search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பாட்டில் இருக்கும் சங்கதி- முன்னணி கண்ட பின்னணிப் பாடல்
    X

    சர்வர் சுந்தரம் பட பாடல் காட்சியில் டி.எம்.எஸ்.

    பாட்டில் இருக்கும் சங்கதி- முன்னணி கண்ட பின்னணிப் பாடல்

    • ஒரு நல்ல கலைஞன் தனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும்போது அதில் தனது திறமையை முழுமையாகக் காட்டத்தான் விரும்புவான்.
    • டி.எம்.எஸ். தன்னுடைய கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் பாடிக்கிட்டே இருக்கணும்னு ஆசைப்பட்டார்.

    1964-ல் ஒரு அழகிய காலைப்பொழுது. எப்போதும் உற்சாகமாக ரிக்கார்டிங் தியேட்டருக்குச் செல்லும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அன்று ஏதோ யோசித்துக்கொண்டு இருந்தார்.

    பாட்டெல்லாம் பதிவு செய்து முடிச்சாச்சு. அப்புறம் ஏன் இவர் ஸ்டூடியோவுக்கு போக தயங்குகிறார் என்று சக இசைக்கலைஞர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டனர்.

    அந்த விசயம் என்னவென்று இயக்குனர்கள் கிருஷ்ணன் - பஞ்சு அவர்களுக்கும் விஸ்வநாதன் சாருக்கும் மட்டும் தான் தெரியும்.

    வேறொன்றுமில்லை... "சர்வர் சுந்தரம்" படம் சம்பந்தப்பட்ட காட்சிதான்.. அவர் கொண்ட தயக்கத்துக்கு காரணம்.

    அந்தப்படத்தில் இடம் பெற்றுள்ள "அவளுக்கென்ன அழகிய முகம்..." பாட்டை சிறப்பா பதிவு பண்ணியாச்சு.

    பொதுவாக திரையிசைப் பாடல்கள் எல்லாம் பின்னணியாகத்தான் இருக்கும். நடிகர்கள் தான் அந்தப்பாடலுக்கு முன்னணியாக தோன்றி நடிப்பார்கள்.

    ஆனால் இந்தப்பாடல் காட்சியை மட்டும் இசைக்குழுவினர் பாடுவது போன்றே படமாக்க இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு விரும்பினார்.

    அந்தப்பாடல் பாடப்படும் காட்சியை படமாக்குவதற்கு மெல்லிசை மன்னரை கோட்சூட் எல்லாம் போட்டுக்கொண்டு ஸ்டூடியோவுக்கு வரச் சொல்றாங்க.

    இங்க ஒரு சின்ன பிரச்சினை என்னன்னா... திரைக்குப் பின்னால் மறைவாக இருக்கும் இசையமைப்பு நிகழ்வுகளை எல்லோருக்கும் தெரியும் வண்ணம் ஸ்கிரீனில் காட்சிப்படுத்த ராமமூர்த்தி சாருக்கு விரும்பமில்லை.

    இதையெல்லாம் நாம ஏன் பண்ணனும்? திரைக்குப் பின்னால் உள்ள செயல்கள் எல்லாம் சஸ்பென்சாக இருந்தால் தான் அந்தப்பாட்டு மேலே மக்களுக்கு ஒரு காதல் வரும்.

    இங்கு என்ன நடக்கிறது... எப்படி இசை அமைக்கிறார்கள்... எப்படி பாடுகிறார்கள்? என்பதை வெளியே தெரியும்படி எடுத்துக் காட்டினால் மக்களிடையே இருக்கும் அந்த திரில் போய்விடும் என்பது ராமமூர்த்தி சார் கருத்தாக இருந்தது.

    ஆனால் எம்.எஸ்.விசுவநாதன் சார் என்ன நெனச்சாருன்னா.. நம்மள திரையில்காட்டி ஒரு கவுரவம் பண்ணப் போறார் கிருஷ்ணன் பஞ்சு சார். நாம இசையமைக்கிறதை அப்படியே காட்டப் போறார். அதனால் இந்த வாய்ப்பைக் கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்ளனும்னு நினைத்தார்.

