என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஆயுட்காலம் பற்றி பயமா?
    X

    ஆயுட்காலம் பற்றி பயமா?

    • ஒருவரின் ஆயுளைப் நிர்ணயிக்கும் சக்தியை பிரபஞ்சம் தனக்குள் ரகசியமாகவே வைத்துக் கொண்டு உள்ளது.
    • 12-ம் பாவகம் என்பது ஒருவரின் சாபத்தால் ஏற்படும் துக்கம், துயரமாகும்.

    ஜோதிடம் பல்வேறு புதிர்களையும் சூட்சுமங்களையும் தன்னுள் அடக்கி உள்ளது. மத்திம வயதிற்கு மேல் ஜாதகம் பார்க்க வருபவர்கள் அனைவரும் தமது ஆயுளைப் பற்றி கேட்காமல் போவது கிடையாது. தமது ஆயுட்காலம் பற்றிய பய உணர்வு அனைவருக்கும் உண்டு. அதேபோல் தனது ஆன்மா முக்தி அடையுமா மோட்சம் அடையுமா என்பதையும் அறிய விரும்புவார்கள். ஒருவரின் ஆயுளைப் பற்றி தீர்மானிப்பது மிகவும் சவாலான விஷயம். முக்தி மோட்சம் என்பது ஆராய்ச்சிக்கு உட்பட்ட மிகப்பெரிய தலைப்பு. இதில் பலருக்கும் பலவிதமான மாற்றுக் கருத்துக்கள் உள்ளது. எனினும் என் சிற்றறிவுக்கு எட்டிய சில தகவல்களை இந்த கட்டுரையில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    மறுபிறவி

    ஒருவரின் ஆயுளைப் நிர்ணயிக்கும் சக்தியை பிரபஞ்சம் தனக்குள் ரகசியமாகவே வைத்துக் கொண்டு உள்ளது. அனைத்திற்கும் அப்பாற்பட்டு உள்ள பிரபஞ்ச சக்தியால் மட்டுமே ஒருவரின் ஆயுளை கூட்டவோ குறைக்கவோ முடியும். உலகில் ஒவ்வொரு நொடியும் விதவிதமான அரிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து கொண்டே இருந்தாலும் மனிதர்களுடைய பிறப்பு மற்றும் இறப்பும் மனிதர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. அதே போன்று நம்முடைய மறு பிறவிகளும் எத்தனை என்பது நாம் அறிந்து கொள்ள இயலாதது. இந்து மதத்தைப் பொறுத்தவரை ஆன்மா என்பது அழியாதது மேலும் அது மீண்டும் மீண்டும் மறுபிறவி எடுக்கக்கூடியது என்ற நம்பிக்கை ஆழமாக உள்ளது. கடந்த பிறவிகளில் ஒருவர் வாழ்ந்திருந்தால் கடந்த கால வாழ்க்கையினை உள்ளுணர்வால் அறிய முடியும்.ஒரு ஜாதகத்தில் லக்னத்திற்கு பன்னிரெண்டாம் இடமே ஒருவரின் முக்தியை மோட்சத்தை பற்றி உணர்த்தும் ஸ்தானமாகும்.

    12-ம் பாவகம்

    12-ம் பாவகத்தை பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் செய்த பாவ புண்ணியத்தின் பலன் என்ன? என்பதை கூறுமிடமாகும். இதையே விரிவாக சொன்னால் முக்தி அல்லது மோட்சம் என்ற பிறவிப்பயனை அடைவாரா? மறுபிறவி உண்டா? படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் கிடைக்குமா? வெளிநாட்டு வேலை, தொழில் அமையுமா? போன்றவற்றை அறிய முடியும். அத்துடன் செலவினங்கள், நஷ்டங்கள், இல்லற இன்பம், இடது கண், தியாக சிந்தனை, தற்கொலை, ராஜ துரோகம், ஜாதிமாறுதல், தந்தையின் தாய், தாயின் தந்தை, பிரிவினை, தலைமறைவாகுதல் போன்றவற்றையும் அறிய முடியும். இதனை விரயஸ்தானம் அல்லது அயன, சயன போகஸ்தானம் என்றும் அழைக்கலாம். 12-ம் பாவகம் என்பது ஒருவரின் சாபத்தால் ஏற்படும் துக்கம், துயரமாகும். இது தலை முறைக்கும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

