search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    இன்று சர்வதேச மிட்டாய் தினம்- எந்த ஊரு சாக்லேட் ஆனாலும்... எங்க ஊரு மிட்டாய்க்கு ஈடாகுமா?
    X

    இன்று சர்வதேச மிட்டாய் தினம்- எந்த ஊரு சாக்லேட் ஆனாலும்... எங்க ஊரு மிட்டாய்க்கு ஈடாகுமா?

    • பாரம்பரிய மிட்டாய் ரகங்களில் 50-க்கும் மேற்பட்ட ரகங்கள் மறைந்தும் விட்டன.
    • இஞ்சி மிட்டாய் உலர்ந்த இஞ்சி, சர்க்கரை மற்றும் சீரகம் ஆகியவற்றால் தயாரிப்பது. இது அஜீரணம், தொண்டைப்புண் ஆகியவற்றுக்கு நிவாரணியாகவும் இருந்தது.

    அப்பா மிட்டாய்ப்பா...

    என்று சின்ன வயதில் கேட்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

    இன்று சர்வதேச மிட்டாய் தினம். நினைத்தாலே நாவின் தேனூறுகிறது.

    அந்த கால மலரும் நினைவுகள் கண்முன் தெரிகிறது. 1980 வரை குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்கி கொடுக்காதீர்கள். அது உடலுக்கு ஆபத்தானது என்று மருத்துவர்கள் பெருமளவு எச்சரித்ததாக நினைவு இல்லை.

    ஆனால் இந்த காலத்தில் 'டாக்டர், பையன் எதுவும் சாப்பிட மாட்டேங்கிறான்... பல் கூசுவதாக அழுகிறான்....' என்று சொன்னதும் அவர் பரிசோத்தித்து விட்டு 'மொத்த பல்லும் சொத்தையாகி இருக்கிறது. சாக்லேட் அதிகமாக வாங்கி கொடுக்கிறீர்களோ? என்பார்.

    ஆமாம் டாக்டர். தினமும் சாக்லேட் கேட்டு அடம் பிடிக்கிறான் என்பார்கள். உடனே டாக்டர் 'பல்லுக்கு சிகிச்சை அளித்தே ஆக வேண்டும். வயிறு கோளாறுக்கு மருந்து எழுதி தருகிறேன். இனி மேல் சாக்லேட் வாங்கி கொடுப்பதை நிறுத்தி விடுங்கள் என்பார். அந்த காலத்திலும் தினமும் மிட்டாய்கள் வாங்கித்தான் சாப்பிட்டார்கள். ஆனால் எந்த பிரச்சினையும் வரவில்லை. அன்று ஐந்து காசுக்கு குச்சி மிட்டாய் வாங்கி சாப்பிட்டதில் இருந்த சந்தோசம் (ஜாய்) இன்று ஐம்பது ரூபாய்க்கு 'கின்டர்ஜாய்' வாங்கி சாப்பிடுவதில் கிடைக்கவில்லை.

    கடலைமிட்டாய், தேன் மிட்டாய், எள்ளுமிட்டாய், கல்கோனா, இஞ்சிமிட்டாய், சவ்மிட்டாய், குச்சி மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய், சீரக மிட்டாய், பொரி உருண்டை, நூல்கட்டி சுற்றும் மிட்டாய், அரிசி மாவு அப்பள மிட்டாய் என்று பல வகையான மிட்டாய்கள் இருந்தன. குடிசை தொழில்களால் உருவெடுத்த இந்த மிட்டாய் ரகங்கள் சாப்பிட்ட குழந்தைகளை எதுவும் செய்யவில்லை. வேர்க்கடலையும், வெல்லமும் சேர்த்து தயாரிக்கப்படும் கடலை மிட்டாயை கடித்து சாப்பிட்டது பல்லுக்கு உறுதியாகத்தான் இருந்தது. கெடுதியை தரவில்லை.

