என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சிறப்புக் கட்டுரைகள்
ஜனநாயக சோசலிச சமுதாயம் அமைப்போம் என்று புவனேஸ்வர் மாநாட்டில் முழங்கினார் காமராஜர்
- பெரிய பதவிகள் வந்துவிட்டால் சில பேருடைய குணாதிசயங்களும் கொள்கைகளும் மாறிவிடும் ஆனால் காமராஜர் அப்படிப்பட்டவர் அல்ல.
- அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி என்பது பிரதமருக்கு ஆலோசனை வழங்குகிற பதவியாகும்.
எளிமையான வெள்ளை நிற கதர் ஆடையில் காட்சியளித்த காமராஜரை கண்டபோது, மகாத்மா காந்தியே நேரில் வந்து காட்சி அளித்தது போல் இருந்தது. அங்கிருந்த மக்களை நோக்கி கும்பிட்டபடியே எல்லோரது வரவேற்பையும் ஏற்றுக்கொண்டார் காமராஜர்.
"காமராஜ் ஜிந்தாபாத், காங்கிரஸ் ஜிந்தாபாத்" என்று திரண்டு இருந்த மக்கள் ஒரு சேர கோஷமிட்டனர். ஊர்வலம் புவனேஸ்வர நகர வீதிகளின் வழியே மூன்று மைல் தூரத்தை கடந்து மாநாடு நடைபெறுகின்ற "கோபந்த்" நகரை மாலை 5.30 மணி அளவில் அடைந்தது.
ஜீப்பில் இருந்து இறங்கிய காமராஜர் அங்கே நிர்மாணிக்கப்பட்டு இருந்த தியாகி அமரர் "உத்கல் மணி கோபந்து தாஸ்" சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் மாநாட்டு பந்தல் மேடையில் ஏறி வருகை தந்திருந்த பல்வேறு மாநிலங்களை சார்ந்த தலைவர்கள், தொண்டர்கள் அனைவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டார் காமராஜர். அங்கே திரண்டு இருந்த 2 லட்சம் பேர்களும் "காமராஜ் நாடார் கி ஜே, காமராஜ் நாடார் கி ஜே" என முழக்கமிட்டனர். இப்படி ஒரு வரவேற்பும் வாழ்த்தும் இதுவரை நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாடுகளில் வேறு எவருக்கும் கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காமராஜ் எப்போது பேசுவார், அவர் எந்த மொழியில் பேசப் போகிறார், என்ன பேச போகிறார் என்ற எண்ணம் தான் எல்லோருடைய மனதிலும் சிந்தனையாக ஓடிக் கொண்டிருந்தது. இரண்டு நாள் கழித்து அதாவது 9-ந் தேதி மாலையில் தான் காமராஜர் பேசினார். அதுவரை காமராஜர் எல்லோரது பேச்சையும் கூர்ந்து கவனித்தார். அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டார்.
மேடையில் அமர்ந்தபடியே கூடியிருந்த மக்களின் மன ஓட்டத்தை தனது பார்வையாலேயே அளந்து கொண்டு இருந்தார் காமராஜர். ஏதோ ஒரு புதிய செய்தியினை இந்த நாட்டு மக்களுக்கு சொல்லப் போகிறார். கட்சியையும் நாட்டையும் வலுப்படுத்துகிற வகையில் பேசப் போகிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது.
ஜனவரி பத்தாம் தேதி மாநாடு முடிவடைய இருந்ததால் காமராஜர் ஜனவரி ஒன்பதாம் தேதி தான் பேசினார்.
இந்திய தேசிய காங்கிரசுக்கு சாதாரண தொண்டனாகிய என்னை தலைவராக தேர்ந்தெடுத்து அதை நடத்திச் செல்லும் பொறுப்பினை எனக்கு அளித்து உள்ள உங்கள் அன்பிற்கும் என் மேல் வைத்துள்ள நம்பிக்கைக்கும் முதற்கண் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம் இந்த மாபெரும் பொறுப்பில் திறம்பட செயல்பட உங்களின் அன்பான ஆதரவையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன் என்று தனது சிறப்பான உரையை தொடங்கினார் காமராஜர்.
இதனை அப்படியே சி. சுப்ரமணியம் அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொன்னபோது எழுந்த கரகோஷம் விண்ணைப் பிளந்தது. இந்தி பேச தெரியாத ஒரு தலைவர், தனது தாய் மொழியில் பேசி இப்படி அபரிமிதமான வரவேற்பினை பெற்றதற்கு காரணம் காமராஜரின் நேர்மை பற்றியும் எளிமை பற்றியும் நிர்வாக திறமை பற்றியும் அவரது சாதனைகள் பற்றியும் அந்த மக்கள் ஏற்கனவே அறிந்திருந்ததுதான்.
