search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சென்னை சித்தர்கள்: சுயம்புநாதர் சித்தர்-அத்திப்பட்டு புதுநகர் (எண்ணூர்)
    X

    சென்னை சித்தர்கள்: சுயம்புநாதர் சித்தர்-அத்திப்பட்டு புதுநகர் (எண்ணூர்)

    • பவுர்ணமி நாட்களில் சித்தர் சன்னதியிலும், முத்தாரம்மன் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
    • ஆனி மாதம் அஸ்தம் நட்சத்திரம் நாளில் இந்த சித்தருக்கு மகா குரு பூஜை நடத்தப்படுகிறது.

    தூத்துக்குடியை சேர்ந்தவர் பிச்சாண்டி. தங்களது பாரம்பரிய தொழிலான உப்பளம் தொழிலை செய்தவர். இவரது மகன் செல்வராஜ். இவரும் உப்பளம் தொழிலில் ஈடுபட்டுள்ளார். சென்னை வந்த இவர் எண்ணூர்-மீஞ்சூர் இடையே உள்ள அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் அரசு நிலத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெற்று உப்பள தொழிலை மேற்கொண்டார்.

    அந்த காலகட்டத்தில் அந்த இடம் கதம்ப பூக்கள் நிறைந்த அடர்ந்த காட்டுப்பகுதியாக இருந்தது. அதை சீரமைத்து தனது தந்தை பெயரின் ஒரு பகுதியான 'சாண்டி' என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி உப்பு தயாரிக்கத் தொடங்கினார். அதில் அந்த பகுதியை சேர்ந்த வர்கள் பணிபுரிந்தனர்.

    1993-ம் ஆண்டு ஆவணி மாதம் செவ்வாய்க்கிழமை தினத்தன்று நண்பர் ஒருவருடன் திருப்பதி ஏழுமலையானை வழிபட செல்வராஜ் சென்றிருந்தார். அங்கு அவர் தூங்கிக்கொண்டிருந்தபோது அவரது கனவில் சில காட்சிகளும், உத்தரவு ஒன்றும் வந்தது. 'நீ உப்பளம் நடத்திவரும் பகுதியில் நான் இருக்கிறேன். அங்கு 3 சுயம்பு உள்ளது. அவற்றை எடுத்து வழிபடவும்' என்று கனவில் அசரிரீயாக கூறப்பட்டது.

    உப்பளத்தின் காட்சிகளும் அவரது கனவில் பதிந்தன. அதே நினைவோடு சென்னை திரும்பிய செல்வராஜ், தனது உப்பளம் பகுதிக்கு சென்றார். கனவில் கண்ட இடத்தில் சிறிது தூரம் நடந்ததும் அவர் முன்பு பிரகாசமாக ஒளி தோன்றியது. அந்த இடத்தில் 2 பெரிய நல்ல பாம்புகள் இருந்தன. அந்த 2 பாம்புகளும் கிழக்கு பக்கம் ஒன்றும், மேற்கு பக்கம் ஒன்றுமாக இரண்டு பக்கம் பிரிந்து சென்றன. அந்த இடத்தில் நிச்சயம் ஏதோ ஒரு மகத்துவம் இருப்பதாக செல்வராஜ் நினைத்தார்.

    அந்த இடத்தை தோண்ட உத்தரவிட்டார். அங்கு 3 பெரிய சுயம்புகள் வெளிப்பட்டன. அதில் ஒரு சுயம்பை எடுத்து சற்று நகர்த்தி முத்தாரம்மனுக்கு கருவறை உருவாக்கி பெரிய ஆலயம் ஒன்றை கட்டினார். அந்த ஆலயத்தின் ஒரு பகுதியில் மற்றொரு சுயம்பை வைத்து விநாயகர் ஆலயமும், இன்னொரு சுயம்பை வைத்து ஆதிசேஷன் ஆலயமும் அமைத்தார்.

    முத்தாரம்மன் கருவறையில் வைக்கப்பட்ட சுயம்பு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தபடி உள்ளது. இதன்மூலம் அந்த சுயம்பும், சுயம்பு முத்தாரம்மனும் மிக மிக சக்தி வாய்ந்தது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திருச்செந்தூர் அருகே உள்ள குலசை முத்தாரம்மனின் அம்சமாக இந்த முத்தாரம்மன் கருதப்படுகிறாள். திருவேற்காடு ஐயப்பசாமி அறிவுறுத்தலின் பேரில் திருமுருகன் பூண்டியில் தயாரான இந்த முத்தாரம்மனின் சிலை அமைப்பு கம்பீரமானது. நிறையபேரின் கனவில் இந்த அம்மன் சென்று தனது ஆலயத்துக்கு வரவழைத்துள்ளாள் என்பது மெய் சிலிர்ப்புடன் இன்றும் பேசப்படுகிறது.