    நூல் சுற்றிய மிட்டாயை இரு கைகளிலும் பிடித்தபடி அந்த நூலில் மிட்டாயை சுற்றிவிட்டபடி தெருவில் அங்கும் இங்கும் ஓடி விளையாடியது ஆரோக்கியத்தை தான் கொடுத்தது.

    ஆனால் இன்று எங்கும் சுற்றாமல் பணத்தை செலவு செய்து வாங்கி சாப்பிடும் மிட்டாய்களால் உடலுக்குத் தான் பாதிப்பு வருகிறது.

    வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால் இந்த வகை மிட்டாய்களின் விற்பனை வெகுவாக தடுமாறியது. பலம் வாய்ந்த, நிறுவனங்களின் முன்பு குடிசைத் தொழில்கள் படிப்படியாக மறைந்தன.

    பாரம்பரிய மிட்டாய் ரகங்களில் 50-க்கும் மேற்பட்ட ரகங்கள் மறைந்தும் விட்டன. கடந்த தலைமுறை சுவைத்து மகிழ்ந்த மிட்டாய் ரகங்களை மீட்கவும், பன்னாட்டு நிறுவங்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும் பாரம்பரிய மிட்டாய்களையும் கண்ணைக்கவரும் பாக்கெட்டுகளில் அடைத்து சந்தைப்படுத்தி வருகிறார்கள்.

    கடையில் சென்று 5 ரூபாய்க்கு மிட்டாய் வாங்குவதை கவுரவ குறைச்சலாக நினைப்பதால் ஆரஞ்சு மிட்டாய், கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், தேன் மிட்டாய் போன்ற மிட்டாய்களை பாக்கெட்டுகளில் அடைத்து ரூ.50-க்கு மேல் விற்பதால் ஒரு சிலர் வாங்கத்தான் செய்கிறார்கள்.

    அரிசி மாவையும் உளுந்து மாவையும் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டையாக பிடித்து எண்ணெயில் பொரித்து எடுத்து சர்க்கரை பாகுவில் போட்டு எடுத்தால் போதும். தேன் மிட்டாய் தயாராகிவிடும்.

    தேங்காயும், வெல்லமும் கலந்த கல்கோனா மிட்டாயை வாயில் போட்டு சுவைத்தால் நீண்ட நேரம் கரையாது. நாவில் சுவை மட்டும் நிற்கும்.

    இஞ்சி மிட்டாய் உலர்ந்த இஞ்சி, சர்க்கரை மற்றும் சீரகம் ஆகியவற்றால் தயாரிப்பது. இது அஜீரணம், தொண்டைப்புண் ஆகியவற்றுக்கு நிவாரணியாகவும் இருந்தது.

    கோவில்பட்டி கடலை மிட்டாய், சாத்தூர் மிளகு சேவ், தூத்துக்குடி மக்ரூன், மணப்பாறை முறுக்கு என்று ஊருக்கு ஒரு ஸ்பெசல் மிட்டாய், திண்பண்டங்கள் உண்டு. இவைகள் பாரம்பரிய சுவை கொண்டது. பள்ளி வாசலில் காத்திருக்கும் பாட்டியிடம் வாங்கி தின்ற மிட்டாய் சுவையும், ஆரோக்கியமும் தனி தான்.

    இன்று கண்ணாடி பெட்டிகளுக்குள் வரிசை கட்டி கண்சிமிட்டும் விதவிதமான விலை உயர்ந்த மிட்டாய்கள் எந்த ஊரில் இருந்து வந்திருந்தாலும், எந்த நாட்டில் இருந்து வந்திருந்தாலும் எங்க ஊரு பாரம்பரிய மிட்டாய் போல் வருமா?

    உடலையும், பாரம்பரியத்தையும் காக்கும் பாரம்பரிய மிட்டாய்களை மீட்டெடுப்போம்.

    Next Story
    ×