search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    குஷ்பு என்னும் நான்... தேர்தலை சந்தித்தேன்
    X

    குஷ்பு என்னும் நான்... தேர்தலை சந்தித்தேன்

    • நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    • வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு கேட்க வேண்டும் என்ற எனது திட்டப்படித்தான் ஒவ்வொரு நாளும் பிரசாரத்தை வடிவமைத்தேன்.

    தேர்தல் பிரசாரம் என்றால் கட்சியில் இருந்து பயணத்திட்டம் வகுத்து தருவார்கள். எந்த நாள் எந்த நேரம் என்பதை குறிப்பிட்டு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் சென்று பிரசாரம் செய்ய வேண்டும். பிரசாரம் செய்வதற்கு தேவையான வாகன வசதி, உதவி செய்வதற்கு உதவியாளர்கள், கொஞ்சம் நேரம் பிரசாரம் செய்தால் ஓய்வெடுக்க ஏற்பாடுகள், தொண்டை கட்டிக்கொண்டால் சோடாவோ, தண்ணீரோ கொண்டு வந்து நீட்டுவார்கள்.

    எவ்வளவு நேரம் பிரசாரம் செய்தாலும் அலுப்பு தெரியாது. அது ஒரு சொகுசான வசதியாகத்தான் தெரியும். அதுமட்டுமா...வெயில் அதிகமாக இருந்தால் ஓய்வெடுத்துக்கொள்வோம். எங்கு கூட்டம் சேர்கிறதோ அங்குதான் பிரசாரம் செய்வோம். அதிலும் கட்சி ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யும் என்ற பொதுவான திட்டங்களையும், கட்சியின் கொள்கைகளையும் பற்றி மக்கள் மத்தியில் பேசிவிட்டு சென்று விடலாம். இதுதான் 4 தேர்தல்களில் என் பிரசார அனுபவமாக இருந்தது.

    ஆனால் 2021-ம் ஆண்டு தேர்தல் பிரசாரம் முற்றிலும் புதுமையாக இருந்தது. ஏனெனில் நான் எனக்காக பிரசாரம் செய்த தேர்தல். எனக்கு வாக்கு அளியுங்கள், என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்று மக்களிடம் கட்சியை மட்டுமல்லாமல், அதையும் தாண்டி என்னை வெற்றி பெறச்செய்யுங்கள் என்று வாக்கு கேட்டது.

    எனவே ஓய்வெடுக்க நேரமில்லை. நேரமில்லை என்று சொல்வதைவிட ஓய்வெடுக்க மனமில்லை என்பதுதான் உண்மை. எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் தூங்கவிடாமல் துரத்திக்கொண்டிருந்தது. இரவு எத்தனை மணிக்கு தூங்க சென்றோம் என்பது கூட தெரியாது. அதற்குள் விடிந்தது போல் இருக்கும். உடனே பிரசாரத்துக்கு புறப்பட்டு விடுவேன்.

    தொகுதி முழுவதும் நடந்தே செல்ல வேண்டும். வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு கேட்க வேண்டும் என்ற எனது திட்டப்படித்தான் ஒவ்வொரு நாளும் பிரசாரத்தை வடிவமைத்தேன்.

    ஆயிரம் விளக்கு தொகுதி சென்னையின் மையப்பகுதியில் இருந்தாலும் அடித்தட்டு மக்கள் வாழும் பகுதிகள் நிறையவே இருந்தது. சின்ன சின்ன தெருக்கள், குட்டி, குட்டி வீடுகள் ஒவ்வொரு வீடாக தேடிச்சென்று உங்களை நம்பித்தான் தேர்தலில் நிற்கிறேன். எனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள் என்று அவர்களிடம் கேட்பேன். வீடுகளில் இருந்து ஆண்களும், பெண்களும் ஓடி வருவார்கள். குஷ்பு வருகிறார். அவரை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு பலர் ஓடி வருவார்கள். அவர்களிடம் உங்கள் குஷ்பு வந்திருக்கிறேன். உங்களை நாடி வருகிறேன். உங்களை நம்பித்தான் தேர்தலில் நிற்கிறேன் என்று வாக்குகளை கேட்பேன்.

