என் மலர்

  சிறப்புக் கட்டுரைகள்

  கருணை தெய்வம் காஞ்சி மகான்-47
  X

  கருணை தெய்வம் காஞ்சி மகான்-47

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெரியவா கேட்ட விவரத்தை அருண்குமார் உறுதிப்படுத்திக் கொண்டார்.
  • பெரியவா முகாம் அதே தண்டையார்பேட்டையிலேயே சில நாட்கள் தொடர்ந்தது.

  சென்னை தண்டையார்பேட்டையில் மகா பெரியவா முகாமிட்டிருந்த போது பெரியேரி தியாகராஜன் 2 ஏக்கர் நிலத்தை காஞ்சி ஸ்ரீமடத்துக்கு தானமாகக் கொடுத்தார் என்று பார்த்தோம் அல்லவா? மனமுவந்து தியாகராஜன் கொடுத்த தானத்தை இன் முகத்தோடு ஏற்றுக்கொண்டார் பெரியவா.

  இதன் பிறகும் பெரியவா முகாம் அதே தண்டையார்பேட்டையிலேயே சில நாட்கள் தொடர்ந்தது. இந்த தானம் கொடுக்கிறபோது உடன் இருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டவர் ஸ்ரீமடத்தின் கார்யஸ்தர் விஸ்வநாதய்யர். இது நடந்து 2 நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் தியாகராஜனை தற்செயலாக முகாமில் பார்த்தார் விஸ்வநாதன்.

  ''ஓய்... தியாகராஜன்... என்ன சொக்குப் பொடி போட்டீரோ தெரியலை... பெரியவா அனுக்கிரகம் உமக்கும், உம் குடும்பத்துக்கும் அடுத்தடுத்து கொட்டிண்டே இருக்கு. எந்த ஜென்மத்துல நீர் செஞ்ச புண்ணியமோ...'' என்றார் முகம் மலர.

  தியாகராஜனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு நல்ல விஷயம்தான் என்கிற அளவில் பூரித்துப் போனார். பிறகு விஸ்வநாதனிடமே, ''நீங்க என்ன சொல்ல வரேள்னு புரியலை'' என்றார்.

  ''ரெண்டு ஏக்கர் நிலத்து விளைச்சல்ல நீர் தரப் போற மகசூல் தொகையை சந்திர மவுலீஸ்வரர் பூஜைக்கும், சந்தர்ப்பணைக்கும் சாசனம் பண்ணிக் குடுத்துடுனு பெரியவா உத்தரவிட்டிருக்கா'' என்றார்.

  விஸ்வநாதய்யர் சொன்ன பதிலைக் கேட்டு, தியாகராஜனின் கண்களில் இருந்து நீர் கசிந்தது. இருக்காதா பின்னே..! ஒருவர் தானம் செய்கிற பொருள், உயர்ந்த ஓர் இடத்தை அலங்கரிக்கப் போகிற பேறு எல்லோருக்கும் அத்தனை சுலபத்தில் கிடைத்து விடுமா?

  தானம் தந்ததோடு நம் வேலை முடிந்து விட்டது என்று ஒதுங்கி விட வேண்டும். அது எங்கே போகிறது... எப்படிப் பயன்படப் போகிறது என்பதை அறிந்து கொள்ள தானம் தருபவர் முற்படக்கூடாது. இது கூடவும் கூடாது.

  ஆனால், தியாகராஜன் தானமாக வழங்கிய 2 ஏக்கர் நிலத்தின் வருடாந்திர மகசூல் தொகை, எப்பேர்ப்பட்ட ஓர் உயர்ந்த இடத்தை அடைந் திருக்கிறது. அதுவும் மகா பெரியவாளின் அருளால்! தியாகராஜனுக்குக் கிடைத்திருக்கிற இந்தப் பேறு, சாதாரண ஒன்றா?!

  காஞ்சி ஸ்ரீமடத்து ஆச்சாரியர்கள் நித்தமும் சந்திர மவுலீஸ்வரர் திருமேனிக்கு பூஜைகள் நடத்துவார்கள். மிகவும் விஸ்தாரமான பூஜை இது. ஆதி சங்கரர் தன் கைப்பட கயிலாயத்தில் சிவபெருமானிடம் இருந்து பெற்றுக் கொண்டு வந்த ஸ்படிக லிங்கத் திருமேனி தான் சந்திரமவுலீஸ்வரர்.

