்டில் நடப்பதைப் போன்ற கதைகளும் வெற்றி பெற்றிருக்கின்றன. திகிலூட்டத்தக்க, திடீர் திருப்பமுள்ள கதைகளும் வெற்றி பெற்றிருக்கின்றன. அமைதியான ஆற்றொழுக்கான நடையில் செல்லும் கதைகளும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஏழை எளிய மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் கதைகளும் வெற்றி பெற்றிருக்கின்றன. செல்வம் குவித்தவர்களின் கதைகளும் வெற்றி பெற்றிருக்கின்றன. உள்ளூர்க் கதைகளும் வெற்றி பெற்றிருக்கின்றன. அண்டை நாட்டில் சுற்றிவருவதைப் போன்ற கதைகளும் வெற்றி பெற்றிருக்கின்றன. நகைச்சுவைப் படங்களும் அழுகைப் படங்களும் வெற்றி பெற்றிருக்கின்றன. பெரிய நடிகர்கள் நடித்தது மட்டுமில்லை, புதிய நடிகர்கள் நடித்ததும் வெற்றி பெற்றிருக்கின்றது. காவல் துறைப் படங்கள் மட்டுமில்லை, திருடன் படங்களும் வெற்றி பெற்றிருக்கின்றன. எல்லா வகையினங்களும் வெற்றி பெற்றிருக்கின்றன. மேற்சொன்ன அனைத்து வகைப் படங்களும் தோல்வியும் அடைந்திருக்கின்றன. இது வெல்லும், இது வீழும் என்று அறுதியிட்டுச் சொல்லவே முடிவதில்லை. படம் வெளியாகும் அன்றுதான் வெற்றியா, தோல்வியா என்பது தெரியும்.

    படமெடுப்பவர்கள் யாராயினும் இந்தப் படம் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டு பல நாட்கள் ஓடும் என்ற உறுதிப்பாடு ஏற்பட்டால்தான் ஒரு படத்தை எடுக்கும் முயற்சியில் இறங்குவார்கள். இதற்கு மாபெரும் நுண்ணறிவு வேண்டும். ஒரு படம் காட்சி காட்சியாக நகர்ந்து சென்று மனித மனங்களைப் பதைபதைக்க வைக்கும் புள்ளியைத் தொட்டு முடிகிறது என்றால் அந்தப் படம் எப்படியாவது வெற்றி பெற்றுவிடுகிறது.

    மகிழ்ச்சியாக வாழும் கூட்டுக் குடும்பத்திற்குள் பணக்கணக்கு பார்க்கப்பட்டவுடன் அந்தக் குடும்பம் எப்படி உதிர்கிறது என்பதைச் 'சம்சாரம் அது மின்சாரம்' படம் சொன்னது. இது ஒவ்வொரு குடும்பத்தின் கதையாயிற்றே, இது மக்களுக்குப் பிடிக்குமே என்று ஏவிஎம் நிறுவனத்தார் துணிந்து படமாக்கினார்கள். படம் பட்டிதொட்டியெங்கும் வெற்றிநடை போட்டது.

    பாரதிராஜா சொன்ன 'மயில்' கதையைக் கேட்ட எஸ். ஏ. ராஜ்கண்ணு ஊருக்குப் போய்ப் பெட்டி நிறைய பணத்தோடு வந்து சேர்ந்துவிட்டாராம். 'இந்தக் கதையை நாம் படமாக எடுத்து வெள்ளித் திரையில் பார்த்தே ஆகவேண்டும்' என்ற தவிப்பு இயக்குனரைவிடவும் முதலிடுபவர்க்குக் கூடுதலாகிவிட்டது. 'இது அருமையான கதை. இது படமாக்கப்பட்டால் பரபரப்பாக ஓடும்' என்ற உறுதியான கணிப்பு அவருக்கு. அதுதான் 'பதினாறு வயதினிலே' படமானது.