    ஆனால் அவருக்கு தயக்கமாக இருந்த ஒரு விசயம், இந்த கோட்சூட் போடுறதுதான்.

    இசைக்கலைஞர்கள் அனைவரும் கோட்சூட் போட்டுக்கொண்டுதான் அந்தக் காட்சியில் பங்கேற்க வேண்டும் என்று கிருஷ்ணன் - பஞ்சு விரும்பினார்.

    அதற்கான வேலைகள் மும்முரமாக நடந்தன. ராமமூர்த்தி சார் அந்த பாடல் காட்சிப்பதிவுக்கு வரவில்லை. எம்.எஸ்.வி.மட்டும் வருகிறார்.

    அவளுக்கென்ன... பாடலின் ஒரிஜினல் ரிக்கார்டிங்கில் யாரெல்லாம் இருந்தார்களோ அவர்கள் எல்லோரையும் முடிந்த மட்டும் இந்த சூட்டிங்கில் பங்கெடுக்க வைக்க இயக்குனர்கள் விரும்பினர்.

    இசைக்கலைஞர்கள் அத்தனை பேரையும் வர வைக்கிறார்கள். அந்த சூட்டிங்குக்கு டி.எம்.எஸ்.சும் வரவேண்டும். அவரையும் கோட்சூட் அணிந்து வருமாறு புரொடெக்‌ஷன் அசிஸ்டென்ட் போய் சொல்கிறார்.

    அவளுக்கென்ன... பாடல் காட்சியை இந்த மாதிரி மறு உருவாக்கம் பண்ணப்போறோம். அந்தக் காட்சியில் உங்கள் காஸ்டியூம் இந்த மாதிரி.... பாட்டுப் புத்தகம் இப்படி இருக்கும்.. அதனை வைக்கும் ஸ்டாண்டு கொஞ்சம் தள்ளி இருக்கும்.. என அந்தப் பாடல் காட்சியை விவரிக்கிறார்.

    டி.எம்.எஸ். அவரிடம் ரொம்ப எல்லாம் பேசவில்லை. நேரடியாகவே மறுத்துவிட்டார். நான் டி.எம்.எஸ்.ஆகவே இருக்க விரும்புகிறேன். என்னுடைய இந்த சின்ன டைரியில் தான் நான் பாடும் பாடலை எழுதி வைத்திருப்பேன்.

    நான் ஸ்டூடியோவுக்கு எப்போதும் எப்படி வருவேன்? வேட்டி கட்டியிருப்பேன்.. சின்னதா ஒரு ஜிப்பா அணிந்திருப்பேன்.. நெத்தியில் விபூதி பூசியிருப்பேன். வழக்கமா நான் எப்படி வருவேனோ அப்படிதான் வருவேன்.

    நான் எப்படி பாடினேனோ அப்படித்தானே நீங்க காட்சியில காட்டணும்னு நினைக்கறீங்க? அப்ப நான் ரிக்கார்டிங் தியேட்டர்ல எப்படி இருப்பேனோ அதே மாதிரி வாரேன் என்று சொல்லிவிட்டார்.

    அன்றைய சூட்டிங்கிற்கு டி.எம்.எஸ்.தான் சொன்னவாறே எப்போதும் போல் வேட்டி ஜிப்பாவில் நெற்றியில் விபூதி பூசிக்கொண்டு வந்தார்.

    அப்படி வந்தது மட்டுமல்ல, வழக்கமாக ரிக்கார்டிங் தியேட்டரில் அவர் பாடும் போது அதிகமாக சிரிக்க மாட்டார்.. அதிகமாக அசையமாட்டார்.. பாடிலாங்வேஜ் எதுவும் இல்லாமல் எப்படி பாடுவாரோ, அதே மாதிரிதான் நடிப்பு காட்சியிலும் செய்து இருப்பார்.

    சூட்டிங் முடிந்து ரொம்ப நாள் கழித்து அந்தப்படம் வெளியானது. டி.எம்.எஸ். அதனை பார்த்துவிட்டு வந்து கிருஷ்ணன் - பஞ்சு அவர்களிடம் சொல்கிறார்...