  அப்பேர்ப்பட்ட பூஜையைத்தான் தங்கள் கைப்பட காஞ்சி ஸ்ரீமடத்து ஆச்சார்யர்கள் நடத்தி வருகிறார்கள். இப்பேர்ப்பட்ட புராதனமான ஒரு பூஜைக்குத்தான் தியாகராஜன் கொடுத்த தானமானது போய் சேருகிறது.தவிர, சந்தர்ப்பணை!

  அதாவது, ஸ்ரீமடத்துக்கு வருகிற பக்தர்கள், கைங்கர்யதாரர்கள், உபயதாரர்கள் உணவு எடுத்துக் கொள்கிற இடத்துக்குப் பெயர் - சந்தர்ப்பணை!

  ஒவ்வொரு மனிதனும் தான தர்ம கார்யங்களில் ஈடுபட்டால்தான் புண்ணியத்தைச் சேர்த்துக் கொள்ள முடியும். புண்ணியத்தை ஒரு மனிதன் சேர்த்தால்தான், அவனுக்குக் கடைசி காலத்தில் மோட்ச கதி கிடைக்கும். அதாவது, பிறப்பற்ற நிலை.

  இந்தப் புண்ணியத்தைப் பெறுவதற்கு உண்டான வழிகளை மகா பெரியவாளே தியாக ராஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இப்போது புரிகிறதல்லவா? ஒருவர் புண்ணியம் பெற வேண்டுமானால், இறைவனது பூஜைக்குத் தன்னால் ஆனதைக் கொடுக்கலாம். அதோடு, உணவிடலாம். அதாவது அன்னதான கைங்கர்யம்.

  ஆக, இந்த இரண்டு புண்ணியமும் தியாக ராஜனுக்குப் போக வேண்டும் என்று நடமாடும் தெய்வம் மகா பெரியவா தீர்மானித்து இப்படி ஒரு முடிவை ஸ்ரீமடத்தின் கார்யஸ்தர் விஸ்வநாதய்யருக்குச் சொல்லி இருக்கிறார்.

  தனக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிற விஸ்வநாதய்யரைப் பார்த்துத் தன் கைகள் இரண்டையும் உயர்த்தி வணங்கி, கண்ணீரால் நன்றி சொன்னார் தியாகராஜன். அதன்படி இதற்குண்டான சாசனம் பின்னாட்களில் இளையாற்றங்குடியில் தயார் செய்து, தியாகராஜன் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

  இவையெல்லாம் தியாக ராஜன் குடும்பத்தினர் சென்னையில் தண்டையார்பேட்டையில் இருக்கும்போது நடந்தது. பின்னாட்களில் - 1978-ல் தியாகராஜன் தன் ஜாகையை சொந்த ஊரான பெரிய ஏரிக்கே மாற்றி விட்டார். அவரது குடும்பம் அங்கேயே வசித்தது. வருடா வருடம் மகசூலான தானியங்களை விற்று அதற்குண்டான பணத்தை காஞ்சி ஸ்ரீமடத்தில் தொடர்ந்து செலுத்தி வந்தனர்.

  1993-ல் இந்த மகசூல் பணத்தைக் கட்ட தியாகராஜனின் மகன் அருண்குமார் காஞ்சி ஸ்ரீமடத்துக்கு வந்தார். இவரது வருகையை அப்போது மகா பெரியவாளுக்கு அறிவிக்க, கைங்கர்யம் செய்து கொண்டிருந்த தொண்டர் ஒருவர் பெரியவா அருகே நெருங்கினார். தன் வலக்கை விரல்களால் வாயைப் பொத்தியபடி, ''பெரியேரி தியாகராஜன் புள்ளை மகசூல் பணத்தைக் கட்ட வந்திருக்கார்'' என்றார் பவ்யமாக.

  மகா பெரியவாளுக்கு அப்போது 99 வயது. பார்வைக் குறைபாடும் இருந்தது. கேட்கும் திறனும் குறைந்திருந்தது. எனவே, மகானுக்கு கைங்கர்யம் செய்கிற தொண்டர்கள், தரிசனத்துக்கு வந்திருப்பவர்களை அறிமுகம் செய்யும் விதமாக அருகே சென்று குரல் உயர்த்திச் சொல்வது வழக்கம்.

  தொண்டர் சொல்வதைக் காதில் வாங்கிய பெரியவா, ''சின்னவனா... பெரியவனா?'' என்று கேட்டார்.