    வாவ்... குஷ்பு... என்று ஆர்வத்தோடு என் அருகில் வருவார்கள். செல்பி எடுப்பார்கள். என்னோடு கைகுலுக்கி மகிழ்ந்தார்கள். பல வயதான பெண்கள் நீ ஜெயிப்பே என்று கட்டிப்பிடித்து அன்போடு வாழ்த்தியதெல்லாம் நெகிழ வைத்தது. சாமானிய மக்களின் அந்த அன்பு சாதாரணமானது அல்ல. விலைமதிக்க முடியாத வாக்குகளைவிட விலைமதிக்க முடியாதது அது.

    மக்களின் பிரச்சினைகளை நேரடியாக அறிந்து அதற்கான தீர்வுகளை காண வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தெரு, தெருவாக நடந்து சென்றோம். ஒவ்வொரு தெருக்களிலும் பல பிரச்சினைகள். அன்றாடம் வேலை செய்தால்தான் சாப்பிட முடியும் என்ற சூழ்நிலையில் இருக்கும் அந்த மக்கள் எனக்கு அதை வாங்கி தாருங்கள், இதை வாங்கி தாருங்கள் என்று என்னிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.

    அவர்கள் கேட்டதெல்லாம் இந்த சாலை சரியில்லை, ஒழுங்காக குடிநீர் வரவில்லை. தெருவிளக்கு சரியில்லை கழிப்பிட வசதி இல்லை என்ற பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வு காணத்தான் ஆர்வப்பட்டார்கள்.

    எல்லோரும் இப்படித்தான் தேர்தல் நேரங்களில் வருவார்கள். "நான் வெற்றி பெற்றால் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிடுவேன் என்று வாக்குறுதி தருவார்கள். ஆனால் ஜெயித்தபிறகு அவர்களை பார்த்ததில்லை". ஒவ்வொரு தேர்தல்களிலும் இப்படித்தான் எங்கள் அனுபவம் இருந்து வருகிறது என்று அவர்கள் பேசியதில் இருந்து எந்த அளவுக்கு வெறுத்து போய் இருக்கிறார்கள் என்று என்னால் உணர முடிந்தது.

    அப்போதுதான் இந்த மக்களுக்கு நிச்சயம் உதவி செய்ய வேண்டும். தனிப்பட்ட குஷ்புவாக இருந்து அவர்கள் எதிர்பார்க்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது சுலபமல்ல. ஒரு எம்.எல்.ஏ.வாக இருந்தால் நிச்சயம் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் ஆழமாக பதிந்தது.

    வெற்றி பெற்றால் தொகுதியிலேயே ஒரு அலுவலகம் திறந்து தொகுதி மக்கள் முன் வைத்த அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைத்து அவர்களிடம் பேர் வாங்க வேண்டும் என்ற நம்பிக்கையோடுதான் அந்த தேர்தலை சந்தித்தேன்.

    தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜமானது. எல்லா கட்சிகளும், எல்லா இடத்திலும் வெற்றி பெறவும் முடியாது. அதேபோல் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறவும் முடியாது.

    ஒரு தொகுதியில் ஒருவருக்குத்தான் வெற்றி கிடைக்கும். எனவே தேர்தலில் வெற்றி என்பதைவிட மக்கள் மனங்களில் இடம் பிடித்தோம் என்ற எண்ணமே மிகப்பெரிய வெற்றிதான் என்பதே எனது எண்ணம்.

    ஆயிரம் விளக்கு தொகுதியில் நான் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், மக்கள்மனங்களில் இடம் பிடித்துவிட்டேன் என்ற எண்ணம் எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை தந்தது.

    எத்தனையோ வீடுகளில் அக்கா வாங்க.... மேடம் எங்கள் வீட்டுக்கு வாங்க... என்று அன்போடு அழைத்தது, தேநீர், குளர்பானங்கள் தந்து உபசரித்தது... போன்ற அனுபவங்கள் தங்கள் வீட்டு பிள்ளையை போல அல்லது தங்களில் ஒருவராக என்னையும் நினைத்து உபசரித்தது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இது தேர்தல் பிரசாரத்தில் எனக்கு புது அனுபவமும் கூட.

    மிகப்பெரிய நகரத்தில் வசித்தாலும் இன்னும் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் ஏராளமான பேர் வாழ்கிறார்கள் என்பது என் மனதை உறுத்தியது.

