search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    வாங்க வயிறார சாப்பிட்டு போங்க: மக்கள் மனதை கவரும் மனித நேய உணவகம்
    X

    வாங்க வயிறார சாப்பிட்டு போங்க: மக்கள் மனதை கவரும் மனித நேய உணவகம்

    • கட்டணம் எல்லாம் எதுவும் கிடையாதுங்க... உங்கள் விருப்பம்தான்.
    • 8 மாதம் உருண்டோடி விட்டது. இப்போது தினமும் சராசரியாக 100 பேர் சாப்பிடுகிறார்கள்.

    நெடுஞ்சாலைகளில் பயணித்தவர்களுக்கு பல அனுபவங்கள் இருக்கும். குறிப்பாக உணவு விஷயத்தில் உணர்வு பூர்வமான சில அனுபவங்கள் உண்டு.

    ரோட்டோரங்களில் பல உணவகங்கள் கை நீட்டி அழைப்பது போல் இருக்கும். ஓட்டல்களின் முன்பு காவலாளிகள் நின்று கொண்டு கையில் ஒரு பச்சைக்கொடியும், வாயில் ஒரு விசிலும் வைத்துக்கொண்டிருப்பார்கள்.

    ரோட்டில் செல்பவர்களை பார்த்ததும் கொடியை அசைத்தும், விசிலை ஊதியும் வாங்க சாப்பிடலாம் என்று சைகையால் அழைப்பார்கள். கார்களில் சொகுசாக செல்பவர்கள் கடைகளை பார்த்து வாகனங்களை நிறுத்திவிட்டு சாப்பிட சென்று விடுவார்கள். அவர்களை பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை.

    அதேநேரம் இரு சக்கர வாகனங்களிலும், சைக்கிள்களிலும், ஏன் லாரிகளில் கூட பயணிக்கும் நடுத்தர வர்க்கத்தினரும் ஏழை பாழைகளும், தொழிலாளிகளும் அந்த உணவகங்களை பார்த்தால் அருகில் செல்லவே கூச்சப்படுவார்கள். அதற்கு காரணம் அது வசதி படைத்தவர்கள் மட்டுமே சாப்பிட முடியும். அங்கு பரிமாறப்படும் உணவுகளை பெயர் சொல்லி கேட்கக்கூட பலருக்கு தெரியாது. அதைவிட முக்கியமாக பெரிய ஓட்டல்களுக்கு சென்றால் நம் பாக்கெட்டில் இருக்கும் பணம் போதாதே என்ற தயக்கமும் அவர்களின் கால்களை அந்த பக்கமாக நடக்கவிடாது.

    அதே சாலையில்தான் வாருங்கள்... வயிறாற சாப்பிடுங்கள்... காசைப்பற்றி கவலை இல்லை. உங்களால் முடிந்தால் முடிந்த அளவு உண்டியலில் காசை போடுங்கள். காசில்லையா வயிறாற சாப்பிட்டு விட்டு செல்லுங்கள்.

    இப்படி ஒரு ஓட்டல் இருந்தால் எப்படி இருக்கும். இந்தக்காலத்தில் இப்படி ஒரு ஓட்டல் நடத்துவதற்கு அவனுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு என்றுதான் கேட்க தோன்றும். ஆனால் உண்மையிலேயே இப்படியும் ஒரு ஓட்டல் செயல்படுகிறது.

    பாண்டிச்சேரி-திண்டிவனம் நெடுஞ்சாலையில் திண்டிவனத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் ரோட்டோரத்தில் மனித நேயம் உணவகம் என்ற பெயர் பலகையுடன் அந்த ஓட்டல் காட்சியளிக்கிறது. ஓட்டல் என்றவுடன் பெரிய ஓட்டல்களில் பார்ப்பதை போல் சொகுசான இருக்கைகள், சுழன்று வீசும் மின்விசிறிகள், குளிர்ச்சியை அள்ளி தெறிக்கும் குளிரூட்டிகள் அதெல்லாம் கிடையாது.