இந்திய சுதந்திரப் போரில் உயிர்நீத்த எண்ணற்ற தியாகிகளுக்கும் சீனப் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கும் எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய விடுதலைக்காக நாம் நிகழ்த்திய வரலாற்று சிறப்புமிக்க முதல் கட்ட போரை போல நாம் இப்பொழுது இந்தியாவில் நிலவும் வறுமையை அகற்றிடவும் பொருளாதாரத்தை வளப்படுத்திடவும் நிகழ்த்த இருக்கின்ற போர் இரண்டாவது கட்டப் போராகும். இதனை நாம் நடத்தியே தீர வேண்டும். இந்த போரின் அவசியத்தையும் அவசரத்தையும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் உணர்ந்தாக வேண்டும்.
நமது பொருளாதார முன்னேற்ற நடைமுறையில் கவலைகள் தரும் சில அம்சங்கள் உள்ளே புகுந்துவிட்டன. செல்வத்தைச் சேர்த்து தங்களது பொருளாதாரத்தை வலுப்படுத்திக்கொள்ள சில ஆதிக்க சக்திகள் முற்படுகின்றன. அந்த தீய சக்திகளின் போக்கினை நாம் முதலிலே அதனை முறியடித்தாக வேண்டும் என முழங்கினார் காமராஜர்.
நம் நாட்டிலே உள்ள பல தொழில்களை தங்களது கைவசப்படுத்திக் கொண்டு ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வரிஏய்ப்பு செய்து கொண்டும் உணவு பொருள்களில் கலப்படம் செய்து கொண்டும் இருக்கிற அடாத செயல்களை முதலிலே தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும். எந்த பொருளுக்கு பற்றாக்குறை உள்ளதோ அதனை கள்ளச் சந்தையில் விற்பதால் வர்த்தகத்தில் நேர்மை குறைந்து வியாபார ஒழுங்கே சீர் கெட்டுப் போயிருக்கிறது. இவற்றை முற்றிலும் ஒழித்திட நாம் தக்க நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
செல்வம் சிலரிடம் குவிவதையும் அது வம்சம் வாரியாக தொடர்வதையும் தடுத்து நிறுத்தி ஆக வேண்டும். இதனை தடுக்காவிட்டால் நமது நாட்டின் முன்னேற்றம் நிச்சயம் தடைப்பட்டு போய்விடும். பணக்காரர் மேலும் பணக்காரர் ஆவதிலும் ஏழை மேலும் ஏழையாவதிலும் தான் இது போய் முடியும் என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும் என முழங்கினார் காமராஜர்.
இந்திய நாட்டின் சட்டதிட்டங்களும் நிர்வாக நடைமுறைகளும் சோசலிச லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என்பதிலே ஒவ்வொரு மாநில அரசும் முனைப்பு காட்ட வேண்டும். ஏகபோகத் தொழில் வளர்ச்சியை தடுத்து நிறுத்தி புதிய தொழில்களை தொடங்கி உற்பத்தியை பெருக்கிட வேண்டும்.
ஒவ்வொரு மாநிலமும் செகண்டரி கல்வி வரை இலவச கல்வியை படிப்படியாக அமல்படுத்திட வேண்டும். காங்கிரஸ் இயக்கம் ஒரு முடிவு எடுத்த பிறகு, அதனை ஏற்று உடன்பட்டு அதன்படி நடக்க வேண்டியது ஒவ்வொரு காங்கிரஸ்காரரின் கடமையாகும். கொள்கை தொடர்பாக நமது இயக்கம் ஒரு முடிவுக்கு வந்த பிறகு, அதனை விமர்சிப்பதும் வெவ்வேறு விதமாக பேசுவதும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி குறை கூறுவதும் ஏற்புடையதல்ல. அது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி விடும். இந்த விஷயத்தில் ஒன்றுபட்டு ஓரணியில் நின்று கட்டுப்பாட்டுடன் செயலாற்றி தேசத்தின் அபிவிருத்தி என்ற திசை நோக்கி நடந்தாக வேண்டும். அதுவே நமது லட்சியமாக இருந்திட வேண்டும் என முழங்கினார் காமராஜர்.
அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் தலைமையின் கீழே பணியாற்றும் பாக்கியம் நமக்கு கிடைத்தது. அவருடைய வழி வந்தவர்கள் நாம் என்பதை நிரூபிக்கும் வகையிலே சிறந்த லட்சியப்பிடிப்போடு ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தாக வேண்டும். அதைத்தான் நமது மக்கள் நம்மிடம் எதிர்பார்க்கிறார்கள்.