    அந்தப்பாட்டின் திருப்புமுனையே எங்களுடைய ரிக்கார்டிங் தியேட்டரில் இருந்து காட்சியை ஸ்டூடியோவுக்குள் ஷிப்ட்பண்ணி நாகேஷ் சார் ஆடுறதுதான்.

    அப்படி காட்சிப்படுத்துற பாட்டை, நான் பட்டையா விபூதி பூசிக்கிட்டு நிற்கிற இடத்துலேயே அசையாமல் நின்னுகிட்டு பாடுறேன்.. அதே பாட்டை ஒரு இடத்துலக்கூட நிற்காமல் நாகேஷ் சார் ஆடிக் கொண்டே பாடுகிறார்..

    சுபஸ்ரீ தணிகாசலம்

    இது தான் திரையில் தோன்றும் கலைஞனுக்கும், திரைக்குப் பின்னால் இருக்கும் கலைஞனுக்கும் உள்ள வித்தியாசம். அந்த வித்தியாசத்தை நீங்க அருமையாக காட்டியிருக்கீங்க. நானும் ரசித்தேன் என்று பாராட்டியிருக்கிறார்.

    அவளுக்கென்ன அழகிய முகம்... என்ற அந்தப் பாடலுக்கு 15 நிமிடத்தில் மெட்டுப் போட்டதாக எம்.எஸ்.வி. சொல்கிறார்.

    டி.எம்.எஸ்.அந்தப் பாடலைப்பாடுவதற்கு கிட்டத்தட்ட 6 மணி முதல்7 மணி நேரம் எடுத்துக்கொண்டாராம்.

    டி.எம்.எஸ். தன்னுடைய கொள்கைகளை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார். யாருக்காகவும் தன்னுடைய பழக்கங்களை மாற்றிக் கொள்ள மாட்டார். அதற்கு ஒரு உதாரணம் தான் இந்த சம்பவம். இது போன்று பல சம்பவங்களைச் சொல்லலாம்.

    அவரது திரையிசை வாழ்க்கையில் திருப்புமுனையை கொடுத்தவரே ஜி.ராமநாதன் சார்தான். அப்படின்னா நாம என்ன நினைப்போம்?

    ஜி.ராமநாதன் சார் என்ன சொன்னாலும் டி.எம்.எஸ். கேட்பாரு. அவரை எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டாரு என்று தானே நினைப்போம்.

    ஆனால் அப்படியில்லை. பல சந்தர்ப்பங்களில் அவர்களிடையே வாக்குவாதம் வந்ததாக அவங்க குழுவில் வாசித்த பலரும் சொல்லியிருக்கிறார்கள்.

    என்ன மாதிரியான வாக்குவாதம் தெரியுமா? அது தான் அவரது சிறப்பு. ஒரு திரைக்கலைஞனை இன்னும் கொஞ்சம் கூடுதலாக அடையாளம் காட்டக்கூடிய காரணங்களுக்காகத் தான் அவருடைய வாக்குவாதம் இருக்கும்.

    இந்தப்பாட்டை பாட எனக்கு ஏன் வாய்ப்புத்தரவில்லை என்று ஜி.ராமநாதன் சாரிடம் சண்டைப் போடுவாராம் டி.எம்.எஸ்.

    ஒரு உதாரணத்துக்கு அம்பிகாபதி படத்தை எடுத்துக் கொள்வோம். அந்த படத்தில் கம்பனின் மகன் அம்பிகாபதி பாடும் பாடல்கள் அனைத்தையும் டி.எம்.எஸ். பாடி இருப்பார். ஆனால் கம்பர் பாடும் பாடலை வேறு ஒருவர் பாடியிருப்பார்.

    கம்பருக்கான பாடலை தனக்கு ஏன் தரவில்லை என்று கேட்டு ஜி.ராமநாதன் சாரிடம் டி.எம்.எஸ். விளையாட்டாக சண்டையிட்டாராம்.

    அம்பிகாபதி இளையவர். அவருக்கு நீங்கள் பாடினீர்கள். கம்பரோ வயதானவர். அவருக்கு வயதானவர்தானே பாடவேண்டும்.

