search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    அஞ்சறைப்பெட்டியின் சூப்பர் ஸ்டார் மஞ்சள்
    X

    அஞ்சறைப்பெட்டியின் சூப்பர் ஸ்டார் 'மஞ்சள்'

    • தமிழர்களின் வாழ்வியலோடும், ஆன்மீகத்தோடும் அதிக நெருக்கமுடைய நறுமணமூட்டி என்றால் அது மஞ்சள் தான்.
    • மஞ்சளில் உள்ள குர்குமினாய்டு வேதிப்பொருளை கொண்டு உலக அளவில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன.

    தமிழர் நாகரீகத்தோடும் தமிழ்மொழியோடும் ஒன்றிணைந்த பாரம்பரிய மருத்துவம் சித்த மருத்துவம். அதைப்போல ஒவ்வொரு நாட்டிலும் ஒரு பாரம்பரிய மருத்துவமுறை ஒன்றிணைந்துள்ளது. கி.மு.2500-ம் ஆண்டில், சீனப் பேரரசர் 'ஷென் நங்' 365 வெவ்வேறு மருந்துகளின் குறிப்புகளைக் கொண்ட "பென் டி'சாவோ" என்ற சீன புத்தகத்தை தாவரங்களின் பகுதிகளான இலைகள் மற்றும் தண்டுகளுடன் குறிப்பிட்டு எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் இலவங்கப்பட்டை, மற்றும் ஜின்செங் போன்ற மூலிகைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

    கி.மு.1550-ல், எகிப்தில் எழுதப்பட்ட 'எல் பாபிரோ டி ஈபர்ஸ்', நூலில் 700 வகையான தாவரங்கள் மற்றும் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் மூலிகை மருந்துகளான மாதுளை, ஆமணக்கு எண்ணெய், கற்றாழை, நிலவாகை, பூண்டு, வெங்காயம், அத்திப்பழம் போன்றவற்றைக் குறிக்கும் வரலாற்று குறிப்புகள் உள்ளன.

    இதே போல் கிரீஸ் நாட்டில் தியோபிராஸ்டஸ் தனது புத்தகங்கள் மூலம், தாவரங்களின் மருத்துவ அறிவியலை விளக்கி எழுதியுள்ளார். இதில் லவங்கப்பட்டை, புதினா, மாதுளை, ஏலக்காய் போன்ற மூலிகைகள் அடங்கும். ஆக நவீன மருத்துவம் தோன்றுவதற்கு முன்னர் பெரும்பாலான உலக நாடுகளில் மூலிகைகளை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய மருத்துவ முறைகள் இருந்தன என்பதற்கு இவைகளே உதாரணம்.

    அந்த வகையில் தமிழர்களின் வாழ்வியலோடும், ஆன்மீகத்தோடும் அதிக நெருக்கமுடைய நறுமணமூட்டி என்றால் அது 'மஞ்சள்' தான். மேலைநாடுகளில் இது வெறும் நிறத்திற்காகவும், மணத்திற்காகவும் மட்டும் உணவுப்பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. வெளிநாடுகளில் விலை உயர்ந்த பொருளான குங்குமப்பூவை நிறத்திற்காக உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்தினர். ஆனால் அது பல்வேறு தரப்பினருக்கு எட்டாக்கனியாக இருந்தது. காரணம் குங்குமப்பூவின் விலையும், விளைச்சலும் தான். எனவே அதற்கு மாற்றாக பயன்படுத்த துவங்கிய நறுமணமூட்டி தான் 'மஞ்சள்'. ஆனால் நம் முன்னோர்கள் அதை மருந்தாக பயன்படுத்தி நலம் காத்தனர்.

    இது சற்றேறக்குறைய குங்குமப்பூவின் நிறத்தைக் கொடுப்பதால் 'ஏழைகளின் குங்குமப்பூ' என்று கருதப்பட்டது. ஆனால் மருத்துவ குணத்தில் மற்ற எல்லா நறுமணமூட்டிகளை விட அதிகப்படியான மருத்துவ குணத்தைப் பெற்றுள்ளமையால், இதுவே 'நறுமணமூட்டிகளின் சூப்பர் ஸ்டார்' எனப்படுவது சிறப்பு. தெற்கு ஆசியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் நறுமணமூட்டிகளில் மஞ்சள் முக்கியம் இடம் பிடிக்கின்றது. இதனால் 'இந்தியாவின் தங்க மசாலா' என்ற பட்டப் பெயரையும் கொண்டது.