    நல்ல கதை, வெற்றி பெறும் கதை, புதுமைக்கூறுகள் நிறைந்த கதை, தொய்வில்லாமல் பரபரவென்று நகரும் கதை, நெஞ்சைப் பதற வைக்கும் கதை, ஒன்பது சுவைகளும் (நவரசம்) நிறைந்த கதை என்று என்னென்னவோ வகையான கதைகளைத் தேடுகிறார்கள். திரைப்படமொன்றில் நகைச்சுவைக் காட்சியில் விவேக் நடித்திருப்பாரே… "கதை… கதை… கதைதான்யா இல்ல. அது மட்டும் கிடைச்சுதுன்னா நாளைக்கே சூட்டிங்தான்… உன்கிட்ட கதை இருக்கா…" என்று அலைவார். அதுதான் திரையுலகின் உண்மையான தேடல். கதை கதை கதை.

    கதைகளுக்கா வறுமை ? தமிழில் ஆயிரக்கணக்கான புதினங்கள் இருக்கின்றனவே, பல்லாயிரக்கணக்கான சிறுகதைகள் உள்ளனவே, நூற்றுக் கணக்கான கதாசிரியர்கள் இருக்கின்றனரே. அவர்களிடம் திரைப்படத்திற்கு வேண்டிய ஒரு கதைகூடவா இல்லை? ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒரு கதைதானே? நீதிமன்றத்தின் வாசலில் போய் நின்றால் நூறு கதைகள் கிடைக்குமே. அன்றாடம் வெளிவரும் செய்தித்தாள் செய்தி ஒன்றினைக் கூர்ந்து நோக்கினால் பெரிய கதை தென்படுமே. அவற்றில் இருந்து கதையை எழுதிவிட முடியாதா ? இதற்கான விடை அவ்வளவு எளிதன்று.

    முதலில் திரைப்படத்திற்கு வேண்டிய கதைத்தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏறத்தாழ இரண்டரை மணி நேரத்திற்கு வேண்டிய கதைக்கூறுகள் ஒன்றிரண்டல்ல. ஒரு திரைப்படம் என்பது அறுபது முதல் நூறு தனித்தனிக் காட்சிகளின் தொகுப்பு. ஒவ்வொரு தனிக்காட்சியும் இருபதுமுதல் நூற்றுக்கணக்கான சுடுவுகளின் (shots) தொகுப்பு. இவை அனைத்திற்கும் தீனி போடக்கூடிய ஒன்றுதான் திரைப்படத்திற்கு வேண்டிய கதையாக முடியும். இதற்குள் நகைச்சுவை, அழுகை, நாயக நாயகியருக்கென உறுதியான இடம், பல நிலங்களில் நிகழ்கின்ற தன்மை, பல்சுவைத் திருப்பங்கள், வாழ்க்கைப் பாடங்கள், அவலங்கள், இறுதியாய் ஒரு முடிவு எனப் பலப்பல கூறுகள் இருக்க வேண்டும்.

    உலகத் திரைப்படங்கள் ஒரு வழியில் சென்றன என்றால் இந்தியத் திரைப்படங்கள் இன்னொரு வழியில் சென்றன. பாடல்கள் இடம்பெறத்தக்க கதைகளே வெற்றி பெறுகின்றன என்று கண்டறிந்தார்கள். அதனால்தான் பேசும்படங்களுக்கு முன்வந்த ஊமைப் படங்கள் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை. நம் மக்களுக்குப் பேச்சும் பாட்டும் வேண்டும். தமிழ்த் திரையுலகம் கண்ட முதற்பெரு நாயகன் பாடுவதில் வல்லவராக விளங்கினார். அவர்தான் தியாகராஜ பாகவதர்.