    கோதண்டபானி குருக்கள் என்பவரை அங்கு பூஜைகள் செய்வதற்காக செல்வராஜ் நியமனம் செய்துள்ளார். இதன் மூலம் அந்த முத்தாரம்மன் ஆலயத்தில் ஆகம விதிகளுடன் சிறப்பான பூஜைகள் தினமும் நடந்து வருகின்றன.

    உப்பளம் இருந்த இடம் ஆலயமாக மாறிய நிலையில் அங்கு பணிபுரிந்து வந்த உப்பள தொழிலாளர்கள் சாண்டி நிறுவன கோவில் என்று அதை அழைக்கத் தொடங்கினார்கள். நாளடைவில் அது சாண்டி கோவில் என்று மாறிப்போனது. இந்த ஆலயத்துக்கு செல்லும் நுழைவுப்பாதையில் ராஜ கணபதி விநாயகர் கோவில் மற்றும் புற்றுக்கோவில் தனித்தனியாக உள்ளன.

    முத்தாரம்மன் ஆலயத்தின் நுழைவுவாயில் அருகே பெருமாள் பாதம் வைக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் ஆலய கருவறையில் சுமார் 4 மணிநேரம் வைக்கப்பட்டு பூஜைகள் செய்து கொண்டுவரப்பட்டு இந்த பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த பாதத்தின் கீழ் திருப்பதி, ஸ்ரீரங்கம் ஆலயங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட மண்ணும் வைக்கப்பட்டுள்ளது.

    முத்தாரம்மன் ஆலயத்தின் எதிரே நவக்கிரகங்களுக்கு தனி கோவில் கட்டியுள்ளனர். டெல்டா மாவட்டங்களில் உள்ள நவக்கிரக ஆலயங்களில் இருந்து மண் எடுத்து வந்து இந்த நவக்கிரகங்களின் சிலைகளுக்கு கீழ் வைக்கப்பட்டுள்ளது. இங்கு நவக்கிரகங்கள் தங்கள் மனைவியுடன் சேர்த்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.

    இப்படி பல்வேறு சிறப்புகளுடன் இந்த முத்தாரம்மன் ஆலயம் திகழ்கிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த ஆலயத்துக்கு தினமும் ஏராளமானோர் சென்று வழிபட்டு வருகிறார்கள். இந்த ஆலயத்தின் ஒரு பகுதியில் சித்தர் ஒருவர் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட ஆச்சரிய சம்பவம் கடந்த 2001-ம் ஆண்டு மார்கழி மாதம் உத்திரம் நட்சத்திரம் தினத்தன்று நடைபெற்றது.

    முத்தாரம்மன் ஆலயம் கட்டப்பட்டு சுமார் 7 ஆண்டுகள் கடந்த நிலையில் ஒருநாள் செல்வராஜ் அங்கு வழிபாடுகளை முடித்துவிட்டு வெளியில் வந்துகொண்டு இருந்தார். அப்போது சற்று தொலைவில் முள்காட்டுப்பகுதியில் பளீரென மஞ்சள் நிறத்தில் ஒளி வீசியது. அதை பார்த்ததும் செல்வராஜுக்கு ஆச்சரியமாக இருந்தது. 'அது என்ன மஞ்சள் நிறத்தில் ஒளி வருகிறது' என்று கேட் டார். பிறகு அந்த பகுதிக்கு செல்ல முடிவு செய்தார்.

    அடர்ந்த முள் காடாக இருந்த அந்த பகுதியில் தொழிலாளர்கள் சுத்தம் செய்து வழி ஏற்படுத்தி கொடுத்தனர். முத்தாரம்மன் ஆலயத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் மஞ்சள் ஒளி ஏற்பட்ட பகுதிக்கு பாதை அமைக்கவே சுமார் 2 மணிநேரம் ஆகிவிட்டது. அந்த பாதை வழியாக செல்வராஜ் சென்று பார்த்தபோது ஒரு இடத்தில் சாமந்தி பூ மாலைபோட்டு யாரோ வழிபாடு செய்திருப்பது போன்று தெரிந்தது. ஆச்சரியமடைந்த செல்வராஜ் இதில் ஏதோ மகிமை இருக்கிறது என்பதை உணர்ந்தார்.