  சர்வேஸ்வர சொரூபத்தின் திருவாயில் இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்ட அருண்குமாருக்கு ஆனந்தமான ஆனந்தம். காரணம் - பெரியேரி தியாகராஜனுக்கு இரண்டு குமாரர்கள் என்பதை அந்த மகான் தன் நினைவில் வைத்திருந்ததே!

  தினமும் தன் பக்தர்களுக்குத் தரிசனம் தருகிற பெரியவா, ஒரு நாளில் எத்தனையோ அன்பர்களைப் பார்க்கிறார். பேசுகிறார். ஆனால், எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்த ஒருவரையும், அவரது குமாரர்களையும் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்றால், அது அந்தக் குடும்பத்துக்கு எப்பேர்ப்பட்ட பேறு!

  அருண்குமாரிடம் கேட்டு விட்டுப் பெரியவாளிடம் தொண்டர் சொன்னார்: ''சின்னவன்.''

  மகானின் சாந்தமான திருமுகத்தைப் பார்த்தார் அருண்குமார். 'தங்கள் குடும்பத்துக்கு மகானிடம் இருந்து இத்தனை கரு'ணையா' என்று வியந்து கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டார். பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார்.

  ஆச்சரியங்கள் இதோடு ஓயவில்லை. 'சின்னவன்' என்று தொண்டர் சொன்னதைத் தொடர்ந்து பெரியவா, ''தண்டையார்பேட்டையில் ஸ்ரீராமா கிரகத்துக்கு நான் வந்தபோது அழுதுண்டே இருந்தானே... அவனானு கேளு?'' என்றாரே பார்க்கணும்!

  எத்தனையோ வருடங்களுக்கு முன் தியாகராஜன் குடும்பம் தண்டையார்பேட்டையில் வசித்தது. அப்போது சிறுவனாக இருந்த அருண்குமாருக்கு 'அக்கி' என்கிற நோய் வந்தது. அன்றைய தினம்தான் பெரியவா இவர்கள் இருந்த வீட்டுக்கு வந்தார்.

  'அக்கி' நோயின் தாக்கம் காரணமாக வலியும் வேதனையும் பெருகியது அருண் குமாருக்கு. தொடர்ந்து அழுது கொண்டே இருந்தான். இதைத்தான் நினைவுபடுத்திக் கேட்டார் பெரியவா.

  நம்மை ஒருவர் நினைவில் கொண்டிருக்க வேண்டும் என்றால், நம்மோடு அதிக நெருக்கத்தோடு பழகி இருக்க வேண்டும். நாமும் அவருக்கு நல்லது செய்திருக்க வேண்டும். அப்போதுதான் அந்த நட்பானது காலம் முழுக்க மறக்க முடியாததாக இருக்கும்.

  இங்கே சாதாரணமான ஒரு மனிதனை -அருண்குமாரை-இந்த அளவுக்கு நினைவில் வைத்துக் கொண்டு பெரியவா அடுத்தடுத்துக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்றால், தியாகராஜனும், அவரது முன்னோர்களும் செய்த புண்ணியம்!

  அருண்குமாரை முன்னிலைப்படுத்தி பெரியவா அடுத்தடுத்து ஆச்சரியப்படும் விதத்தில் கேள்வி கேட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்து அந்த தொண்டரே கண் கலங்கினார்.

  பெரியவா கேட்ட விவரத்தை அருண்குமார் உறுதிப்படுத்திக் கொண்டார் தொண்டர்-''ஆமா பெரியவா... ஸ்ரீராமாவுக்கு நீங்க வந்த போது அழுதுண்டே இருந்தவன்தானாம்.'' ''எதுக்கு இப்ப மடத்துக்கு வந்திருக்கானாம்?'' - பெரியவா.

  ''மகசூல் பணத்தைக் கட்ட வந்திருக்காராம்'' என்றார் தொண்டர். தன் வலக்கரம் உயர்த்தி அருண்குமாரை ஆசிர்வதித்தது பரப்பிரம்மம்.

  அதே வருடத்தில் (1993) இன்னொரு தினம் தியாகராஜனும் அவரது மனைவியும் பெரியவா தரிசனத்துக்குக் காஞ்சி ஸ்ரீமடம் வந்திருந்தனர். தகவல் பெரியவாளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அன்றைய தினமும் தியாகராஜனுக்கு மிகப் பெரிய பாக்கியத்தை அருளினார்.

  என்ன பாக்கியம்?

  (தொடரும்)

  swami1964@gmail.com

  Next Story
  ×