என் மலர்
இந்தியா

கர்நாடகத்தில் பிரதமர் மோடியின் வியூகம் பா.ஜனதாவுக்கு கைகொடுக்குமா?: 13-ந்தேதி தெரிந்துவிடும்
- 7 நாட்கள் கர்நாடகத்தில் பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம் செய்திருந்தார்.
- பெங்களூருவில் 3 நாட்களில் 38 கிலோ மீட்டருக்கு திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் செய்திருந்தார்.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். தென்னிந்தியாவில் கர்நாடகத்தில் தான் பா.ஜனதா ஆட்சி நடப்பதால், இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதில் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் தீவிரம் காட்டி வருகிறார்கள். கர்நாடக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக குஜராத் போன்று கர்நாடகத்தில் ஊர்வலம், பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்று இருந்தார்.
குறிப்பாக 7 நாட்கள் கர்நாடகத்தில் பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம் செய்திருந்தார். அந்த 7 நாட்களில் 19 மாவட்டங்களுக்கு சென்றிருந்த அவர், 18 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசியதுடன், 5 முறை திறந்த வாகனத்தில் சென்று ஊர்வலமும் நடத்தி இருந்தார். பா.ஜனதா தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடன் காணொலி காட்சி மூலமாகவும் பிரதமர் மோடி பேசி இருந்தார்.
குறிப்பாக பெங்களூரு, பெலகாவி, மைசூரு, கலபுரகி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி அதிக முன்னுரிமை கொடுத்து ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு இருந்தார். பெங்களூருவில் 3 நாட்களில் 38 கிலோ மீட்டருக்கு திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் செய்திருந்தார். பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளில் 20 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளதால், பெங்களூருவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தார். இதற்கு அடுத்தபடியாக பெலகாவி மாவட்டத்தில் 18 தொகுதிகள் உள்ளதால், அங்கு 2 முறை பொதுக்கூட்டங்களில் பேசி இருந்தார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் சொந்த ஊர் கலபுரகி என்பதால், அங்கு திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி ஊர்வலம் சென்றிருந்தார். அதற்கு அடுத்தபடியாக மைசூரு மாவட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா போட்டியிடுவதால், அங்கு ஒரு பிரசார கூட்டத்திலும், ஒரு முறை திறந்த வாகனத்திலும் சென்று பா.ஜனதாவுக்கு பிரதமர் மோடி ஆதரவு திரட்டி இருந்தார். பிரதமர் மோடியின் இந்த வியூகம் பா.ஜனதாவுக்கு வெற்றியை தேடி கொடுக்குமா? என்பதை வருகிற 13-ந் தேதி தெரிந்து கொள்ளலாம்.






