என் மலர்

  சிறப்புக் கட்டுரைகள்

  சமைக்கும் வேலையை எளிதாக்கும் சமையலறை முக்கோணம்
  X

  சமைக்கும் வேலையை எளிதாக்கும் சமையலறை முக்கோணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சமைப்பதற்கும், பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கும் பெண்கள் செலவிடும் நேரம் சுருங்கிக்கொண்டே வந்திருக்கின்றது.
  • நவீன சமையலறை சாதனங்கள், தானியங்கி எந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது ஒரு காரணம்.

  பணி செய்யும் இடத்தில், அனைத்து வகையானப் பணிகளையும் எளிமையாகச் செய்து முடிப்பதற்கான வழிவகைகளைப் பின்பற்றினால், பணியாளர்களின் உற்பத்தித் திறனையும், பணி செய்யும் திறனையும் அதிகப்படுத்தி, அவர்களுக்கும் பிறருக்கும் மனதிருப்தியையும் ஏற்படுத்தலாம். இவைஅனைத்தும் வெளியில் சென்று செய்யும் பணிக்குதான் என்பதில்லை. வீட்டில் செய்யப்படும் அனைத்து வேலைகளுக்கும் பொருந்தும்.

  வீட்டிலேயே இருப்பவர்களுக்கும் இந்தப் பணி அலுப்பு ஏற்பட்டு, வேலை செய்யும் திறனும், ஆர்வமும் குறையும் நிலையில், அப்பணி முழுமை பெறுவது சந்தேகமே. பெண்களுக்கு அதிக வேலையைக் கொடுக்கும் இடமாக இருக்கும் சமையலறைதான் அதிக ஆர்வத்துடன் பணிகளைச் செய்யும் இடமாகவும் இருக்கிறது. அதே வேளையில், அதிக நேரத்தையும் உழைப்பையும் எடுத்துக்கொண்டு சோர்வைக் கொடுக்கும் இடமாகவும் இருக்கிறது.

  சமைப்பதற்கும், பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கும் பெண்கள் செலவிடும் நேரம் சுருங்கிக்கொண்டே வந்திருக்கின்றது என்று ஆய்வுகள் பதிவு செய்துள்ளன. இந்த வேலைகளுக்கு, 1960 களில், ஒரு நாளில் 85 நிமிடங்களாக இருந்த நேரம் 1995, 2000 ஆண்டுவாக்கில் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 41 நிமிடங்களாகக் குறுகி, தற்போது மேலும் குறைந்துவிட்டதாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

  இதற்கு, நவீன சமையலறை சாதனங்கள், தானியங்கி எந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது ஒரு காரணம். இருந்தாலும், நவநாகரிக உலகில், பெண்கள் பெரும்பாலும் வெளியில் வேலைக்குச் சென்று வருவதால், வீட்டு சமையலறையில் நேரம் செலவு செய்வது குறைந்துவிட்டது என்பது இரண்டாவது காரணமாக இருக்கிறது.

  "வொர்க் எம்ப்ளாய்மென்ட் அன்ட் சொசைட்டி" என்ற இதழில் வெளியாகியுள்ள ஆராய்ச்சிக்கட்டுரை, பெண்கள் சராசரியாக 12 - 16 மணி நேரங்களை வேலைகளுக்காகச் செலவிடும் நிலையில், சமைத்து முடித்தபிறகு, உடல்வலி, கைகால் வலி, சோர்வு, எரிச்சல், மனஅழுத்தம் போன்றவைகளாலும் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறுகிறது. இதற்கு, சமையலறை வேலைகளை எளிமையாக்கி ஆர்வமுடன் குறைவான நேரத்தில் வேலைகளை முடிக்கும் "ஸ்மார்ட் குக்கிங்" என்பது பலருக்கும் தெரிந்திருப்பதில்லை என்பது தான்.

  வீட்டிலுள்ள சமையலறையில்தான் பெண்களின் ஆற்றல், திறமை, நேரம் என்று அனைத்துமே ஒருங்கே பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வேலைக்கென்றும் ஒரு குறிப்பிட்ட நேரமிருக்கிறது. அதிகமாக இருக்கவும் வேண்டாம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று குறையாக செய்யவும் வேண்டாம்.

