என் மலர்

  சிறப்புக் கட்டுரைகள்

  ஆன்மிக அமுதம்- பத்தில் ஒன்று நரசிம்மம்
  X

  ஆன்மிக அமுதம்- பத்தில் ஒன்று நரசிம்மம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பட்டதிரி, பிரகலாதனுக்கு நரசிம்மமாக குருவாயூரப்பன் காட்சி அளித்ததை நினைத்து உருகி ‘பிரகலாதப் பிரியா!’ என குருவாயூரப்பனை ஒரு விம்மலுடன் அழைத்தாராம்.
  • இறைவனுக்காக உயிரையே துறக்குமளவு மன உறுதி இருந்தால் இறைவன் தரிசனம் கிட்டும்‘ என்கிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.

  திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்று தனிச் சிறப்புடைய நரசிம்ம அவதாரம்.

  நரசிம்ம அவதாரத்தைப் பற்றிய புராணம் நாம் அறிந்ததுதான். இரணியனின் மகன் பிரகலாதன் 'நாராயணன் தூணிலும் உள்ளான், துரும்பிலும் உள்ளான்' எனச் சொல்கிறான். அப்படியானால் இந்தத் தூணில் உள்ளானோ என இரணியன் ஒரு தூணை கதையால் பிளக்க அதன் உள்ளிருந்து புறப்படுகிறார் நரசிம்மர். இரணியனை அவர் வதம் செய்கிறார் என்பது புராணம்.

  இரணியன் பிரம்மனிடம் சாகாதிருக்க வரம் கேட்கிறான். அந்த வரம் தரமுடியாது என்றும் வேறு விதமாக வரம் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் பிரம்மன் அறிவுறுத்துகிறான். எனவே புத்திசாலித்தனமாக வரம் கேட்டுப் பெற்றுக் கொள்கிறான் இரணியன்.

  அவன் பெற்ற வரத்தின்படி அவனை மனிதனாலும் கொல்ல முடியாது, விலங்காலும் கொல்ல முடியாது. எனவே நரசிங்கமாக வருகிறார் திருமால். நரசிம்மம் மனிதனுமல்ல, விலங்குமல்ல. இரண்டின் கலவை.

  அவனை வீட்டின் உள்ளேயோ வீட்டின் வெளியேயோ கொல்ல முடியாது. எனவே வாயில் படியில் வைத்து அவனை வதம் செய்கிறார் திருமால். வாயில்படி வீட்டின் உள்ளுமல்ல, வெளியுமல்ல.

  தன்னை உயிருள்ள ஒன்றாலோ உயிரில்லாத ஒன்றாலோ கொல்ல முடியாது என்பது அவன் பெற்ற வரத்தின் ஓர் அம்சம். நரசிம்மர் அவனை நகத்தால் கீறிக் கொல்கிறார். நகம் உயிரற்றது, ஏனெனில் அதற்கு உணர்ச்சி இல்லை. ஆனால் அது உயிருள்ளது. ஏனெனில் வளர்கிறது. நகத்தை உயிருள்ளதென்றோ இல்லாததென்றோ வகைப்படுத்த முடியாது.

  திருப்பூர் கிருஷ்ணன்

  இவ்விதம் இரணியனின் புத்திசாலித்தனமான வரம் உடைக்கப்பட்டு அவன் வதம் செய்யப்படுகிறான்.

  * நரசிம்ம அவதாரம் ராம அவதாரம் போலவோ கிருஷ்ண அவதாரம் போலவோ பிற மானிட அவதாரங்கள் போலவோ குழந்தையாய்ப் பிறந்து வளர்ந்து உருவானதல்ல. தோன்றும்போதே வளர்ந்த நிலையில் தூணில் இருந்து தோன்றுகிறார் நரசிம்மர். இது இந்த அவதாரத்தின் தனிச் சிறப்பு.

  நரசிம்மரின் மனைவி லட்சுமிதேவி தான். அந்த லட்சுமிதேவிக்கு யார் மாமியார் தெரியுமா, ஒரு தூண்தான் மாமியார் என்று சொல்வதுண்டு! தூணிலிருந்து நரசிம்மர் தோன்றியதால் தூண்தானே அவரது தாய்? அப்படியானால் அந்தத் தூண்தானே லட்சுமியின் மாமியார்?