    சாதாரணமாக உண்டாகும் ஒவ்வாமை முதல் முதுமையில் ஏற்படும் அல்சைமர் எனப்படும் ஞாபக மறதி நோய்வரை தடுக்கும் தன்மை மஞ்சளுக்கு உள்ளதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. சளி, காய்ச்சல் முதலிய தொற்று நோய்கள் முதல் சர்க்கரை நோய், உடல் பருமன், புற்றுநோய் ஆகிய பல தொற்றா நோய்கள் வரை மஞ்சளின் பங்கு அளப்பரியது. மஞ்சளின் நிறத்திற்கும், மருத்துவ குணத்திற்கும் காரணம் அதில் உள்ள 'குர்குமினாய்டு' எனப்படும் வேதிபொருட்கள் தான்.

    இந்த சூப்பர் ஸ்டார் இல்லாத உணவுகளே தமிழர் வழக்கு முறையில் இல்லை எனலாம். காலை ,மதியம், இரவு ஆகிய மூன்றிலும் மஞ்சள் இட்டு சமைக்காத உணவு தென்னாட்டு உணவு முறையில் கிடையாது. மஞ்சளை மணத்திற்காக பிற நாடுகள் பயன்படுத்தி வந்த சூழலில் மருத்துவ குணத்திற்கும் தமிழர்களின் உணவு வாயிலாக பயன்படுத்த சித்த மருத்துவம் வழிவகை செய்துள்ளது. மஞ்சள் நீரில் குளித்து,மஞ்சள் துணி உடுத்தி ஆன்மீகத்தோடு ஆரோக்கியத்தையும் நிலைநாட்டினர் நம் மரபினர். தமிழர்களின் வாழ்வியலும், தமிழ் மருத்துவமும் பின்னி பிணைந்துள்ளது என்பதற்கு இதுவும் மிகச்சிறந்த உதாரணம்.

    கசப்பும், காரமும் கலந்த சுவையுடைய மஞ்சளை பல்வேறு நோய்நிலைகளுக்கு இன்றளவும் பாட்டி வைத்தியமாய் பலரும் பயன்படுத்தி வருவது நாம் அறிந்ததே. அடிபட்ட புண்களுக்கும், வீக்கத்திற்கும் மஞ்சளை அரைத்து பூசி குணம் கண்டது நம் மரபு மருத்துவத்திற்கு உதாரணம். அம்மை நோயில் வேப்பிலையும் மஞ்சளும் அரைத்து பூசி கொப்புளங்களை மறையச் செய்த வழக்க முறையானது, மஞ்சள் மிகச்சிறந்த தொற்றுக்கிருமிகளை கொல்லும் கிருமிநாசினி என்பதற்கு மற்றொரு உதாரணம். அறிவியலால் நவீன மருத்துவம் அசுர வளர்ச்சி பெற்றதனால் அத்தகைய வழக்க முறைகள் வழக்கொடிந்து போய்விட்டன.

    மஞ்சளில் உள்ள 'குர்குமினாய்டு' வேதிப்பொருளை கொண்டு உலக அளவில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன. அதில் மஞ்சளின் பல்வேறு மருத்துவ குணங்கள் உறுதி செய்து பல்வேறு நாட்டினரும் அதனைப் பயன்படுத்தி வருகின்றனர். அதில் முக்கியமான ஒன்று மஞ்சள் மிகச்சிறந்த இயற்கை வலி நிவாரணி என்பது தான்.

    இன்றைய வாழ்வியல் சூழலில் பலர் அடிமையான செயல்களில் ஒன்று வலி நிவாரணிகள் பயன்படுத்துவது தான். எதற்கெடுத்தாலும் வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ளும் பழக்கம் பலருக்கு உண்டு. அதற்கு மாற்றாக இயற்கை தந்த வலி நிவாரணி மஞ்சளை நாடுவது நலம். அதனால் தான் மஞ்சள் 'இயற்கை வலி நிவாரணிகளின் இளவரசி' என்று அடைமொழியிட்டு கூறப்படுகிறது. இதில் உள்ள வேதி நிறமிப்பொருள் நம் உடலில், வலியை உண்டாக்கும் காக்ஸ் நொதிகளை தடுத்து வலி மற்றும் வீக்கத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் கூறுவது இன்னும் சிறப்பு.