    திரைப்படத்தினைவிடவும் பாடல்கள்தாம் சிறந்த கலைவெளிப்பாடு என்று கூறுவேன். சில ஆண்டுகட்கு முன்னர்வரைக்கும்கூட 'இந்தப் படத்தில் எத்தனை பாட்டு ?' என்று கேட்டுச் செல்வோரே மிகுதி. நடிக்கும் நடிகரே பாட வேண்டும் என்ற நிலையில்தான் நாடகக் குழுக்கள் இயங்கின. 'ஒருவர் பாடுவதற்கு இன்னொருவர் வாயசைப்பது' என்பது கலையில் மாபெரும் ஏமாற்று வேலைதானே ? ஆனால், திரைப்படத்தில் அது நிகழத் தொடங்கியது. இறுதியில் அது ஒருவர் பேச்சுக்கும் பின்னணிக் குரல் கொடுத்துக்கொள்ளலாம் என்கின்ற இடத்திற்குக் கூட்டிச் சென்றது. அதனால் தான் செவ்வியல் கலைப்பெரியோர்கள் திரைப்படத்தை ஒரு படியேனும் தாழ்த்திப் பார்க்கிறார்கள். இன்னொரு புறத்தில் 'அடிப்பது இல்லை, அடிப்பதுபோல் நடிப்பதுதான் நடிப்பு' என்கிறார்கள்.

    பெண்களைச் சுற்றியெழுதப்பட்ட கதைகள் எப்போதும் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்தியத் திரையுலகம் பாடல்களுக்கு அடுத்துக் கண்டுபிடித்த கதைப்பொருள் இதுதான். பெண்களைப் பற்றியெழும் கதைகள். தொடக்கக் காலத் திரைப் படங்களில் தலைப்புகளே பெண்களுக்கு முதலிடம் தருவதாக அமைந்தன. சத்தியவான் சாவித்திரி, பவளக்கொடி, சீதா கல்யாணம், லலிதாங்கி, நல்ல தங்காள், சதிலீலாவதி, ராஜகுமாரி, மந்திரிகுமாரி என்று பெண் பாத்திரங்களையே தலைப்புகளாக ஆக்கினார்கள். அந்தப் போக்கிற்கு இன்றுவரை உயிர்ப்புள்ளது. அதனால்தான் காஞ்சனா, கோலமாவு கோகிலா என்று பெண்பால் பெயர் தாங்கிய படங்கள் இன்றும் வெற்றி பெறுகின்றன.

    பாடல்கள், பெண்பாடுகள் என்ற பொருள் கண்ட கதைகள் மேலும் விரிவு பெற்றன. காதல் பாடுகள் இன்னொரு பெரும்பொருள். திரைப்படம் என்றாலே அது காதல் படம்தான். காதலில்லாத திரைப்படம் எதனையேனும் சொல்லுங்கள் பார்ப்போம். காதல் போயின் சாதல் என்ற நிலையில்தான் நம் திரைப்படங்கள் இருக்கின்றன. நாட்டில்கூட அவ்வளவு காதல்கள் நிகழ்ந்திருக்குமா என்ற ஐயம் ஏற்படுமளவுக்குக் காதல் மலிந்த கதைகள் நம் திரைப்படங்களில் இடம்பெற்றுவிட்டன. இந்தப் போக்கினைப் பெரும்போக்கு ஆக்கியவர் இயக்குநர் ஸ்ரீதர். காதலுறுதலையும் காதலுக்குப் பின்வரும் விளைவுகளையும் இயம்புமாறு தம் படங்களை எடுத்துப் புகழ்பெற்றார் அவர். அவர் எடுத்த காதல் படங்களில் முழு வளர்ச்சியடைந்த நடிகர்கள் காதல் வயப்பட்டார்கள். பிறகு வந்த பாரதிராஜா தம் 'அலைகள் ஓய்வதில்லை' திரைப்படத்தில் மீசையரும்பாத காதலனைக் காட்டினார். அது இன்னும் இறங்கிச் சென்று 'பன்னீர் புஷ்பங்கள்' என்ற திரைப்படத்தில் பள்ளிக் காதலும் ஆயிற்று. பெயர் பெற்ற இயக்குநர்கள் யாவரும் காதல் கதைகளை எடுத்து வெற்றி பெற்றவர்களாகவே இருக்கிறார்கள்.