  பராசரபட்டர் நரசிம்ம அவதாரத்தைப் பற்றி அழகாக விளக்குகிறார். மனித வடிவம் மட்டுமே உடைய ராமன், பரசுராமன், பலராமன், கிருஷ்ணன், வாமனன், கல்கி ஆகிய ஆறு அவதாரங்கள் சர்க்கரை போன்றவை. மத்ஸ்யம், கூர்மம், வராகம் என மிருக வடிவம் கொண்ட மூன்று அவதாரங்கள் பால் போன்றவை.

  ஆனால் பாலும் சர்க்கரையும் கலந்தால் அதன் ருசியே தனி அல்லவா? அப்படிப்பட்ட இனிய அவதாரம் தான் மனித உடலும் சிங்க முகமும் கொண்ட நரசிம்ம அவதாரம் என்கிறார் அவர்.

  வால்மீகி ராமாயணத்தில் நரசிம்ம அவதாரத்தைச் சொல்லும் இரணியன் வதை பற்றிய கதை கிடையாது. ஆனால் கம்பராமாயணத்தில் யுத்த காண்டத்தில் தன் அண்ணன் ராவணனுக்கு அறிவுரை சொல்லும்போது, நரசிம்ம அவதாரத்தைப் பற்றி விரிவாக எழுதுகிறார் கம்பர்.

  மூல நூலில் இல்லாத ஒரு கதையை விரிவாக கம்பராமாயணம் பேசுவதை அன்றுள்ள சில பண்டிதர்கள் ஒப்புக் கொள்ளவில்லையாம். கம்பர் திருவரங்கத்தில் மேட்டழகிய சிங்கர் சன்னிதியில் இரணியன் வதைப் படலத்தை அரங்கேற்றியபோது, அங்குள்ள நரசிம்ம வடிவம் தலையசைத்து அங்கீகரித்தது என்றும் அந்தச் சிலையில் இருந்து சிங்கத்தின் கர்ஜனை வெளிப்பட்டது என்றும் ஒரு செவிவழிக் கதை சொல்கிறது. அந்த அற்புதத்தைப் பார்த்த பண்டிதர்கள் பின்னர் பக்தியோடு இரணிய வதைப் படலத்தை ஏற்றார்களாம்.

  நாராயண பட்டதிரி எழுதிய சமஸ்கிருத நூலான நாராயணீயத்திலும் நரசிம்ம அவதாரக் கதை விளக்கமாகப் பேசப்படுகிறது. குருவாயூரப்பனை முன்னிலைப்படுத்தி, 'ஏ குருவாயூரப்பனே, நீ நரசிம்ம அவதாரத்தில் பிரகலாதன்மேல் காட்டிய பிரியம்தான் எத்தனை மகத்தானது!' என எழுதினார் பட்டதிரி. தனது வாதரோகம் மாறுவதற்காக நாராயணீயம் எழுதிய பட்டதிரிக்கு அதுவரை குருவாயூரப்பன் காட்சி தரவில்லை.

  அதை எண்ணி மறுகிய பட்டதிரி, பிரகலாதனுக்கு நரசிம்மமாக குருவாயூரப்பன் காட்சி அளித்ததை நினைத்து உருகி 'பிரகலாதப் பிரியா!' என குருவாயூரப்பனை ஒரு விம்மலுடன் அழைத்தாராம்.

  அப்போது, 'நான் பிரகலாதப் பிரியன் மட்டுமல்ல, பக்தப் பிரியன்!' என குருவாயூரப்பன் சன்னதியில் இருந்து கற்சிலை குரல் கொடுத்ததாம்.

  மெய்மறந்த பட்டதிரி பின்னர் தன் பக்திமேல் நம்பிக்கையோடு நாராயணீயத்தை எழுதி முடித்தார் என்கிறது நாராயணீயம் தோன்றியதைப் பற்றிச் சொல்லும் கதை.