    அந்த இடத்தில் விளாமரம் ஒன்று வளர்ந்து இருந்தது. பொதுவாக விளாமரத்தின் கீழ் அமர்ந்து சித்தர்கள் பூஜை செய்வது வழக்கம் என்று சொல்வார்கள். எனவே அங்கு ஏதோ ஒரு சித்தர் வந்திருக்கலாம் என்று நினைத்தார். அங்கு காணப்பட்ட சாமந்திப்பூ புத்தம் புதிதாக அன்றுதான் போடப்பட்டது போன்று இருந்ததால் அவரது ஆர்வம் அதிகரித்தது. அங்கு பூமியை தோண்டச்செய்தார். சிறிது பள்ளம் தோண்டியதுமே சித்தர்கள் பயன்படுத்தும் தண்டம், இருக்கை, மான் தோல், புலித்தோல், ஆகியவை ஒவ்வொன்றாக கிடைத்தன. இதன்மூலம் அங்கு சித்தர் ஒருவர் வாழ்ந்தது உறுதியானது.

    இந்த சித்தர் யார்? அவர் பெயர் என்ன? எந்த காலக்கட்டத்தில் அவர் வாழ்ந்தார்? என்னென்ன அற்புதங்கள் செய்தார்? என்பன போன்ற எந்த தகவல்களும் தெரியவில்லை. ஆனால் அந்த சித்தர் சுமார் 800 முதல் 1000 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் மிகப்பெரிய ஆசிரமம் அமைத்து வாழ்ந்திருக்க வேண்டும் என்பது மட்டும் தெள்ளத்தெளிவாக உறுதியானது.

    அந்த பகுதியில் சித்தர் பயன்படுத்திய பொருட்கள் கிடைத்த இடத்தில் மேலும் 3 அடி தோண்டியபோது செங்கல் கட்டுமான அமைப்புகள் தெரிந்தன. அந்த செங்கல்கள் 2 இஞ்ச் அகலம் கொண்டதாக இருந்தது. தற்போது நாம் பயன்படுத்தும் செங்கல்கள் 4 இஞ்ச் அகலம் கொண்டவை. இந்த 4 இஞ்ச் செங்கல் ஆங்கிலேயர்களால் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.

    அதற்கு முன்பு தமிழர்கள் 2 இஞ்ச் அகல செங்கலைத்தான் பயன்படுத்தினார்கள். இந்த வகை செங்கல் தயாரிக்கப்படுவது நிறுத்தப்பட்டே சுமார் 400 ஆண்டுகள் ஆகிறது. எனவே அந்த இடத்தில் சித்தரின் ஆசிரமம் 800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது தொல்லியல் சான்று மூலமும் உறுதியானது. என்றாலும் அங்கு தவம் இருந்து சித்திபெற்ற சித்தர் யார் என்பது மட்டும் இன்று வரை தெரியவில்லை.

    அந்த சித்தர் யார் என்பதை கண்டுபிடிக்க ஆய்வு செய்தபோது பல ஆச்சரியமான தகவல்கள் வெளிப்பட்டன. 18 சித்தர்களில் ஒருவரான குதம்பை சித்தர் (மயிலாடுதுறையில் இவர் ஐக்கியமானார்) இந்த இடத்துக்கு வந்து நீண்ட நாட்கள் தங்கி இருந்து இந்த சித்தரை வழிபட்டு பூஜைகள் செய்ததாக தெரியவந்துள்ளது. இதன்மூலம் இந்த இடம் 800 ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய புண்ணிய பூமியாக திகழ்ந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. செல்வராஜுக்கு ஞானம் வழங்கிய சாக்கு சித்தரும் அந்த இடத்தில் சக்தி வாய்ந்த சித்தர் வாழ்ந்ததை உறுதிப்படுத்தினார்.

