search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவில் ஜனநாயகம் செத்து விட்டது- ராகுல் காந்தி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    இந்தியாவில் ஜனநாயகம் செத்து விட்டது- ராகுல் காந்தி

    • ஜனநாயகம் அழிக்கப்படுவதை இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் உணர்ந்துள்ளனர்.
    • எதிர்த்தால் நசுக்கப்படுகிறார்கள். எதிர்ப்பவர்கள் யார்? என்பது பற்றி எல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை.

    புதுடெல்லி:

    விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.

    டெல்லியில் ஜனாதிபதியை சந்தித்து காங்கிரசார் மனு கொடுக்க குவிந்தனர். பிரதமர் மோடி வீட்டையும் முற்றுகையிடும் போராட்டத்துக்காக காங்கிரசார் திரண்டதால் பதற்றம் உருவானது.

    காங்கிரசார் போராட்டத்தை தொடர்ந்து டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதையும் மீறி காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் காலை 9.30 மணிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாடு முழுவதும் வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து விட்டது. மக்கள் படும் இன்னல்கள் பற்றி மத்திய நிதி மந்திரிக்கு ஒன்றும் தெரியவில்லை.

    இந்தியாவில் ஜனநாயகம் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவே அதை பார்த்துக் கொண்டிருக்கிறது. நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. 2, 3 பணக்காரர்களுக்காக மட்டுமே இந்த சர்வாதிகார ஆட்சி நடத்தப்படுகிறது.

    இந்த சர்வாதிகார ஆட்சியை எதிர்ப்பவர்கள் கடுமையாக தாக்கப்படுகிறார்கள். ஜெயிலில் அடைக்கப்படுகிறார்கள். விலைவாசி உயர்வு மற்றும் முக்கிய பிரச்சினைகள் பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த இந்த அரசு ஒருபோதும் தயாராக இல்லை.

    ஜனநாயகம் என்பதே இல்லாமல் போய்விட்டது.

    நூற்றாண்டுக்கு முன்பு இந்தியா ஒவ்வொரு செங்கல் செங்கல்லாக வைத்து நல்ல முறையில் கட்டமைக்கப்பட்டது. அவை அனைத்தையும் இன்று உங்கள் கண் முன்னால் அடித்து நொறுக்கிக் கொண்டு இருக்கிறார்கள். உங்கள் அனைவருக்கும் இது நன்றாக தெரியும்.

    ஜனநாயகம் அழிக்கப்படுவதை இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் உணர்ந்துள்ளனர். ஆனால் அதை எதிர்த்தால் நசுக்கப்படுகிறார்கள். எதிர்ப்பவர்கள் யார்? என்பது பற்றி எல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை.

    அவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர். அவர் ஆணா, பெண்ணா? எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதை எல்லாம் பார்ப்பது இல்லை. அடித்து சிறையில் தள்ளுகிறார்கள். இதன் நோக்கம் என்னவென்றால் யாரும் மக்கள் பிரச்சினையை பற்றி பேசக்கூடாது என்பதுதான்.

    மக்கள் நலனை பற்றி சிந்திப்பது இல்லை. சமுதாயத்தில் நடக்கும் வன்முறைகள், விலைவாசி உயர்வு போன்றவை பற்றி யாரும் பேசக்கூடாது என்றுதான் சர்வாதிகாரமாக நடந்துகொள்கிறார்கள். இதை கண்டித்து தான் இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்துகிறது.

    பிரதமர் வீட்டை முற்றுகையிட முடிவு செய்துள்ளோம். அனைத்து பொருட்களின் விலையும் ஜி.எஸ்.டி. வரியால் தாறுமாறாக உயர்ந்து விட்டது. இதற்கு பிரதமர் பதில் சொல்லியே தீர வேண்டும்.

    சர்வாதிகார ஆட்சியால் நான் பயந்து போய் விட மாட்டேன். எனக்கு பயம் என்பதே கிடையாது. என்னை குறி வைத்து தாக்குகிறார்கள். இதை நான் மகிழ்ச்சியாகத்தான் கருதுகிறேன். உண்மையை சொன்னால் தாக்குவார்கள் என்றால் மீண்டும் மீண்டும் நான் உண்மையை சொல்லிக் கொண்டே இருப்பேன். ஒருபோதும் அதை நான் நிறுத்தமாட்டேன்.

    போர் வரும்போது காயம் அடையும் வீரர்கள் அதை நினைத்து மகிழ்ச்சி அடைவார்கள். அதுபோல தான் நானும் என்மீது விசாரணை நோக்குகளை தூண்டிவிட்டாலும், மகிழ்ச்சிதான் அடைகிறேன். ஆனால் இந்த தாக்குதலை நீங்கள் மகிழ்ச்சியாக உணருகிறீர்களா?

    அனைத்து விசாரணை அமைப்புகளும் அரசுக்கு சாதகமாக செயல்படுகின்றன. இதனால் ஜனநாயகம் என்பது ஒரு நினைவாகவே மாறும் அபாயம் இருக்கிறது.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    Next Story
    ×