  * கூடுவிட்டுக் கூடுபாய்ந்து அமருகின்ற மன்னன் உடலில் புகுந்து சிலகாலம் வாழ்ந்தார் ஆதிசங்கரர். அவரது பழைய உடலைச் சிலர் எரித்துவிட்டனர். அதையறிந்த ஆதிசங்கரர் உடனடியாகத் தன் பழைய உடலில் மறுபடி புகுந்தார். அதற்குள் அவர் வலக்கரம் எரிந்துபோய் விட்டது.

  அன்பர்கள் 'பக்தர்களுக்கு ஆசி வழங்கும் வலக்கரத்தை அவர் மறுபடி பெற்றுக் கொள்ள வேண்டும்' என வேண்டினர். அப்போது ஆதிசங்கரர் அருளியதுதான் சமஸ்கிருதத்தில் அமைந்த லட்சுமிநரசிம்ம ஸ்தோத்திரம். நரசிம்மர் அருளால் மறுபடி அவர் கை புதிதாக வளர்ந்தது என்கிறது சங்கரர் திருச்சரிதம்.

  'லட்சுமி நரசிம்மரே எனக்குக் கைகொடுப்பாய்!' என்ற அர்த்தத்தில் அந்த சுலோகத்தின் ஒவ்வொரு கண்ணியும் முடியும். கையைக் கொடுப்பாய் என்ற நேரடிப் பொருளில் அது சங்கரருக்கு எரிந்த கையைக் கொடுத்தது.

  பக்தர்கள் அந்த சுலோகத்தைச் சொல்லும்போது, வாழ்வில் உயரக் கைகொடுப்பாய் என்ற பொருளில் அமைந்து அது எல்லா நலங்களையும் பக்தர்களுக்கு அருள்கிறது.

  * ஆதிசங்கரரின் சீடர்களில் ஒருவர் பத்மபாதர். அவர் தம் இஷ்ட தெய்வமான நரசிம்மரை தரிசிக்க வேண்டும் எனக் கானகத்தில் தவத்தில் ஈடுபட்டிருந்தார்.

  அங்கே மானைத் துரத்திக் கொண்டு வந்தான் ஒரு வேடன். மான் அவன் கண்ணிலிருந்து தப்பி எங்கோ சென்று மறைந்துவிட்டது.

  அங்கே தியானம் செய்துகொண்டிருந்த பத்மபாதரிடம் தன் மானை அவர் பார்த்தாரா என வினவினான் கல்வியறிவற்ற வேடன். நான் மன ஒருமைப்பாட்டோடு தவத்தில் ஈடுபட்டிருந்ததால் எதையும் கவனிக்கவில்லை என உண்மையைச் சொன்னார் பத்மபாதர்.

  வேடன் தவத்தைக் கண்டானா, தியானத்தைக் கண்டானா? அவன் கண்டதெல்லாம் வில்லும் அம்பும் விலங்குகளும் தான்.

  தவம் என்றால் என்ன என அவன் வினவியபோது அதை அவனுக்கு எப்படி விளக்குவது என பத்மபாதருக்குத் தெரியவில்லை. சிந்தனையில் ஆழ்ந்த அவர் இறுதியாக அவனிடம் இப்படிச் சொன்னார்:

  'அன்பனே! உன்னைப்போல் நானும் ஒரு விலங்கைத் தேடித்தான் இங்கே அமர்ந்திருக்கிறேன்!' என்றார். சாதுவான விலங்கு போலிருக்கிறது, வில்லும் அம்பும் இல்லாமல் உட்கார்ந்த இடத்திலிருந்தே அதைப் பிடிக்க முயல்கிறார் என நினைத்தான் வேடன்.

  அந்த விலங்கு எப்படி இருக்கும் என விசாரித்தான். சிங்க முகம் மனித உடல் என விளக்கினார் பத்மபாதர். 'இந்தக் கானகத்தின் மூலை முடுக்கெல்லாம் எனக்குத் தெரியும், இங்கு அப்படிப்பட்ட விலங்கே இல்லை' என்றான் வேடன்.

