என் மலர்

  சிறப்புக் கட்டுரைகள்

  கண்ணதாசனின் கவிதை நாயகனாய் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: முனைவர் கவிஞர் இரவிபாரதி- 28
  X

  கவிஞர் இரவிபாரதி

  கண்ணதாசனின் கவிதை நாயகனாய் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: முனைவர் கவிஞர் இரவிபாரதி- 28

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புதியதோர் உலகம் செய்வோம் என்ற தலைப்பிலே ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன்னாலே கண்ணதாசன் எழுதிய இந்தக் கவிதையைப் படிக்கும் போது மிகப்பெரிய வியப்பு மேலிடுகிறது.
  • உலக அளவிலே நடைபெறுகிற செய்திப் பரிமாற்றமும், அனைத்து வணிகப் பரிமாற்றமும் இ-மெயில் எனும் மின்னஞ்சல் மூலமாகவேதான் நடைபெறுகிறது.

  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அய்யன் வள்ளுவர் வழங்கிச் சென்ற திருக்குறள் என்னும் ஒளி விளக்கு, இன்றைக்கு உலகிற்கே வழி காட்டியாய்த் திகழ்கின்றது. உலக மாந்தர்க்குத் தேவையான வாழ்வியல் வழி காட்டியாக திருக்குறள் திகழ்வதே அதற்கு அடிப்படைக் காரணம்.

  வாழ்வியல் கூறுகள் அனைத்தையும் வகைப்படுத்தி அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலின் மூலமாய் சாறு பிழிந்து தந்திருக்கிறார் வள்ளுவர். அதைப் போலவே கவிச்சக்கரவர்த்தி கம்பனும், தான் இயற்றிய ராமாயணத்தில் ஒவ்வொரு பாத்திரப்படைப்புகள் மூலம், கதையோட்டத்தோடு வாழ்வியல் உண்மைகளைச் சொல்லி இருக்கிறார்.

  அதற்கு அடுத்த நிலையில், வள்ளலாரும், மகாகவி பாரதியாரும், பாவேந்தர் பாரதிதாசனும் தேசப்பற்று, மொழிப்பற்று, ஆன்மிகம், பெண்ணுரிமை, சமுதாய சீர்திருத்தம் என்று பல்வேறு பார்வைகளில் நமக்கு கவிதைகளை வழங்கி உள்ளார்கள். அந்த வரிசையில் அடுத்து வருபவர் நமது கவியரசர் கண்ணதாசன்தான் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

  "புதியதோர் உலகம் செய்வோம்" என்ற தலைப்பிலே ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன்னாலே கண்ணதாசன் எழுதிய இந்தக் கவிதையைப் படிக்கும் போது மிகப்பெரிய வியப்பு மேலிடுகிறது. இன்றைய கால கட்டத்திற்கும் பொருந்தி வருகிற இந்தக் கவிதையை, இப்படி ஒரு தொலைநோக்குப் பார்வையில் அவரால் எப்படி எழுத முடிந்தது என எண்ணத் தோன்றுகிறது.

  ஏனென்றால் இந்தக் கவிதையில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வரியும், இப்போதுள்ள சூழ்நிலையை அப்படியே படம் பிடித்து நமக்குத் தருகிறது என்பதை எண்ணி நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை. "கவிஞர்கள் தொலைநோக்குப் பார்வை உடையவர்கள்" என்ற பொன்மொழிக்கு சான்று பகருகிற ஒரு கவிதையாகவே இதனை நான் பார்க்கிறேன்.

  உலக மாந்தர்கள் வரிசையில் இனத்தாலும், குணத்தாலும் சிறப்பிடம் பெற்றவன் தமிழன் என்பதைத்தான்

  தமிழன் என்றோர், இனமுண்டு

  தனியே அவர்களுக்கு குணமுண்டு என்று பாடிச் சென்றார் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை.

  இனத்தால் மட்டுமல்ல... குணத்தால் மட்டுமல்ல.... மனத்தாலும் மகத்துவம் நிறைந்தவன் தமிழன் என்பதை "யாதும் ஊரே.... யாவரும் கேளிர்" என்ற ஒற்றை வரியில் உரைத்துப் போனவன் "கணியன் பூங்குன்றன்" என்ற தமிழனே. இந்த வைர வரிகளை உச்சரிக்காதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு புகழ்மிக்க வரிகள் இவை.

