

புதுச்சேரியில் 16-வது சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 18 தொகுதிகள் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.
இருப்பினும் அமைச்சரவை பதவிகளை பங்கிட்டு கொள்வதில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே இழுபறி நீடித்தது. பா.ஜ.க. கடந்த ஆட்சியில் இடம்பெற்றது போல 2 அமைச்சர் பதவி மற்றும் சபாநாயகர் பதவி வழங்குமாறு வலியுறுத்தியது.
இதனை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஏற்க மறுத்ததால் அமைச்சர்கள் நியமனத்தில் இழுபறி நீடித்தது. இறுதியில் கடந்த மே 13-ந் தேதி என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி முதல்-மந்திரியாகவும், பா.ஜ.க.வை சேர்ந்த நமச்சிவாயம், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர்.
ஆனால் இதுவரை யாருக்கும் இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி முதலமைச்சர் ரங்கசாமி கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து அமைச்சரவை விரிவாக்கத்திற்கான பரிந்துரை கடிதத்தை வழங்கினார்.
அந்த கடிதம் ஜனாதிபதி ஒப்புதலுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய உள்துறை அனுமதி கிடைத்தவுடன் கடந்த 7-ந் தேதி அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடத்த திட்டமிடப்பட்டது.
ஆனால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைக்காததால் பதவியேற்பு விழா தள்ளிப்போனது.
இந்தநிலையில் முதல்-மந்திரியின் பரிந்துரை கடிதம் உள்துறை அமைச்சகம் மூலம் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதில் 3 பேரை அமைச்சர்களாக நியமிக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று இரவு ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜவேலு, வி.பி.சிவக்கொழுந்து, பா.ஜ.க.வை சேர்ந்த ராஜசேகரன் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர்.
புதிய அமைச்சர்கள் 11-ந் தேதி பதவி ஏற்பார்கள் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 14-ந் தேதி அமாவாசையாகும். அதுவரை தேய்பிறை காலம் என்பதால் 17-ந் தேதி வளர்பிறை முகூர்த்த நாளில் மந்திரிகள் பதவி ஏற்க உள்ளனர்.
பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் பிறகு மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு, சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடத்தப்படும் என கூறப்படுகிறது.