    12-ம் பாவகம் விரய ஸ்தானம்

    12-ம் அதிபதி ஆட்சி உச்சம் பெறக்கூடாது. 12-ம் அதிபதி 12-ல் இருந்தால் கட்டுக் கடங்காத விரயம் இருந்து கொண்டே இருக்கும். தூர தேசத்தில் வாழும் நிலை ஏற்படும். 12-ம் பாவகத்தில் நின்ற கிரகத்தின் தசை நடந்தல், அந்த கிரகங்களுக்குரிய நோய்கள் தாக்கும், மரணம் அல்லது அதற்கு ஒப்பான கண்டத்தை சந்திப்பார்கள். 12-ம் அதிபதியுடன் சேர்ந்த கிரகங்களின் திசையும் நடக்கக் கூடாது. நோயின் தன்மையை எளிதில் அறிய முடியாது.

    எந்த மருந்தை சாப்பிடுவது என்று தெரியாமல் குழம்புவார்கள். அந்த ஜாதகர் பரம்பரை நோயால் துன்பப்படுவார். இவர் செய்யும் வேலைகளின் மூலம் நோய்கள் தாக்கும். நோய் எதிர்ப்பு சக்திகள் குறைவு என்பதால் தொற்று நோய்கள் உடனே வரக்கூடும். மூட்டு வலி, முதுகு தண்டுவட வலி, மூல நோய், இரவில் உறக்கம் கெடுவதால் உண்டாகும் நோய்களும் ஏற்படும்.

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    எனவே ஒரு ஜாதகத்தில் 12-ம்மிடம் காலியாக இருப்பது நலம். 12-ல் சுப கிரகம் இருந்தால் சுப விரயமும் என்றும் அசுப கிரகம் இருந்தால் வீண் விரயமும் ஏற்படும் என்ற பொதுவான கருத்து நிலவி வருகிறது. அது தவறான கருத்து. 12-ல் லக்ன சுபர் அல்லது லக்ன சுபரின் சாரம் பெற்ற கிரகம் இருந்தால் 50 சதவீத பலனும், 12-ல் நிற்கும் கிரகம் லக்ன சுபர் அல்லது லக்ன சுபரின் சாரம் பெற்று குரு பார்வை பெற்றால் 100 சதவீதம் சுப விரயமும் ஏற்பட வாய்புள்ளது. மற்றபடி 12-ல் நிற்கும் கிரகம் என்றுமே மதில் மேல் பூனை தான். 12-ல் சுப கிரகம் இருந்தால் நிம்மதியான தூக்கம் அல்லது படுத்தவுடன் தூக்கம் வரும். அசுப கிரகம் இருந்தால் கண் மட்டும் மூடி இருக்கும். சிந்தனைகள் அலைபாயும். எண்ண ஓட்டங்கள் மிகுதியாக இருக்கும்.