  பாரதப் பிரதமராக இருந்த அன்னை இந்திராகாந்தி ஒருமுறை ரஷியா நாட்டிற்குச் சென்ற போது, எங்கள் இந்திய நாட்டிலே உள்ள தமிழகத்தைச் சார்ந்த ஒரு புலவர்தான் "எல்லாமும் எமது... ஊரே எல்லோரும் எமது உறவினரே" என்ற பொருளில் "யாதும் ஊரே... யாவரும் கேளிர்" என்று பாடி இருக்கிறார் என்று பெருமையோடு குறிப்பிட்டதை குறிப்பிட விரும்புகிறேன். நமது இன்றைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் "யாதும் ஊரே... யாவரும் கேளிர்" என்ற வைர வரிகளை உச்சரிக்கத் தவறுவதில்லை.

  இதைத்தான் நமது கவியரசர் கண்ணதாசனும்

  "எங்கெல்லாம் மானிடம்

  இன்முகம் காட்டுமோ

  அங்கெல்லாம் தமிழர்கள்

  அன்பினைக் காட்டுவார்

  உலகெலாம் ஊரெனும்

  ஊரெலாம் உறவெனும்

  கலகமில் வாழ்க்கையை

  கவிதையில் நாட்டுவார்"

  என்ற கவிதை வரிகளில் தமிழனின் அருமையையும், பெருமையையும் நமக்குப் புலப்படுத்திக் காட்டுகிறார்.

  இன்றைய விஞ்ஞான உலகத்திலே நமது தமிழர்கள் தான் தொழிலும் சரி, வணிகத்திலும் சரி, உழைப்பிலும் சரி, கண்டுபிடிப்புகளிலும் சரி உலக அளவிலே முதல் வரிசையில் இருக்கிறார்கள் என்பது ஒவ்வொரு தமிழனும் மார்தட்டிக் கொள்ளக் கூடிய பெருமைமிக்க செய்தியாகும்.

  உலக அளவிலே நடைபெறுகிற செய்திப் பரிமாற்றமும், அனைத்து வணிகப் பரிமாற்றமும் இ-மெயில் எனும் மின்னஞ்சல் மூலமாகவேதான் நடைபெறுகிறது. இந்த மின்னஞ்சலைக் கண்டுபிடித்தவன் ஒரு தமிழன் என்பதை நினைக்கும் போது துள்ளிக்குதிக்கவே உள்ளம் விழைகிறது.

  இதைத்தான் நமது கவியரசர் கண்ணதாசன்

  அறத்துயர் தமிழர்கள்

  துயரறக் கூடுவார்

  திறத்துயர் மக்களில்

  சிறப்புற வாழுவார்

  நன்றெனும் இடத்திலே

  நாமென, நிற்பவர்

  அன்றெனத் தோன்றினால்

  அன்றே அகலுவார்

  தமிழர்கள் திறமையில்

  தனிப்புகழ் கொண்டவர்

  இமையென விழிகளை

  எங்கணும் காப்பவர்- என்று தமிழர்களின் அறிவாற்றலையும், திறனாற்றலையும் உயர்த்திப் பார்ப்பதோடு, நல்லது செய்வதாயிருந்தால் நாடியே செல்வார். அல்லது செய்வதாயின் அந்த இடம் விட்டே அகன்று விடுவார் என்று நமது தமிழர்களின் குணநலன்களையும் படம் பிடித்துக் காட்டுகிறார் கண்ணதாசன்.

  அப்படிப்பட்ட குண நலன்களை, தன்னகத்தே தாங்கி தமிழகத்திற்கே தலைமை ஏற்று வழி நடத்துகிற பாங்கினைப் பார்த்து, நாடே வியக்கிற அளவுக்கு தளபதி மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்து ஆட்சி செய்யும் அழகினைப் போற்றுகிற வகையிலே கீழ்க்காணும் கவிதை வரிகள் இயற்கையாக அமைந்திருப்பதை எண்ணி ஆச்சரியம் கொள்கிறேன்.

  அத்தகு தமிழர்தம்

  அன்புயர் தாயகம்

  இத்தகுணத்திலே

  எழுந்தது மேலுற...

  பொண்ணுயிர் நாட்டினை

  புதியதோர் உலகமாய்

  தன்னுயிர் போலவே

  தமிழர்கள் காக்கின்றார்

  இந்த நாள் நல்ல நாள்

  இன்பமே நிறையும் நாள்

  இந்தியா தமிழரை

  எதிர்நோக்கி நிற்கும் நாள்... என்று

  இந்திய முதல்-அமைச்சர்களில் நமது தளபதி மு.க.ஸ்டாலின் முதல் வரிசையில் இருப்பதையும், அவருடைய வழிகாட்டுதலை இந்தியாவே எதிர்பார்த்து நிற்பதையும் மேற்கண்ட கண்ணதாசன் வரிகள் நமக்கு சூசகமாக உணர்த்துகின்றன.