    அதனால் தான் அந்தப்பாடலை உங்களுக்கு தரவில்லை என்றாராம் ஜி.ராமநாதன்.

    அதற்கு டி.எம்.எஸ். என்னிடம் அந்தப்பாடலை தந்திருந்தால் நானே வயதானவர் போல பாடியிருப்பேனே. அம்பிகாபதி படத்தில் முழுக்க முழுக்க என் குரலே ஒலிக்க வாய்ப்பு கிடைத்திருக்குமே என்றாராம்.

    இதனை இன்னொருத்தரின் வாய்ப்பினைத் தட்டிப் பறிப்பதாக எண்ணிவிட வேண்டாம். ஒரு நல்ல கலைஞன் தனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும்போது அதில் தனது திறமையை முழுமையாகக் காட்டத்தான் விரும்புவான்.

    அவரது கலை அர்ப்பணிப்புக்கு பல்வேறு உதாரணங்களைக் கூறலாம். எம்.எஸ்.வி.சாரின் பல மேடைக் கச்சேரிகளில் டி.எம்.எஸ். பாடியிருக்கிறார். அந்த சமயங்களில் முழு ஆர்க்கெஸ்ட்ரா குழுவினரையும் வழிநடத்த எம்.எஸ்.வி.க்கு சிரமம் ஏற்பட்டால் டி.எம்.எஸ்.தானே களத்தில் இறங்கி குழுவை வழிநடத்தி பாடுவாராம்.

    அவருக்கு 86 வயது கடந்த நிலையிலும் ஒரு நிகழ்ச்சியில் பாட அழைத்திருக்கிறார்கள். அப்போது டி.எம்.எஸ். சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா?

    நான் வந்து பாடுவேன். அதை கேட்டுவிட்டு யாராவது டி.எம்.எஸ். முன்ன மாதிரி பாடவில்லை என்று கூறினால் அந்த நிமிடமே என் உயிர் போயிடும். அதனால பாடமாட்டேன் என்றாராம். அந்த அளவுக்கு தன் குரலை தானே அளவுக்கு அதிகமாக நேசித்தவர் டி.எம்.எஸ்.

    ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் டி.எம்.எஸ்.ஐயா வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்குகிறார். அவர் வாங்கிட்டு கடந்து போகும்போது எதிரே நடிகர் அஜித் வருகிறார். அவர் டி.எம்.எஸ்சை பார்த்து மரியாதையாக வணக்கம் சொல்லி நல்லா இருக்கீங்களா... என்று கேட்டுள்ளார்.

    எனக்கென்ன, நான் நல்லாதான் இருக்கேன். என்றைக்கு உங்க படத்துல உங்களுக்கு ஒரு பாட்டு பாடுகிறேனோ அதுவரைக்கும் என் உயிர் போகாது தம்பி. அந்த நாளுக்காக காத்துக்கிட்டு இருக்கேன்.. அப்படின்னு சொன்னாராம்.

    அஜித் அதைக் கேட்டு சிரித்தவாரே சந்தோஷம் சார். அது நடந்தா எனக்கும் சந்தோசம் தான் என்றாராம். அது தான் டி.எம்.எஸ். அவர்களின் தளராத தன்னம்பிக்கை.

    டி.எம்.எஸ். தன்னுடைய கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் பாடிக்கிட்டே இருக்கணும்னு ஆசைப்பட்டார். அந்த மகா கலைஞனுடைய இந்த நூற்றாண்டு சமயத்தில் இரண்டு பகுதிகளில் அவரைப் பற்றி பேசினது சந்தோசம்.

    அவரைப்பற்றி பேசும்போது ஊடால ஒரு கதை சொன்னேனே.. மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி அவர்களிடையே நடந்த சின்னதான மெல்லிய ஊடல், காதலர்களுக்கிடையே தானே ஊடல் வரும்... அவர்களிடையே அந்த காதல் எப்படி தொடங்கியது என்பது பற்றி அடுத்தப்பகுதியில் பார்க்கலாம்.

    தொடர்புக்கு:-

    info@maximuminc.org

    Next Story
    ×