    மஞ்சள் கல்லீரலைத் தூண்டி பசியை அதிகரிக்கும் தன்மையும், சீரணத்தை அதிகரிக்கும் தன்மையும் உடையது. ஆக அசீரணமாகும் சமயத்தில் மஞ்சளை எடுத்துக்கொள்ள நன்மை பயக்கும். பெருங்குடல் அழற்சி, நாட்பட்ட குடல் அரிப்பு நோயில் மஞ்சள் நல்ல பலன் தருவதை வெளிநாட்டு ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர். இது உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிப்பதுடன், ஒவ்வாமையை போக்கும் தன்மையும் உடையது. அடுக்கு தும்மல், மருந்திற்கு கட்டுப்படாத நாட்பட்ட தோல் நோயால் அவதிப்படுபவர்கள் மஞ்சளை எடுத்துக்கொள்வது அவசியம். உணவிற்கு பயன்படுத்தும் மஞ்சள் கிழங்கினை சுட்டு முகர மூக்கடைப்பு தீரும். மேல்சுவாசப் பாதை தொற்றுக்கும் பயன்தரும். இந்த சித்த மருத்துவ புற சிகிச்சை இன்றும் பல கிராமங்களில் புழக்கத்தில் உள்ளது.

    மஞ்சள் உடலில் உள்ளுறுப்புகளை தூண்டும் தன்மையும் கொண்டது. ஹார்மோன் குறைபாட்டை சீராக்கும் வல்லமை படைத்தது. இயல்பான நொதிகள் மற்றும் ஹார்மோன் சுரப்பைத் தூண்டிவிடும். நீரிழிவு நோயில் கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் பாதிப்பால் இன்சுலின் ஹார்மோன் சுரப்பு குறைந்து சர்க்கரை அளவு கூடுகிறது. மஞ்சள் இத்தகைய கணைய செல்களை புதுப்பித்து புத்துணர்ச்சியுடன் செயல்பட வழிவகுக்கும். அத்துடன் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் பேருதவி புரியும்.

    ஒவ்வாமை இருமலுக்கு கைகண்ட வைத்திய முறை மஞ்சள் தான். மஞ்சளை பொடித்து தேனுடன் சேர்த்து கொடுக்க ஒவ்வாமை குறைந்து இருமல் குறையும். மேலும் ஆஸ்துமா எனும் நாட்பட்ட மூச்சு பிரச்சினையை அடிக்கடி உண்டாவதைத் தடுக்க மஞ்சள் உதவும். அதே போல் தோல் சார்ந்த ஒவ்வாமைக்கும், சோரியாசிஸ், கரப்பான் போன்ற நாட்பட்ட தோல்நோயிலும் மஞ்சள் சிறந்த நிவாரணி. தோல் நோய்களுக்கு மஞ்சளை வெளி மருந்தாக மட்டுமின்றி உணவிலும் அதிகம் சேர்த்துக்கொள்ள தோல் நோய்கள் குறையும்.

    ஆறாத புண்களை ஆற்ற மஞ்சளைப் பொடித்து நெய்யுடன் கலந்து பூச சிறந்த நன்மை தரும். மஞ்சள் நீரினைக் கொண்டு புண்களைக் கழுவுதலும் நல்ல பயனளிக்கும். வைரஸ் கிருமியால் உண்டாகும் கண்சிகப்பு, கண் அரிப்பு இவைகளுக்கு மஞ்சள் நீரில் தோய்ந்த துணியை பயன்படுத்த பாதிப்புகள் குறையும்.

    உணவுப்பொருட்களில் மஞ்சளை சேர்ப்பது என்பது மணத்திற்கு மட்டுமின்றி உணவுப்பொருள் கெடாமல் இருப்பதற்கும் தான். உணவுப்பொருட்களில் உண்டாகும் அஸ்பெர்ஜில்லஸ் எனும் பூஞ்சைகளால் உற்பத்தியாகும் அப்ளாடாக்சின் எனும் வேதிப்பொருள் குடலில் ஒவ்வாமையை உண்டாக்கி உடல் உபாதைகளை உண்டாக்கும். எனவே உணவில் மஞ்சளை சேர்ப்பது என்பது இத்தகைய நச்சுத்தன்மையை நீக்கி உணவை பாதுகாக்கவும் தான்.