  உதாரணமாக, ஒருவர் ஒரு மணிநேரத்தில் நான்கு பேருக்கு சோறு, சாம்பார் அல்லது குழம்பு, பொரியல், ரசம் தாராளமாக வைத்துவிட முடியும். இதையே இரண்டு மணி நேரத்திற்கும் மூன்று மணி நேரத்திற்கும் செய்பவர்களும் இருக்கிறார்கள். இருவருக்கும் இடையில் இருக்கும் நேரத்தில் வேறுபாடு என்பது, என்ன சமையல் செய்யப்போகிறோம் என்று முன்னரே திட்டமிட்டு வைத்திருந்து அதற்கான பொருட்களை கைவசம் வாங்கி வைத்துக்கொள்வது, அல்லது வைத்திருக்கும் பொருட்களில் எளிமையாக என்னென்ன உணவுகள் தயாரிக்க முடியும் என்று சாமார்த்தியமாக முடிவெடுப்பது என்பவற்றைப் பொருத்து அமைகிறது.

  கழுவுதல், ஊறவைத்தல், புளிக்க வைத்தல், தோல் உரித்தல், வேகவைத்தல், வறுத்தல், நறுக்குதல், அரைத்தல் போன்ற சமையல் நுணுக்கங்களிலும் நுட்பங்களிலும் நன்றாக தேர்ந்திருத்தல், சமையலறையில் உள்ள இடங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுதல் போன்றவைகளும் நேர மேலாண்மையைக் கொடுக்கும். இவற்றையெல்லாம் சரியாகப் பின்பற்றும்போது, அனைத்துவிதத்திலும் நன்மையளிக்கும் பணிச்சூழல் கிடைக்கப்பெறுகிறது. இதைத்தான் "சமையலறை பணிச்சூழலியல்" என்கிறோம்.

  இவை அனைத்தும் ஒரு பெண்மணிக்கு சரியாக அமைந்துவிட்டாலும், அவரின் வீட்டிலுள்ள சமையலறை சரியான அளவீடுகளில் இல்லாமல், ஒவ்வொரு இடத்திற்கும் அதிக தூரம் நடப்பது, அதிக நேரம் எடுத்துக்கொள்வது, பொருட்களைக் கண்டபடி உயரமான இடத்திலோ அல்லது கீழோ அல்லது சந்து, இடுக்குகள் போன்ற இடங்களில் நுழைத்து வைப்பது என்னும் நிலையில் இருந்தால், நேர விரயம் ஏற்படுவதுடன், சமைக்க வேண்டும் என்றாலே ஒருவித பயம் ஏற்பட்டுவிடும்.


  "சமையலறை பணிச்சூழலியல்" வழிகாட்டு தகவல்களைப் பின்பற்றி, பொருட்களை வைத்தெடுக்கும் முறை, வேலைக்கு நடமாடும் தூரம், போன்றவற்றை பக்குவமாகவும் எளிமையாகவும் அமைத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், உடல்வலி, கை கால் வலி, முதுகு வலி, கால் வலி என்று துவங்கும் சிறு சிறு பிரச்சினைகள் நீடித்து, அவர்களை நோயாளிகளாக்கிவிடுவதுடன், உணவு தயாரிக்க வேண்டும் என்று நினைத்தமாத்திரத்திலேயே ஒருவித அலுப்பும் சோம்பேறித்தனமும் உடலில் குடிகொண்டுவிடுகிறது. இதனால் சமைப்பதில் ஆர்வமும் குறைந்துவிடுகிறது.

  இவற்றையெல்லாம் களைந்து, சமையலறை வேலைகளை எளிமையாக்க வேண்டும் என்பதற்காகவே, சமையலறை மேலாண்மை குறித்த ஆய்வுகள் பரவலாக மேற்கொள்ளப்பட்டன. ஏறக்குறைய 17 மற்றும் 18-ம் நூற்றாண்டு காலவாக்கிலேயே, சமையலறை வேலைகளை எவ்வாறு எளிமையாக்கிக் கொடுப்பது என்பது குறித்த ஆய்வுகள் துவங்கிவிட்டன. சமையலறை மேலாண்மையில் கூறப்படும் பணிச்சூழலியலில், சமையல் கூடத்தில் செய்யும் வேலைகளை, வீட்டில் வேலை செய்யும் மேடை, வீட்டில் வேலை செய்பவரின் கைக்கெட்டும் தூர அளவுகள், வீட்டில் வேலை செய்யும் இடத்தின் அளவு, வீட்டில் சமையல் உபகரணங்கள் உள்ளடங்கிய கருவிகள் பயன்பாடு மற்றும் வீட்டில் வேலை நேரத்தில் கொடுக்கும் அசைவுகள்; என்று ஐந்து விதமான காரணிகளை வைத்து சமையல் வேலைகளை மிக எளிமையாகச் செய்துவிடலாம் என்று கூறப்படுகிறது.