"நடத்தையில் எளிமை மனித வர்க்கத்திற்கு சேவை" என்ற மந்திரச் சொல் மகாத்மாவிடமிருந்து நாம் பெற்ற அருங்குணங்கள் ஆகும். நாம் கனவு காணும் நவ இந்தியாவை இந்த இரண்டு குணங்களை கருவியாக கொண்டு வடிவமைப்போம். சோசலிச சமுதாயம் நமது இலக்காக இருக்கட்டும். நமது நாடு மிகப்பெரிய ஜனநாயக நாடு. எனவே அது ஜனநாயக சோசலிசமாக அமையட்டும் என்று பேசி முடித்தார் காமராஜர். இதுவரை சோசலிசம் என்று பேசி வந்த காமராஜர் இப்போது அதனை ஜனநாயக சோசலிசமாக மாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
காமராஜரின் ஆரம்பகால பேச்சுகளில் மாநில வளர்ச்சி தான் நிறைந்திருக்கும். இப்போது அவர் அகில இந்தியாவுக்கும் தலைவர் அல்லவா... எனவே காமராஜரின் பேச்சில் விசாலமான அகில இந்திய பார்வை இருந்தது. எல்லோருக்கும் புரிகிற வகையில் எளிய ஆங்கிலத்தில் இதனை சி. சுப்பிரமணியம் மொழிபெயர்ப்பு செய்ததால் கிடைத்த வரவேற்பும் எழுந்த ஆரவாரமும் அளப்பரியது. ஒரியா மொழியிலும் மொழிபெயர்ப்புத் தரப்பட்டது. காமராஜர் உரையை முடிக்கும் போது எழுந்த கர ஓசை விண்ணை பிளந்தது என்றே கூறலாம்.
இந்த மாநாடு காங்கிரஸ்காரர்கள் மத்தியில் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியது என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. உணர்ச்சி பெருக்காகவே இருந்தது. ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனையும் சிந்திக்க வைத்தது என்றே சொல்லலாம்.
ஒரே ஒரு குறை என்னவென்றால் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு மாநாட்டின் நிகழ்வுகளில் முழுமையாக பங்கேற்க முடியாமல் போனது தான்.
10-ந்தேதி வரை நடைபெற்ற இம்மாநாட்டில் அவரால் கலந்து கொள்ள இயலவில்லை. அவரது உடல் நலம் குன்றியதால் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டார்.
அப்படிப்பட்ட ஒரு துயரமான சூழ்நிலையிலும் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் விவாதங்களில் பங்கேற்று உரையாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு நடைபெற்ற ஒவ்வொரு அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டின் நிறைவிலும் வருகை தந்துள்ள அனைத்து மாநில பிரதிநிதிகளையும் சந்தித்து பேசுவதை நேரு அவர்கள் வழக்கமாகக் கொண்டு இருந்தார். அந்த நிகழ்வு நடைபெறவில்லையே என்ற மனக்குறை வருகை புரிந்த பிரதிநிதிகளுக்கு இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
இனிமேல் நேருவுக்கு எவ்வளவு காலம் ஓய்வு தேவை..? அவரது ஓய்வு காலத்தில் அவரது பணிகளை கவனிக்கப்போவது யார் என்ற கேள்விகள் எழுந்து அது விவாத பொருளாகவே மாறிவிட்டது. இந்த குறையை நீக்கிடவும் நேருவின் பணிச்சுமையை குறைத்திடவும் காமராஜரும் இந்திரா காந்தியும் கலந்து பேசும் லால் பகதூர் சாஸ்திரியை மட்டும் மீண்டும் மந்திரி சபையில் அமர்த்துவது என்று முடிவு செய்து அதை நிறைவேற்றினார்கள். அதன்படி சாஸ்திரி மந்திரி பதவியை மீண்டும் ஏற்றுக் கொண்டார்.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் குறிப்பிடத்தக்க ஒரு தீர்மானம் என்னவெனில் சோசலிச நோக்கம் கொண்ட தலைவர்களும் கட்சிகளும் காங்கிரசில் வந்து இணைய வேண்டும் என்பதுதான் அது... இந்த அழைப்பினை ஏற்று தான் பழம்பெரும் தலைவர் அசோக் மேத்தா காங்கிரசிலே வந்து தன்னை இணைத்துக் கொண்டார். அதேபோல் தமிழகத்தில் பிரபல தொழிற்சங்க தலைவராக விளங்கிய எஸ். எஸ். அந்தோணி பிள்ளையும் காமராஜர் தலைமையில் தன்னை காங்கிரசில் இணைத்துக் கொண்டார். இந்த அழைப்பின் அடிப்படையில் தான் தமிழ் தேசிய கட்சியை கலைத்துவிட்டு 1964-ம் ஆண்டு சொல்லின் செல்வர் ஈ.வே.கி சம்பத் அவர்களும் கவியரசர் கண்ணதாசன் அவர்களும் பல்லாயிரக்கணக்கான பேர்களுடன் வந்து தங்களை காங்கிரசிலே இணைத்துக் கொண்டனர்.
