என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சிறப்புக் கட்டுரைகள்
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் கவர்னர் கவிக்குயில் சரோஜினி நாயுடு
- கவிக்குயில் சரோஜினி நாயுடு சுதந்திர இந்தியாவின் முதல் பெண் கவர்னர் என்ற பெருமைக்குரியவர்.
- 1931-ம் ஆண்டு சரோஜினி நாயுடு மகாத்மா காந்தியுடன் இணைந்து லண்டனில் நடந்த வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொண்டார்.
இன்று (மார்ச் 2-ந்தேதி) சரோஜினி நாயுடு நினைவுநாள்.
'இந்தியாவின் நைட்டிங்கேல்' என்றும், கவிக்குயில் என்றும் புகழப்படுபவர் சரோஜினி நாயுடு.
கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், சுதந்திரப் போராட்ட வீராங்கனை என பன்முகத்தன்மை கொண்டவர்.
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் கவர்னர் என்ற பெருமைக்குரியவர்.
பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றத்திற்கு துணிச்சலாக குரல் கொடுத்த சரோஜினி நாயுடுவின் பிறந்தநாள், இந்தியாவின் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆந்திராவில் (தற்போது தெலுங்கானா) ஐதராபாத்தில் 1879-ம் ஆண்டு பிப்ரவரி 13-ல் பிறந்தார். தந்தை பெயர் அகோரநாத். தாயார் வரதா சுந்தரி. 12-வது வயதில் சரோஜினி மெட்ரிகுலேஷன் பரீட்சையில் சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் மாணவியாக தேர்வு பெற்றார். அப்போதே, கவிதைகள் எழுதி அசாதாரணமான திறமையை வெளிப்படுத்தினார்.
மேல்படிப்புக்காக இங்கிலாந்து சென்ற அவர் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மற்றும் கேப்ரீட் கல்லூரியில் படித்தார். ஆங்கிலம், தெலுங்கு, உருது, வங்காளம், பாரசீகம் ஆகிய மொழிகளில் பேச கற்றுக்கொண்டார். கல்லூரியில் படிக்கும்போது ஆசிரியர் நடத்தும் பாடத்தை விட கல்லூரி தோட்டத்தில் பூத்துக்குலுங்கும் மலர்களே அவரை கவர்ந்தன.
''மலர்களே நீங்கள் அடர்த்தியாக தழுவிக்கொண்டதால் கொம்பு இருக்கும் இடமே தெரியவில்லையே, பூச்சரமா! கொம்பா! என்று தெரியவில்லையே, ஆகா! உடல் எல்லாம் மணம் மிக்க உங்களை சுமக்கும் கொம்பு பாக்கியம் பெற்றது'' என்று கவிதை படைத்தார்.
இங்கிலாந்தில் இருந்து தாயகம் திரும்பி அவர் தனது 19-வது வயதில் கோவிந்தராஜு நாயுடு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1898-ம் ஆண்டு சென்னையில் அவர் திருமணம் நடந்தது. இது கலப்பு திருமணம் ஆகும். 1905-ம் ஆண்டு வங்காளம் பிரிக்கப்பட்டதை தொடர்ந்து சரோஜினி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது கோபாலகிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர், நேரு ஆகியோரின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது. மகாத்மா காந்தியுடன் இணைந்து தண்டி யாத்திரையில் ஈடுபட்டார். தொடர்ந்து நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பெண் கொடுமையை கண்டித்தும், பெண்கள் முன்னேற்றம், இளைய சமுதாயத்தின் நல்வாழ்வு குறித்தும் சொற்பொழிவாற்றினார். 1919-ம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையின்போது பெண்களுக்கு இழைக்கப்பட்ட அத்துமீறல்களை கண்டித்து சரோஜினி நாயுடு ஆவேசமாக பேசினார். ஆங்கிலேய அரசு அளித்த பதக்கத்தை திருப்பி அனுப்பினார். இவரது ஆவேச சொற்பொழிவு மக்களிடம் எழுச்சியை உருவாக்கியது. அது ஆங்கில அரசை மிரளச் செய்தது.