  அது மட்டுமல்ல... இன்று நமக்கருகிலே உள்ள இலங்கையிலேதான் தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும் தீராத போர் பல்லாண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதை எல்லாம் மனதிலே வைத்துக் கொள்ளாமல், நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இலங்கையிலே வாழுகிற எல்லா இன மக்களுக்கும், உணவுப் பொருட்களையும், மருந்து மாத்திரைகளையும், பெட்ரோல், டீசல் எரி பொருளையும், இன்முகத்தோடு அனுப்பி வைத்த அந்த பேருள்ளத்தை, மனித நேயத்தை என்னென்று சொல்லிப் பாராட்டுவது...

  இப்படிப்பட்ட சூழ்நிலை எதிர்காலத்தில் உருவாகலாம். அவர்களுக்கு ஓடோடிச் சென்று தமிழர்கள் உதவுவர் என்பதை

  "பசியெனத் தோன்று வார்

  பகைவரே ஆயினும்

  புசியெனச் சொல்லுவோம்

  புதியதோர் உலகிலே- என்ற வைர வரிகளை கண்ணதாசன் எழுதி இருப்பதன் மூலம் கவிஞரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஆயிரம் வணக்கம் வைக்க வேண்டாமா?.

  பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்திலே, கல்வியில் முதல் இடத்திலே இருந்த தமிழகத்தை உயர்த்திப் பிடிக்கும் வகையிலே "இல்லம் தேடி கல்வியைக்" கொண்டு வந்துள்ளார் நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அதே போன்று தமிழகத்தையே தொழில் மயம் ஆக்கும் முயற்சியிலும் வெற்றி பெற்று வருகிறார். மே மாதத்தில் மேட்டூர் அணையில் சாகுபடிக்காக தண்ணீர் திறந்த வரலாறு இதுவரை நடந்ததில்லை. அதைச் செய்து சாதனை படைத்திருக்கிறார் நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். இப்படி அவருடைய ஒவ்வொரு செயலிலும், தமிழகத்தின் முன்னேற்றமே தென்படுகிறது.

  இப்படி தமிழின் பெருமையினை நிலைநாட்டும் வகையிலே தமிழறிஞர்களை கவுரவிக்கிற பாங்கிலேயும் நமது தமிழ் மொழியை எங்கும் எதிலும் உயர்த்திப்பிடிக்கிற பண்பிலேயும் மிகுந்த பாராட்டுக்குரியவராக ஒளிவீசித் திகழ்கிறார் நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

  1981 லேயே கவியரசர் கண்ணதாசன் மறைந்து விட்டார். அப்போது தளபதி மு.க.ஸ்டாலின் துடிப்பான அரசியல் இளைஞராக வலம் வந்து கொண்டிருந்தார். அன்றைய கால கட்டத்தில் கண்ணதாசன் எழுதிய கவிதை, இன்றைய கால கட்டத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொருந்தி வருகிற விந்தையினை எண்ணி மகிழ்ந்து உங்கள் பார்வைக்கு அப்படியே தருகிறேன்.

  "நீரிலா நதியிலே... நீர் வரும் விரைவிலே

  போரிலா அமைதி காண்... புதியதோர் உலகிலே

  எங்கணும் தொழில் மயம் எங்கணும் கலைமயம்

  பொங்குமோர் தவம் வரும் புதியதோர் உலகிலே

  கல்வி இல்லாதவர் கடமை இல்லாதவர்

  இல்லை என்றாக்குவோம் இனியதோர் உலகிலே

  இனப்பகை மொழிப் பகை எப்பகை ஆயினும்

  நினைப்பவர் தம்மையே நெருப்பினில் வீழ்த்துவோம்.

  சிரிப்பவர் களிப்பவர் ஜெயிப்பவர் என்பவர்

  இருப்பிடம் எங்களின் இனியதோர் தாயகம்

  ஆடுவோம் ஓடுவோம் ஆனந்தம் பாடுவோம்

  கூடுமோர் கொள்கையில் குறி வைத்து நாடுவோம்

  இல்லை என்கின்றதோர் சொல்லினைத் தமிழிலே

  இல்லை என்கின்றவா றேத்துவோம் உலகிலே

  நல்லர சாக்கினாய் நன்றிஎன் தெய்வமே

  வல்லவர் அவர்களால் வாழ்கஎன் தாயகம்"

  என்று கவிதையை நிறைவு செய்கிறார் கண்ணதாசன். ஒரு முறைக்கு இருமுறை படித்துப் பார்க்கப் பார்க்க இன்றைய முதல்-அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் கவிதை நாயகனாக நமது நினைவுக்கு வருகிறார்.

  அடுத்த வாரம் சந்திப்போம்.

  Next Story
  ×