    மஞ்சள் கிழங்கு நம் அன்றாட வாழ்வியலில் பயன்படுத்தும் மூலிகை கடைச்சரக்கு. மஞ்சள் கிழங்கினை அரைத்து முகத்தில் பூசிக்கொள்ளும் வழக்கம் பலகாலமாக நம் நாட்டு பெண்களிடத்தில் உள்ள பழக்கம். இன்றைய நவீன வாழ்வியலில் உள்ள பெண்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. மஞ்சள் பூசிக் குளிப்பதனால் முகத்தில் உள்ள தொற்றுக்கள் நீங்கி முகம் வசீகரம் கிடைக்கும் என்கிறது சித்த மருத்துவ நூலான அகத்தியர் குணவாகடம். இன்று பயன்படுத்தும் பல்வேறு முகப்பூச்சுகளில் மஞ்சள் இடம் பெறுவதும் குறிப்பிடத்தக்கது.

    மஞ்சளின் மருத்துவ குணங்களை அடைய தினசரி தேநீரில் மஞ்சள் மட்டுமின்றி இஞ்சி, லவங்கப்பட்டை சமபங்கு, சிறிது மிளகுடன் சேர்த்து எடுத்துக்கொள்ள பல்வேறு நன்மைகளைத் தரும். இந்த மஞ்சள் தேநீர் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மையும், இருதய நோய்களை தடுக்கும் தன்மையும், புற்றுநோய்க்காரணிகளை தடுக்கும் தன்மையும் உடையது.

    புற்றுநோய் சார்ந்த மருத்துவ அறிவியலில் மஞ்சளின் பங்கு அளப்பரியது. பல்வேறு வகைப்பட்ட ஆராய்ச்சிகள் விலங்குகளில் மட்டுமல்லாது மனிதரிலும் முறைப்படி நடைபெற்று அதன் மருத்துவ உண்மைகள் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகளில் இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதாகவும், புற்றுநோய் பரவுதலைத் தடுப்பதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக இன்றைய நவீன கால கட்டத்தில் அதிகரிக்கும் புற்றுநோய் வகைகளில் இருந்து அடுத்த தலைமுறையை காக்க அணுக வேண்டியது தங்க மசாலாவான மஞ்சளைத் தான்.

    மருத்துவ குணமுள்ள குர்குமினாய்டு வேதிப்பொருள் நீரை விட கொழுப்பில் அதிகம் நாட்டம் உடையதாய் அறிவியல் கூறுகின்றது. ஆக, மஞ்சள் பொடியை உணவுடன் சேர்த்து எடுப்பது ஒருபுறமிருக்க, பாலில் கலந்து எடுத்துக்கொள்வது அதன் மருத்துவ குணத்தை அதிகரிக்க செய்யும். மஞ்சளின் மருத்துவ குணத்தை அடைய விரும்பும் பலரும் அதனை மேற்கூறிய வகையில் எடுத்துக்கொள்வது சிறப்பு. இதற்க்கு 'தங்கப்பால்' என்ற சிறப்பு பெயரும் உண்டு.

    மஞ்சளின் மருத்துவ குணத்தை அறிந்துகொண்ட மேலை நாடுகள் மஞ்சளில் உள்ள குர்குமினா வேதிப்பொருளை தனித்து பிரித்து மருந்தாக்கி பயன்படுத்த துவங்கிவிட்டனர். ஆனால் மரபு வழியாய் மஞ்சளை பயன்படுத்தி வரும் நம் நாட்டினர் அதன் மருத்துவ மகத்துவத்தை போற்ற மறந்துவிட்டனர். இனி மஞ்சளை வெறும் ஆன்மீக பார்வையில் மட்டும் பாராமல் அறிவியல் பார்வையில் உற்றுநோக்கி உணவில் பயன்படுத்த துவங்கினால் ஆரோக்கியம் நிச்சயம் நம்மை தழுவும்.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    Next Story
    ×