  எங்கும் உள்ள இறைவன் இந்தக் கானகத்தில் மட்டும் இல்லாமல் போவாரா என்ன என எண்ணி நகைத்த பத்மபாதர் 'கட்டாயம் அவ்விலங்கு இந்தக் கானகத்தில் இருக்கிறது' என்றார்.

  'அப்படியானால் இன்று சூரிய அஸ்தமனத்திற்குள் அந்த விலங்கை உங்கள் முன் கொண்டு நிறுத்துவேன், இல்லாவிட்டால் என் உயிரை மாய்த்துக் கொள்வேன்' எனச் சூளுரைத்துவிட்டுச் சென்றான் அந்த வேடன். அவன் கல்வியறிவற்றவனாய் இருந்தாலும் அவனுடைய உறுதி பெரிது.

  மாலை வரை தேடியும் அந்த விலங்கைக் காணாததால் தன் சூளுரையின் படி மரத்தில் படர்ந்திருந்த ஒரு கொடியைச் சுருக்கிட்டுத் தன் கழுத்தில் மாட்டிக் கொள்ள எத்தனித்தான்.

  இறைச்சக்தி மன உறுதிக்கு வசப்படாதிருக்குமா? அந்த நேரத்தில் அவன் முன் தோன்றினார் நரசிம்மர்.

  அவன் திகைத்தான். அந்தப் பெரியவர் சொன்னது உண்மைதான் என மகிழ்ந்தான். நரசிம்மத்தின் கழுத்தில் அந்தக் கொடியைக் கயிறுபோல் கட்டி இழுத்துச் செல்லலானான்.

  ஆனால் அந்த விலங்கு மிக சாதுவாக இருந்தது. அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் குழந்தைபோல் உடன் வந்தது.

  பத்மபாதர் முன் நரசிம்மத்தைக் கொண்டு நிறுத்தினான் வேடன். 'நீங்கள் சொன்னது உண்மைதான், இதோ அந்த விலங்கு!' என்றான் மகிழ்ச்சியோடு.

  பத்மபாதர் பார்த்தார். ஆனால் நரசிம்மம் அவர் கண்ணுக்குத் தெரியவில்லை. என்றாலும் கொடிக் கயிறு அந்தரத்தில் நிற்பதைக் கண்டு அதைக் கொண்டு நரசிங்கத்தைக் கட்டி வைத்திருக்கிறான் வேடன் என்பதைப் புரிந்து கொண்டார்.

  அவர் உள்ளம் உருகியது. வேத வேதாந்தங்களைக் கற்றறிந்த தனக்குக் கிட்டாத தெய்வ தரிசனம் ஓர் எளிய வேடனுக்குக் கிட்டியதே எனக் கண்ணீர் உகுத்தார். நரசிம்மரின் குரல் அவருக்குத் தெளிவாகக் கேட்டது.

  'வேடனின் மன உறுதி பெரிது. என் தரிசனம் கிட்டாததால் தன் உயிரையும் துறக்கத் தயாரானான் அவன். அதை மெச்சி அவனுக்குக் காட்சி கொடுத்தேன். உன் பக்தியும் பெரிதுதான். அதனால்தான் என் குரலைக் கேட்கிறாய் நீ, உரிய நேரத்தில் உனக்கும் காட்சி கொடுப்பேன்!' எனக் கூறி மறைந்தார் நரசிம்மர் என்கிறது பத்மபாதர் பற்றிய கதை.

  'இறைவனை தரிசிக்க கல்வி உதவும் என்று சொல்ல முடியாது, ஆனால் இறைவனுக்காக உயிரையே துறக்குமளவு மன உறுதி இருந்தால் இறைவன் தரிசனம் கிட்டும்' என்கிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.

  அதன் விளக்கமே நரசிம்மரை தரிசித்த வேடன் கதை. நரசிம்மரை மன ஒருமைப்பாட்டோடு வழிபட்டு எல்லா நலங்களையும் பெறுவோம்.

  தொடர்புக்கு,

  thiruppurkrishnan@gmail.com

  Next Story
  ×