தொடர்ந்து லண்டனில் நடந்த கூட்டத்தில் சரோஜினி தீப்பிழம்பாக பேசினார். குடிகளை கொடிய விலங்குகள் போல் வேட்டையாடலாமா? நிரபராதிகளையும் நிராயுதபாணிகளையும் சுட்டு, மருந்து தீரும் வரை சுட்டேன் என்று ஜெனரல் டயர் குண்டு மழை பொழிந்தானே அது நியாயமா?. பிரிட்டிஷாரின் வீரம் இதுதானா? பிரிட்டிஷ் ஜனநாயகம் இதுதானா? என்று முழங்கினார்.
அப்போது கூடியிருந்த கூட்டம் 'வெட்கம் வெட்கம்' என்று குரல் கொடுத்த சரோஜினி நாயுடுவின் அனல் பறக்கும் பேச்சால் ஆங்கிலேய அரசு திகைத்தது. 1922-ல் இந்தியா வந்த வேல்ஸ் இளவரசர் ஜாலியன் வாலாபாக் சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டார்.
1925-ம் ஆண்டு சரோஜினி நாயுடு காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளை அரசாங்கத்தின் ரவுலட் சட்டத்தை கண்டித்து நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார்.
1930-ல் தேசிய காங்கிரஸ் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலைக்கோரி நடந்த போராட்டத்தில் காந்தி கைது செய்யப்பட்டார். சில நாட்களில் சரோஜினி நாயுடுவும் கைதாகி பல மாதங்கள் எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறைச்சாலை அவருக்கு சிறைச்சாலையாக தெரியவில்லை. மாறாக மாங்குயில் கூவிடும் பூஞ்சோலையாக காட்சியளித்தது. சுதந்திரமாக கவிதைகளை எழுதிக்குவித்தார்.
சிறை வளாகத்தில் ஏராளமான பூஞ்செடிகளை வளர்த்து அவை பூத்துக்குலுங்கும் காட்சியை கண்டு ரசித்தார். அவர் விடுதலை பெற போகும் நாள் வந்தது. அப்போது மேலும் பல செடிகள் பூக்கும் தருவாயில் இருந்தன. அவற்றையும் காண விரும்பிய சரோஜினி விடுதலை நாளை தள்ளிப்போட அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்தது. பூக்கள் பூத்துக்குலுங்கிய காட்சியை கண்ட பிறகே அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
1931-ம் ஆண்டு சரோஜினி நாயுடு மகாத்மா காந்தியுடன் இணைந்து லண்டனில் நடந்த வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொண்டார்.
1942 அக்டோபர் 2-ந்தேதி வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைதாகி காந்தியுடன் 21 மாதங்கள் சிறையில் இருந்தார். காந்தி அவரை செல்லமாக 'மிக்கி மவுஸ்' என்று அழைத்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு உத்தரபிரதேச மாநில கவர்னராக பதவி ஏற்றார். இந்தியாவின் முதல் பெண் கவர்னராக பெருமை பெற்றார்.
சரோஜினி நாயுடு எழுதிய முதல் பாடல்கள் தொகுப்பு 1905-ம் ஆண்டு 'தி கோல்டன் த்ரெஷோல்டு' என்ற பெயரில் வெளியிடப்பட்டது. ஆங்கிலத்தில் அவர் எழுதிய கவிதைகள் 'தி செப்ட் புல்லாங்குழல் தி பெதர் ஆப் தி டான்' என்ற தலைப்புகளில் வெளியிடப்பட்டன.
இவரது கவிதை படைப்புகள் தேசபக்தி, காதல், சோகம் உள்ளிட்ட கருப்பொருளை கொண்டது. குழந்தைகள் கவிதைகளும் எழுதி இருக்கிறார்.
கவிதை, பாடல்களின் தரம், கவிதையின் பொருள், காரணமாக இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்பட்டார்.
1949-ம் ஆண்டு மார்ச் 2-ந்தேதி லக்னோவில் உள்ள அரசு இல்லத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்