    4 மரக்குச்சிகளை ஊன்றி மேலே 4 தகர கொட்டைகளை போட்டு கீழே அமர்ந்து சாப்பிட சில நாற்காலிகளை போட்டு வைத்திருக்கிறார்கள்.

    காலை 7 மணிக்கு சென்றால் மல்லிகைப்பூ போன்ற ஆவி பறக்கும் இட்லி, பொங்கல், வடை மூன்றும் கிடைக்கும். இதில் இதைத்தான் சாப்பிட வேண்டும். இவ்வளவு சாப்பிட வேண்டும் என்று அளவெல்லாம் கிடையாது. அங்கு இளைஞர் ஒருவர் பரிமாறி கொண்டிருப்பார். எவ்வளவு இட்லி வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளலாம். எவ்வளவு பொங்கல் வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளலாம். உங்கள் வயிறு கொள்ள வேண்டும் அவ்வளவுதான். பசி ஆறியதும் கையை கழுவிவிட்டு தம்பி பில் எவ்வளவு என்று கேட்டால் அந்த இளைஞர் சிரிக்கிறார்.

    கட்டணம் எல்லாம் எதுவும் கிடையாதுங்க... உங்கள் விருப்பம்தான். உங்களால் எவ்வளவு கொடுக்க முடியுமோ அதை அதோ இருக்கும் அந்த உண்டியலில் போடுங்கள். பணம் இல்லையென்றாலும் கவலை படாதீங்க. வயிறு நிறைந்தால் போதும் பசி ஆறி சந்தோஷமாக செல்லுங்கள் என்கிறார்.

    பசி ஆறியவர்கள் ஆச்சரியத்துடன் மவராசனாக வாழ்வாயப்பா என்று வாயாரா வாழ்த்தி செல்கிறார்கள் அந்த பூவரசனை.

    ஆம் இப்படி ஒரு வித்தியாசமான ஓட்டலை நடத்தும் அந்த வாலிபரின் பெயர் பூவரசன். 26 வயதாகும் இந்த இளைஞருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. குடும்பமும் ஜமீன்தார் குடும்பம் அல்ல. பெற்றோர் கூலி வேலைக்கு சென்றால்தான் வீட்டில் சாப்பாடு கிடைக்கும் என்ற நிலைதான். உடன் பிறந்த 4 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

    பூவரசன் டிப்ளமோ படித்து முடித்து இருக்கிறார். அவருக்கு மட்டும் இப்படி ஒரு வித்தியாசமான ஆசை. அதுவும் சாமானியர்களின் பசி பிணி போக்கும் ஆசை. உண்மையான இந்த மனித நேயத்தால்தான் அந்த உணவகமும் மனித நேயம் என்ற பெயரில் செயல்படுகிறது.

    பூவரசனுக்கு இப்படி ஒரு புது எண்ணம் உருவானது எப்படி? என்பது சுவாரசியமானது. சினிமாவை பார்த்து திருடுபவர்களும் இருக்கிறார்கள். திருந்துபவர்களும் இருக்கிறார்கள். சேவை செய்பவர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த பூவரசனும் ஒரு சாட்சி.

    'கூட்டத்தில் ஒருவன்' சினிமா பார்க்க சென்றுள்ளார். அந்த படத்தில் வேலை இல்லாத பட்டதாரியாக கதாநாயகன் இருக்கிறார். வேலை தேடி அலைகிறார். ரூ.6 ஆயிரம், ரூ.7 ஆயிரம் சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. அந்த சம்பளத்தை கொண்டு எதுவும் செய்ய முடியாமல் தவித்து போகிறார்.