    புகழ்பெற்ற திரைப்பட நிறுவனங்கள் நல்ல கதைவளம் உள்ள படங்களையே எடுக்க முன்வந்தன. எடுத்துக்காட்டுக்கு ஏவிஎம் நிறுவனம் ஆக்கியளித்த படங்களைப் பார்க்கலாம். அவர்களுடைய படங்கள் யாவும் கதைகளைத் தேடியெடுத்து உருவாக்கப்பட்டவை. அவர்கள் முழுவீச்சுடன் படங்களை எடுத்துக்கொண்டிருந்தபோது பெரிய நடிகர்களை நாடவே இல்லை. சிவாஜியோடு சில படங்கள், எம்.ஜி.ஆரோடு 'அன்பே வா' என்ற ஒரே படம். அதன் பொருள் என்ன ? அவர்கள் தேர்ந்தெடுத்த கதைகளுக்குப் பெரிய நடிகர்கள் தேவையில்லை என்பதுதான்.

    தொடர்ச்சியாய்த் திரைப்படங்கள் எடுத்தவர்களிடையே தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தினரைத் தனித்துக் குறிப்பிட வேண்டும். தம் படங்களுக்குக் கதைகளை ஆக்குவதற்கென்றே பெருங்குழுவினரை அமைத்திருந்தார் தேவர்.

    திரையுலகில் 'மண்மணம் கமழும்' கதைப்படங்களுக்கு எப்போதுமே வரவேற்பிருந்தது. ஓர் இயக்குநராகப் பெயர் பெறுவதற்கு ஊர்க்கதைகள் மிகவும் பயன்பட்டன. உலகு தழுவிய கதையான 'உலகம் சுற்றும் வாலிபன்' வெற்றி பெறுகிறது. அப்படம் வெளியான அதே எழுபதுகளில்தாம் எண்ணற்ற நாட்டுப்புறக் கதைகள் வெளியாகி வெற்றி பெற்றன. எண்பதாம் ஆண்டுகள் முழுவதும் ஊர்க்கதைகளைச் சொன்ன படங்களே நூற்றுக்கணக்கில் வெளியாயின. ஊர்ப்புறக் கதைகளுக்கென்றே தனித்த நாயகன் ஒருவர் தோன்றினார். அவர் ராமராஜன். சிறிது இடைவெளிக்குப் பிறகு படமெடுக்க வந்த ஏ.வி.எம். நிறுவனத்தார்கூட முரட்டுக் காளை, சகலகலா வல்லவன் என்று ஊர்ப்புறக் கதைகளையே தேர்ந்தெடுத்தனர். நினைத்துப் பார்க்க முடியாத வெற்றியைப் பெற்ற படங்கள் பல ஊர்ப்புறக் கதைகளாக இருக்கின்றன. முந்தானை முடிச்சு, கரகாட்டக்காரன், நாட்டாமை, பருத்தி வீரன் என அந்தப் பட்டியல் பெரிது.

    எந்தக் கதை வெற்றி பெறுகிறது என்பது என்றைக்கும் புரியாத புதிர்தான். ஆனால், மனித நெஞ்சத்தின் அடிப்படை உணர்ச்சிகளோடு தொடர்பு கொள்ளும் ஒரு கதை வெற்றி பெற்றிருக்கிறது. மக்கள் மனங்களைத் துல்லியமாகத் தீண்டி அசையச் செய்த கதைகள் வென்றுள்ளன. வாழ்வியல் விழுமியங்களை, பண்பாட்டுக் கோலங்களை, உறவுகளின் பல நிறங்களைச் சொன்ன கதைகள் எப்போதும் கொண்டாடப்படுகின்றன.

    தொடர்புக்கு:-

    kavimagudeswaran@gmail.com

    Next Story
    ×