என் மலர்
2025 - ஒரு பார்வை

2025 REWIND: காங்கிரஸ், ஆம் ஆத்மிக்கு தலைநகரில் தண்ணி காட்டிய பா.ஜ.க.
- தேர்தல் ஆணையம் அறிவித்த முடிவுகளின்படி பா.ஜ.க. 48 தொகுதிகளில் வென்றது.
- 27 ஆண்டுக்கு பிறகு தலைநகரில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது.
புதுடெல்லி:
அது ஒரு அரசியல் கட்சி அலுவலகம். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான பணிகளில் அனைவரும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
கட்சியின் தலைவரான சொக்கலிங்கம் அங்கிருந்த நிர்வாகிகளிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சண்முகம் என்ற தொண்டர், என்ன தலைவரே, அடுத்த ஆண்டும் நமது வெற்றிப் பயணம் தொடருமா என கேட்டார். அதற்கு தலைவர், நாம் செய்யற வேலைகளில் தான் வெற்றியின் சதவீதம் அதிகரிக்கும். எனவே தீவிரமாக வேலை செய்யணும் என்றார்.
என்ன செஞ்சு பலன் கிடைக்க மாட்டேங்குதே தலைவரே என சண்முகம் நொந்து கொண்டார்.
அப்படி சொல்லாதே, நமது செயல் திட்டங்களைப் பார்த்து மக்கள் நம்மை மதிச்சு வாக்களிக்கணும். அப்படி நாம் நடந்துக்கணும் என்ற சொக்கலிங்கம்,இப்படி செஞ்சதாலே தான் போன ஆண்டு டெல்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவால் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது என கூறினார்.
மேலும், 27 ஆண்டுக்கு பிறகு ஆட்சியைப் பிடிச்சுதுன்னா சும்மாவா என அசால்ட்டாக தெரிவித்தார்.
அப்படியா, எப்படின்னே அவங்களால முடிஞ்சது? அது பற்றி விவரமா சொல்லுங்கன்ண்ணே? என்றார் சண்முகம்.
இதையடுத்து, சொக்கலிங்கம் கூறியதன் விவரம் வருமாறு:
டெல்லி சட்டசபையின் 70 தொகுதிகளுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
அதன் முடிவுகளின்படி, பா.ஜ.க. ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெற்றது.
தேர்தல் ஆணையம் அறிவித்த முடிவுகளின்படி பா.ஜ.க. 48 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
2015-ல் நடந்த சட்டசபை தேர்தலில் 3 இடங்களையும், 2020-ல் நடந்த சட்டசபை தேர்தலில் 8 இடங்களையும் பெற்ற பா.ஜ.க. கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இதன்மூலம் 27 ஆண்டுக்குப் பிறகு பா.ஜ.க. டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், கடந்த செப்டம்பரில் நடந்த துணை ஜனாதிபதி தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது என நினைவு கூர்ந்தார்.
ஓகேண்ணே, சொல்லிட்டீங்கள, இனிமே பாருங்க எப்படி தீயா வேலை செஞ்சு நமது கட்சியை ஆட்சிக்கு வரவைக்கறோம்னு பாருங்க என்று சொன்னபடியே கட்சி அலுவலகத்தை விட்டுக் கிளம்பினார் சண்முகம்.