    காதலித்து அதிலும் தோல்வியை தழுவுகிறார். வீட்டிலும் மரியாதை இல்லை. சமூகத்திலும் மரியாதை இல்லை என்ற நிலையில் இல்லாதவருக்கு உதவி செய்யலாமே என்ற உணர்வோடு அமுத சுரபி என்ற உணவகத்தை தொடங்குவார். அதில்தான் உணவின் விலை உங்கள் விருப்பம். பணம் இல்லையென்றாலும் பசி ஆறலாம் என்ற பெயரோடு உணவகத்தை தொடங்கி நடத்துவாராம். அது விரிவடைந்து மிகப்பெரிய அளவில் பேர் பெற்று இருக்கிறது. அந்த தாக்கம்தான் பூவரசனின் இதயத்திலும் பதிந்து இருக்கிறது. ஏற்கனவே வேலை இல்லாமல் தவித்து கொண்டிருந்த பூவரசன் தானும் அந்த படத்தில் வருவதை போல உணவகம் ஒன்றை தொடங்கினால் என்ன? என்று நினைத்திருக்கிறார்.

    ஆனால் உணவகம் தொடங்குவது என்றால் சாதாரண விஷயமா? அவர் சம்பாதித்த ரூ.70 ஆயிரம் பணத்தில் கிரைண்டர் மற்றும் நாற்காலிகள், சமையலுக்கான பாத்திரங்கள் ஆகியவற்றை வாங்கி இருக்கிறார். பொருட்கள் தயார். சமைப்பதற்கு யாரை அழைப்பது?

    பூவரசனின் செயலை வீட்டில் யார்தான் ஆதரிப்பார்கள். பிசினசாக தொடங்கினால் நிச்சயம் ஊக்கமளிப்பார்கள். இதுதான் பிசினஸ் இல்லையே, எப்படி ஆதரிப்பார்கள். இருந்தாலும் தளராமல் தனது திட்டத்துக்கு அம்மாவை உதவிக்கு அழைத்து இருக்கிறார். என்னதான் இருந்தாலும் பெற்றவளாச்சே! பிள்ளையின் சந்தோஷம்தானே அவருக்கும் சந்தோஷம். எனவே மகனின் மகிழ்ச்சிக்காக அவரே சமையல் செய்து தருவதாக கூறி இருக்கிறார்.

    காலையில் இட்லி, பொங்கல், வடை, சட்னி, சாம்பார். மதியம் தக்காளி சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம். மதிய சாப்பாடு மட்டும் என்று மெனு மாறிக்கொண்டே இருக்குமாம். இதுபற்றி பூவரசன் கூறியதாவது:-

    படத்தை பார்த்து அதேபோல் நாமும் ஆரம்பிக்க வேண்டும் என்ற ஒரு ஆசையில் ஆரம்பித்து விட்டேன். ஆரம்பத்தில் 10 பேர் 15 பேர் சாப்பிட்டார்கள். தொடர்ந்து நம்மால் இதை நடத்த முடியுமா என்ற தயக்கமும் வந்தது. ஒரு கட்டத்தில் விட்டு விடலாம் என்ற முடிவுக்கும் வந்தேன். ஆனால் மறுநாள் சாப்பாட்டுக்கு யார் மூலமாவது உதவி கிடைக்கும். அப்புறம் மறுநாளும் சமைக்க தொடங்குவேன். இதேபோல் விட முடியாத அளவுக்கு உதவிகள் வந்ததும் தொடர்ந்து நடத்த தொடங்கினேன்.

    8 மாதம் உருண்டோடி விட்டது. இப்போது தினமும் சராசரியாக 100 பேர் சாப்பிடுகிறார்கள். ரோட்டில் குப்பை பொறுக்குபவராக இருந்தாலும் சரி, தொழிலாளர்கள், மாணவர்கள் என்று யாராக இருந்தாலும் இங்கு வந்து பசியாறலாம். அவர்கள் பசியாறிவிட்டு கையில் இருக்கும் 5 ரூபாய், 10 ரூபாயை உண்டியலில் போடுவதும் உண்டு.