    ஏதாவது ஒரு கிரகம் 12-ம் இடத்தில் நின்றாலோ 12-ம் அதிபதியின் நட்சத்திர சாரத்தில் நின்றாலோ அல்லது 12-ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலோ அந்த ஜாதகர் சொந்த ஊரை விட்டு வேறு இடங்களில் இருப்பார். சிலருக்கு வெளிநாட்டு வாழ்க்கை அமையும். வெளிநாட்டில் தங்கி வேலை, தொழில் செய்யும் நிலை உருவாகும். 12-ம் இடத்தின் அதிபதியை சுப கிரகங்கள் பார்த்தால் வெளிநாடு யோகம், வெளிநாடு தொழில் அமைக்கும் யோகம், வெளிநாட்டு பணம் சேர்ப்பது, வெளிநாடுகளுக்கு சென்று கொண்டே இருப்பது, வெளிநாட்டு குடியுரிமை பெற்று அங்கேயே செட்டிலாகுவது போன்ற பலன்கள் நடக்கும். முழுமையான தாம்பத்ய சுகம், நிம்மதியான தூக்கம், தூக்கத்தில் கனவில் தெய்வங்கள், மூதாதையர்கள் வந்து பேசுவது போன்ற பலன்கள் நடக்கும். இதற்கு அசுப கிரக பார்வை இருந்தால் சிறைவாசம் அல்லது தீராத நோய்கள் ஏற்படும். ஜாதகர் வரவுக்கு மீறி செலவு செய்வார். கட்டுக்கடங்காத விரயம் இருந்து கொண்டே இருக்கும். கடன் பெற்றும் வீண் செலவு செய்ய தயங்க மாட்டார். சோம்பேறியாக இருப்பதுடன் சொந்த ஊரை விட்டு அடிக்கடி நீண்ட தூரம் பயணம் செய்யும் தொழிலில் இருப்பார். வீண் வம்பு, வழக்கு, விரோதங்களை தானே உருவாக்குவார். கடன், வம்பு வழக்கிற்காக அடிக்கடி தலைமறைவாக வாழ்வார்கள். சிலருக்கு கடுமையான திருமணத் தடை உண்டாகும். திருமணம் நடந்தால் தொழில், உத்தியோகம் அல்லது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். தர்மம், கர்மம், காமம், மோட்சம்.

    ஒருவரின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருந்தால் துன்பம், கவலை, மறு ஜென்மம் பற்றிய எண்ணங்கள் இருக்காது. மிகுந்த சிரமத்துடன் வாழ்க்கை போராட்டமாக இருக்கும் போது மறுபிறவியே வேண்டாம் என்ற வகையில் வாழ்க்கையைப் பற்றிய ஒரு அவநம்பிக்கை இருக்கும். அதே போல் ஆன்மீக நாட்டம் அதிகமாக உள்ளவர்களுக்கும் மோட்சம் பற்றிய எண்ணம் மிகுதியாக இருக்கும். மனித வாழ்க்கை காசு, காமம், சொத்து என்ற மூன்று மாய வலைகளில் சுற்றிக் கொண்டே இருக்கும். இந்த மூன்று விஷயங்களில் உழன்று சலிப்படையும் மோட்சம் அடைய விரும்புவார்கள். ஒரு சிலர் எவ்வளவு துன்பம் அடைந்தாலும் அடுத்த பிறவியிலாவது எனது ஆசைகள் பூர்த்தி அடைய வேண்டும் என்று மறுபிறவி பற்றிய என்ற ஆர்வத்தில் இருப்பார்கள்.

    ஒரு ஜாதக 12 கட்டங்கள் இருக்கும். இந்த 12 கட்டங்களும் ஒருவரின் வாழ்வியல் முறைகளையும் பலன்களையும் சம்பவ காலங்களையும் நிர்ணயிக்க மிக முக்கியமாகும். இந்த 12 கட்டங்களும் தர்மம்,கர்மம், காமம் மோட்சம் என்று நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்று ராசிகளும் தர்ம (1, 5, 9 ) திரிகோணத்தில் அடங்கும்.இந்த பாவகங்கள் மூலமாக ஜாதகரின் எண்ணங்களையும் சிந்தனையும் அறிய முடியும். ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்று ராசிகளும் கர்ம (2, 6, 10) பலன்களை வெளிப்படுத்தும் ஸ்தானங்களாகும். இந்த பாவகங்கள் மூலம் ஜாதகரின் தொழில் மற்றும் பொருளீட்டுதல் பற்றி அறிய முடியும். மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளும் காமத் 3, 7, 11 திரிகோணத்தில் அடங்கும். ஒருவரின் ஆசையையும் விருப்பங்களையும் அடைய உதவும் ஸ்தானமாகும்.