புவனேஸ்வர மாநாட்டு நிகழ்வுகளையும் தீர்மானங்களையும் வரவேற்று இந்தியாவில் உள்ள அனைத்து பத்திரிகைகளும் பக்கம் பக்கமாய் எழுதி தள்ளின.. தமிழகத்திலே ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினத்தந்தி, தினமணி, விடுதலை போன்ற ஏடுகள் விரிவாக செய்திகளை வெளியிட்டன. தந்தை பெரியார் தலையங்கமே எழுதி மகிழ்ந்தார் .
அகில இந்திய தலைவரான பின்னாலும் அடிப்படைக் கொள்கைகளில் குறிப்பாக அடித்தட்டு மக்களை மேலே கொண்டு வருவதில் காமராஜர் கண்ணும் கருத்துமாக இருந்து செயல்படுகிறார் என்பதில் தந்தை பெரியாருக்கு ஒரு திருப்தி இருந்தது. பெரிய பதவிகள் வந்துவிட்டால் சில பேருடைய குணாதிசயங்களும் கொள்கைகளும் மாறிவிடும் ஆனால் காமராஜர் அப்படிப்பட்டவர் அல்ல. அவர் ஒரு கொள்கை தங்கம், குணக் குன்று என்பதை தனது செயல்பாடுகளின் மூலம் நிரூபித்து காட்டிவிட்டார். இதனால்தான் பணக்காரர்களும் காமராஜரை பார்த்து அஞ்சினார்கள்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி என்பது பிரதமருக்கு ஆலோசனை வழங்குகிற பதவியாகும். அரசாங்கம் எப்படி செயல்பட வேண்டும், எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதை தீர்மானித்து வழிகாட்டுகிற பதவியாகும்.
"ஜவஹர்லால் நேரு" என்ற பெயருக்கு உலக அளவில் மிகப்பெரிய அங்கீகாரம் இருந்தது.. அவரது ஆளுமையை உலக தலைவர்கள் அனைவருமே அங்கீகரித்தனர்... ஏற்றுக்கொண்டனர். ஆனால் அவருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த உடல்நல குறைவை எண்ணி உலகத் தலைவர் எல்லோருமே கவலை கொண்டனர்.
நேரு எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, இந்தியா எவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும் சரி விமர்சனங்கள் வரத்தானே செய்கின்றன. அண்டை நாடுகளான சீனாவும் பாகிஸ்தானும் எப்போதும் இந்தியா மீது ஒரு பகைமை பார்வையோடு தான் இருந்து வந்தன. அண்ணன் எப்போது போவான்...? திண்ணை எப்போது காலியாகும் ..? என்ற எண்ணமே அவர்களிடம் மேலோங்கி இருந்தது. ஒருவேளை நேருவுக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் அடுத்த தலைவரை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்படும்... நானா? நீயா? என்ற பதவி சண்டையில் காங்கிரசுக்குள் குழப்பங்கள் ஏற்படும். இதைச் சாக்காக வைத்துக் கொண்டு நாம் உள்ளே நுழைந்து விடலாம். இந்தியாவை எளிதில் வீழ்த்தி விடலாம் என்றெல்லாம் ஒரு கணக்கு போட்டுக் கொண்டிருந்தனர். அந்த தவறான கணக்குகளை தகர்த்தெறிந்தார் காமராஜர்.
நேர்மையானவர்... ஒழுக்கமானவர்... எளிமையானவர் என்று பேரெடுத்த காமராஜர் அல்லவா இப்போது காங்கிரசுக்கு தலைவராக வந்திருக்கிறார். அவரை ஒருமனதாக எல்லோரும் ஏற்றுக் கொண்டு பாராட்டுகிறார்கள். அதற்கும் மேலாக இந்திய மக்கள் எல்லோருமே அவரிடம் நிறைய எதிர்பார்க்கிறார்களே.. அதற்கேற்றார் போல காமராஜர் புவனேஸ்வர மாநாட்டில் எழுச்சிமிகு உரையாற்றி எல்லோரையும் கவர்ந்துவிட்டாரே என்றெல்லாம் எண்ணி சீனாவும் பாகிஸ்தானும் கவலைப்பட்டன.. அப்படிப்பட்ட எதிரிகளே அஞ்சுகிற மாபெரும் ஆளுமையாக விளங்கினார் காமராஜர்.
அடுத்த வாரம் சந்திப்போம்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்