    வெற்றியில் கிடைப்பதை விட கூடுதல் சந்தோசம் தோல்வியிலும் கிடைத்தது

    பிரசாரத்தின் போது ஒருநாள் ஒரு சிறுமி என்னை பார்க்க ஆசைப்பட்டு இருக்கிறார். அவரை என்னிடம் அழைத்து வந்தார்கள். 12 வயதே நிரம்பிய அந்த சிறுமிக்கு. இரு கண்களிலும் பார்வை இல்லை. ஆனால் அந்த சிறுமி என்னிடம் வந்ததும், அக்கா... நீங்கள்தான் குஷ்புவா என்றதும் ஆமாம்டா... என்றபடி அவளது கைகளை பற்றி அருகே அணைத்துக் கொண்டேன்.

    அந்த சிறுமி பாசத்தோடு என் கைகளை தடவியபடி ரொம்ப சந்தோஷம் அக்கா... என்றாள். என் முகத்தை கூட பார்க்க முடியாதவள் என் பெயரை அறிந்து வைத்து அவள் காட்டிய பாசம் என்னை நெகிழ வைத்தது. என்னை அறியாமலேயே என் கண்களையும் கலங்க செய்தது.

    உனக்கு என்னடா வேணும் என்றேன். பொதுவாக ஒரு சிறுமி என்ன கேட்பாள். சாப்பிடுவதற்கு சாக்லெட் அல்லது வேறு ஏதாவது உதவிகள் கேட்பாள். ஆனால் அந்த சிறுமி என்னிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால் அக்கா ஒரே ஒரு உதவி செய்வீர்களா என்றார். சொல் செய்கிறேன் என்றேன்.

    நான் தெருவில் நடந்து செல்லும் போது குண்டு குழிகளில் கிடக்கும் கற்கள் என் காலை குத்துகின்றன. நடப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. நல்ல ரோடு போட்டு தருவீங்களா என்றாள். அதை கேட்டதும் உண்மையிலேயே நெகிழ்ந்து போனேன். ஒரு பார்வையற்ற சிறுமி அவள் தனக்காக கேட்கவு மில்லை. அவளுக்கு நடந்து செல்வதற்கு தகுதியான சாலை இல்லை என்பதையே கேட்டாள். நான் அவளிடம் நான் வெற்றி பெற்றால் நிச்சயம் நல்ல சாலை போட்டுத்தருவேன் என்றேன். ரொம்ப சந்தோஷம் அக்கா என்று என்னிடம் இருந்து விடைப்பெற்று சென்றாள். அவள் விடைபெற்று சென்றாலும் அவளை விட்டு மனம் பிரிய மறுத்தது. அந்த சிறுமிக்கு கண்டிப்பாக உதவ வேண்டும் என்று ஆசைப்பட்டு அவளை மிகச்சிறந்த கண் மருத்துவரிடம் அழைத்து சென்றோம். எப்படியாவது அவளது பார்வையை மீட்க வேண்டும். அதற்கு எவ்வளவு பெரிய சிகிச்சை, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்றேன்.

    ஆனால், அவளது துரதிருஷ்டம் பிறவியிலேயே ஏற்பட்ட கோளாறு காரணமாக சரிப்படுத்த முடியாது என்றார்கள் மருத்துவர்கள். ஒரு கண்ணாடியை சொல்லி அந்த கண்ணாடியை போட்டால் மங்கல் போல் லேசாக பார்வை தெரிய வாய்ப்பு உண்டு என்று சொன்னார்கள். அவர்கள் ஆலோசனைப்படி அந்த மூக்கு கண்ணாடியை வாங்கி கொடுத்தேன். அந்த கண்ணாடியை போட்டுவிட்டு நடக்கும் போது மங்கலாக தெரிவது போல் உள்ளது என்றாள். இப்போதும் அந்த சிறுமி அந்த கண்ணாடியோடுதான் நடமாடி கொண்டிருக்கிறாள்.

    அவள் வசிக்கும் தெருவில் மட்டுமல்ல. அவள் நேசிக்கும் இந்த குஷ்புவின் இதயத்திலும் நடமாடுகிறாள். வெற்றி பெற்றால் கிடைக்கும் சந்தோசத்தை விட பல இதயங்களை வென்ற சந்தோசம் எனக்கு கிடைத்தது என்பதே உண்மை.

    ttk200@gmail.com

    Next Story
    ×