    கடகம் விருச்சகம் மீனம் மூன்று ராசி ஆகிய மூன்று ராசிகளும் மோட்சத்தை 4, 8, 12 பற்றி கூறுமடங்கள். இந்த ஸ்தானங்களின் மூலமாக பாவத்தில் இருந்து விடுபடுவதையும் மோட்சம் பற்றிய எண்ணங்களையும் அறிய முடியும். இதை மேலும் புரியும் படி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு மனிதன் தர்மத்தின் வழியில் வாழ்க்கை நடத்தி பொருளீட்டினால் அவனது விருப்பங்களும் லட்சியங்களும் நிறைவேறி எளிதாக மோட்சத்தை அடைய முடியும் என்பதாகும். அதர்மமாக வாழ்ந்து பொருள் ஈட்டி விருப்பங்களை நிறைவு செய்யபவர்கள் மறுபிறவி எடுத்து நற்கதி அடைய முயல வேண்டும். ஒருவரின் கர்மாவில் தனிப்பட்ட ஒருவரின் பாவ புண்ணியங்கள் மட்டும் இருக்காது. அதில் ஜாதகரைச் சார்ந்தவர்களின் கர்மாவும் இணைந்து இருக்கும்.

    முன்னோர்களின் பாவ புண்ணியங்களின் விளைவுதான் அவர்களின் சந்ததிகள். அதாவது ஒருவரின் உடலில் தாத்தாக்கள், கொள்ளுத் தாத்தாக்களின் மரபணுக்கள் தான் இருக்கிறது. பண்பு, அறிவு, குணம், ஞானம், நடை, உடை, பாவனை, செயல் பாடு, புத்தி சாலித்தனம் வெற்றி தோல்வி, நோய் , கர்மா ஆகிய அனைத்தும் மரபணு மூலம் சந்ததிகளுக்கு அனுப்படுகிறது. அவர்கள் வழியாக வந்த நமது தீய வினைகளை அனுபவிக்க ஏற்ற வகையிலேயே ஒருவரின் உடல் வடிவமைக்கப்படும்.

    திரிகோணம்

    திரிகோணம் என்பது ஒரு ஆத்மாவின் பிறவிப் பயனை விவரிக்க கூடிய ஸ்தானமாகும். கர்ம வினைகளின் அடிப்படையில் ஜாதகரின் சந்ததி விருத்தியை தீர்மானிப்பதால் மிக முக்கியமான ஸ்தானமாக ஐந்தாம் பாவகம் திகழ்கிறது. ஐந்திற்கு ஐந்தாமிடமான ஒன்பதாம் பாவகம் தந்தை மற்றும் தந்தை வழி முன்னோர்களையும் அவர்கள் செய்த கர்மவினையை பற்றிக் கூறுமிடம் என்பதால் மூன்றாவது திரிகோணமாகும். இந்த மூன்று திரிகோணஸ்தானங்களிலும் கேதுவின் நட்சத்திரம் உள்ளது.

    அஸ்வினி மகம் மூலம் இந்த கேதுவின் நட்சத்திரங்களில் தான் ஒரு தலைமுறையின் மொத்த கர்மப் பிணைப்புகள் உள்ளது. இந்த நட்சத்திரங்கள் சென்ற ஜென்மத் தொடர்ச்சியே இந்த பிறவி என்பதை நமக்கு உணர்த்துகிறது. கடந்து வந்த ஜென்மத்தில் நிறைவேற்ற தவறிய நிறைவேற்ற முடியாமல் விட்டுப் போன கடமைகளை முடிக்கவே ஒரு ஜனனம் நிகழ்கிறது. அந்த விட்டுப் போன சம்பவங்களை தொடரும்போது புதிய சம்பவங்கள் பதிவாகும். கர்மா, கர்ம வினை, மறுபிறவி, மோட்சம் ஆகியவற்றிற்கும் சனி, ராகு கேதுவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதனால் தான் கோச்சாரங்களில் சனி ராகு கேது பெயர்ச்சி என்றால் அனைவரின் மனதிலும் ஒரு கலக்கம் வருகிறது. இந்த மூன்று கிரகங்களும் வினை ஊக்கிகள். பிறப்புக்கும், இறப்புக்கும், மறு பிறவிக்கும் சனி, ராகு, கேதுவின் சம்பந்தம் உண்டு.

    செல்: 98652 20406

    Next Story
    ×