    அந்த இடத்தில் சிறிய குடில் அமைத்து சித்தருக்கு தனி ஆலயத்தை செல்வராஜ் உருவாக்கி இருக்கிறார். அங்கு தினசரி காலை 7 மணி முதல் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலேயர்கள் காலத்தில் அந்த இடத்தில் தென்னிந்தியாவின் உப்பு தயாரிப்பு நிறுவன தலைமை அலுவலகத்தை ஆங்கிலேயர்கள் அமைத்து இருந்தனர். இதில் வேலைபார்த்த தமிழர்கள் சித்தர் வாழ்ந்த இடத்தில் காணப்பட்ட ஒரு கல்லுக்கு தினமும் பூஜை செய்து வழிபாடுகள் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இப்படி அந்த சித்தர் பல நூற்றாண்டுகள் அந்த இடத்தில் புதைந்து கிடந்துள்ளார். செல்வராஜுக்கு தைப்பூசம் தினத்தன்று அவர் காட்சி கொடுத்து தன்னை வெளிப்படுத்திக்கொண்டதை சிறப்பாக சொல்கிறார்கள். சாக்கு சித்தர், பாலகணபதி சுவாமிகள் ஆகியோர் இங்கு நீண்ட நாட்கள் தங்கி தவம் இருந்துள்ளனர். அவர்களையும் செல்வராஜ் பராமரித்து அவர்கள் பரிபூரணம் ஆனபிறகு சாக்கு சித்தருக்கு தூத்துக்குடியிலும், பாலகணபதி சுவாமிகளுக்கு ராமநாதபுரம் அருகில் சாத்தான்குளம் என்ற கிராமத்தில் அதிஷ்டானம் அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவேற்காட்டில் 116 வயது வரை வாழ்ந்த புகழ்பெற்ற மகான் ஐயப்ப சுவாமிகள் அடிக்கடி அத்திப்பட்டு புதூருக்கு வந்து இந்த சித்தரை வழிபடுவார். குறிப்பாக பவுர்ணமி நாட்களில் வந்து தன் கைப்பட பிரசாதம் தயாரித்து படைத்து சித்தரை வழிபட்டு செல்வார். அவர் 35-க்கும் மேற்பட்ட தடவை அந்த சித்தர் கூடத்தில் அமர்ந்து நீண்ட தியானம் செய்துள்ளார்.

    சமீபத்தில் ஷீரடி சாய்பாபாவின் வளர்ப்பு மகளான 108 வயது பெண்மணி இந்த ஆலய நிர்வாகத்தை தொடர்புகொண்டு பேசினார். சித்தர் வாழ்ந்த பகுதி தனது கனவில் வந்ததாக தெரிவித்தார். அதோடு தனது இறுதி காலத்தில் அத்திப்பட்டு புதூருக்கு வந்து சித்தர் பீடம் அருகே தங்கி விட விரும்புவதாகவும் கூறியுள்ளார். அவரது கனவில் அடிக்கடி இந்த சித்தர் காட்சி கொடுப்பதாக கூறப்படுகிறது. இதில் இருந்து பெயர் தெரியாத அந்த சித்தர் எந்த அளவுக்கு மகிமை பெற்றவராக இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

    இவர்களை போல ஏராளமான ஆன்மீகவாதிகள் அந்த சித்தர் பீடத்துக்கு வந்து தங்களை மேம்படுத்தியுள்ளனர். அந்த சித்தர் வாழ்ந்த இடத்துக்கு செல்லும்போதே அதிர்வலைகளை உணர முடியும். மிகச்சிறப்பாக இந்த சித்தர் சன்னதி பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கு தியானம் செய்ய நல்ல வசதி இருக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணிக்குள் சென்று வழிபட்டு வரலாம். இரவில் அங்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.

    பவுர்ணமி நாட்களில் இங்கு சித்தர் சன்னதியிலும், முத்தாரம்மன் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக பவுர்ணமி தினத்தன்று காலையில் குழந்தை பாக்கியத்திற்காக சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. அங்கு பூஜை செய்து தரப்படும் வெண்ணையை பயன்படுத்தினால் குழந்தை பாக்கியம் உறுதி என்று நம்புகிறார்கள். அந்த பாக்கியத்தை பெற்ற பல பெண்கள் தங்கள் குழந்தையுடன் வந்து நன்றி செலுத்திவிட்டு செல்வதை காண முடிந்தது.

    வருகிற 6-ந்தேதி இந்த சித்தர் பீடத்தில் வருசாபிஷேகம் செய்ய உள்ளனர். ஆனி மாதம் அஸ்தம் நட்சத்திரம் நாளில் இந்த சித்தருக்கு மகா குருபூஜை நடத்தப்படுகிறது. வாய்ப்பு இருப்பவர்கள் சுயம்பு சித்தரை சித்தரை வணங்கி வந்தால் நிச்சயம் நல்லதே நடக்கும்.

    இந்த முத்தாரம்மன் ஆலயம் மற்றும் சுயம்பு நாதர் சித்தர்பற்றி மேலும் தகவல்களை கோதண்ட பாணி குருக்களிடம் 9840529611, 7401453839 என்ற எண்களில் தொடர்புகொண்டு பெறலாம்.

    Next Story
    ×