  கிறிஸ்டின் பிரடொரிக் என்னும் அமொரிக்கப் பொருளாதார நிபுணர்தான் முதன்முதலாக வீட்டிலுள்ள சமையலறைப் பணிகளை எளிமையாக்கும் ஆய்வுகளை மேற்கொண்டார். இவற்றைத் தொடர்ந்து, 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆய்வுகளின் முடிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, சமையலறைப் பணிச்சூழலியலில் ஒன்றாகக் கண்டறியப்பட்டதுதான் "பணி முக்கோணம்."

  "சமையலறை முக்கோணம்" "தங்கமுக்கோணம்" என்றெல்லாம் அழைக்கப்படும் இந்தப் பணி முக்கோணத்தின் பிரதான நோக்கம் சமையலறையின் மிக முக்கிய இடங்களாகக் கருதப்படும் சமைக்கும் மேடை, பாத்திரம் கழுவும் இடம் மற்றும் குளிர்சாதனப்பெட்டி வைத்திருக்கும் இடம் ஆகிய மூன்றையும் இணைத்துக்கொடுத்து, நேரத்தையும், ஆற்றலையும் மிச்சப்படுத்துவதுதான்.

  இதுகுறித்து, தேசிய சமையலறை மற்றும் குளியலறை கூட்டமைப்பு கொடுத்திருக்கும் வழிகாட்டுதலிலும், முக்கோணத்தின் ஒவ்வொரு பக்கமும் குறைந்தபட்சம் 4 முதல் 9 அடிக்குள் இருக்க வேண்டும் என்பதுடன், மூன்று பக்கங்களின் கூட்டுத்தொகை 26 அடியாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அப்போதுதான், குறைவான நடை நடப்பதுடன், அதிக உடல் சோர்வு அடையாமல், எளிமையாகப் பணிகளை முடிக்க இயலும்.

  முன்பிருந்த காலங்களில், கூட்டுக் குடும்பமுறை இருந்ததால், சமையலறை வேலைகள் மட்டுமல்லாது, பிற வீட்டு வேலைகளையும் அனைவரும் பகிர்ந்தே செய்தனர். சமையலறையில் மட்டுமே சிறுசிறு வேலைகளைச் செய்வதற்கு இரண்டு மூன்று போர்; இருந்தது மட்டுமல்லாமல், பெரும்பாலும் தரையில் அமர்ந்தும் வேலைகளைச் செய்தனர். நாகரிக வளர்ச்சியில், தனிக்குடும்ப முறை நுழைந்து ஒருவரே அனைத்துப் பணிகளையும் செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டதாலும், நின்று கொண்டே சமைக்கும் நவீன சமையலறைகள் உருவெடுத்ததாலும், பணிச்சுமையும், உடல் சோர்வும் அவற்றால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளும் பெண்களிடத்தில் அதிகாரித்து வருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

  என்றாலும், மேற்குறிப்பிட்ட சமையலறை மேலாண்மை, எளிமையான பணிச்சூழலியல், பணி முக்கோணம் போன்றவற்றைப் பயன்படுத்தினால், பல விதங்களில் நன்மை இடையலாம். இவற்றை அடிப்படையாக வைத்து, தற்போது புதிதாகக் கட்டும் வீடுகளில், அதிக நேரம் சமையலறையில் வேலைகளைச் செய்பவர் எவரோ அவருடைய உயரம், உடல் நிலை உள்ளிட்ட அளவீடுகளைக் கொண்டு மேற்கண்ட அனைத்தையும் அமைப்பதே சாலச்சிறந்ததாகும்.

  தொடர்புக்கு:-

  kuzhaliarticles2021@gmail.com

  Next Story
  ×