    காசே இல்லாமல் இருப்பவர்கள் சாப்பிட்டு விட்டு தயங்கும் போது நானே சொல்வேன் எதை பற்றியும் யோசிக்காதீர்கள். நன்றாக சாப்பிட்டு விட்டீர்களா... போய் வாருங்கள் என்று அனுப்பி விடுவேன்.

    அதே நேரம் சமூகத்தில் இந்த மாதிரி உதவிகள் மனித நேயத்தோடு செய்யும்போது, அதே மனித நேயத்தோடு உதவுவதற்கும் பலர் இருக்கிறார்கள் என்பதையும் அனுபவபூர்வமாக பார்த்து வருகிறேன். ஆனால் நாம் செய்வது மற்றவர்களுக்கு சரியாக போய் சேருமா என்பதற்காக பலர் செய்யவும் தயங்குகிறார்கள்.

    அப்படித்தான் ஒருநாள் காரில் ஒருவர் வந்தார். கடை முன்பு காரை நிறுத்திவிட்டு இட்லி என்ன விலை என்று கேட்டார். நாங்கள் அவரிடம் ஐயா.. விலை எதுவும் வைக்கவில்லை. சாப்பிட்டு செல்லலாம். விருப்பம் போல் ரூபாய் கொடுக்கலாம் என்ற விவரத்தை சொன்னேன். அதை கேட்டதும் அவர் எந்த ரியாக்சனையும் காட்டவில்லை. ஆனால் சாப்பிடாமலேயே திரும்பிவிட்டார். எனக்கும் என்னவென்று புரியவில்லை.

    திரும்பி சென்றவர் சிறிது நேரத்தில் மீண்டும் வந்தார். தனது காரில் இருந்து 8 மூட்டை அரிசி பையை இறக்கி வைத்து விட்டு இதையும் சமைத்து கொடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார். பெயரை கேட்டதும், அதெல்லாம் உனக்கு எதற்கு தம்பி என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.

    இதேபோல் ஒருவர் இருவர் அல்ல. பலர் பலவிதமான உதவிகளை செய்கிறார்கள். ஒரு நாள் ஒருவர் சுமார் 10 கிலோவுக்கும் மேல் காய்கறிகள் இருக்கும். அதை வாங்கி என் கடையின் முன்பு வைத்துவிட்டு சற்று தூரம் தள்ளி போய் நின்று எனக்கு போன் செய்தார். தம்பி கடையின் முன்பு கொஞ்சம் காய்கறி வைத்திருக்கிறேன். அவரிடமும் கேட்டபோது பெயர் விவரம் எதையும் சொல்ல மறுத்துவிட்டார்.

    மிக சாதாரணமான சிலர் தங்கள் பிறந்த நாளையொட்டி ரூ.100 முதல் ரூ.500 வரை கொடுத்து முடிந்தவரை இதற்கு சமையல் செய்து கொடுங்கள் என்று சொல்லிவிட்டு செல்கிறார்கள் என்றவர் காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை டிபன் சாப்பிட்டு கொள்ளலாம். மதியம் 12 மணியில் இருந்து 2 மணி வரை மதிய சாப்பாடு சாப்பிட்டுக் கொள்ளலாம் என்றார் சிரித்துக்கொண்டே...

    இளைஞர்களில் இவர் வித்தியாசமானவர். இவர் பூவுக்கு அரசன் அல்ல. பூமிக்கு அரசன் என்பதே சரியாக இருக்கும். நாட்டை ஆளும் அரசன் தன் நாட்டில் உள்ள மக்கள் பசி இல்லாமல் வாழ வேண்டும் என்று நினைப்பான். இவரும் அப்படியே பசி இல்லாத ஒரு சமூகம் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த பணியை செய்து வருகிறார்.

    வயிற்றுக்கு சோறிட வேண்டும்... இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்று சமூகத்தை பார்த்து அக்கறையோடு பாடிய பாரதியின் கனவு ஆங்காங்கே ஏதோ ஒரு வடிவத்தில் நனவாகி கொண்டேதான் இருக்கிறது.

    Next Story
    ×