search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் திடீர் மரணம்
    X

    கேரளாவில் வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் திடீர் மரணம்

    • இந்தியாவில் இந்த நோய் கேரளாவைச் சேர்ந்த 35 வயது வாலிபருக்கு முதலில் ஏற்பட்டது.
    • திருச்சூர் அருகே உள்ள சாவக்காட்டில் 22 வயது வாலிபர் நேற்று திடீரென இறந்தார்.

    திருவனந்தபுரம்:

    கொரோனாவை தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்களை குரங்கு அம்மை நோய் அச்சுறுத்தி வருகிறது.

    இந்தியாவில் இந்த நோய் கேரளாவைச் சேர்ந்த 35 வயது வாலிபருக்கு முதலில் ஏற்பட்டது. கடந்த 14-ந் தேதி வெளிநாட்டில் இருந்து வந்த அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து அவர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கண்காணிக்கப்பட்டதில் மேலும் 2 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு அவர்களும் அஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் திருச்சூர் அருகே உள்ள சாவக்காட்டில் 22 வயது வாலிபர் நேற்று திடீரென இறந்தார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கேரளா வந்தவர் என்பதால், குரங்கு அம்மை நோய் பாதிப்பு காரணமாக இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் சுகாதாரத் துறைக்கு எழுந்துள்ளது.

    அதன் அடிப்படையில் அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆலப்புழாவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனப் பிரிவில் சோதனைக்கு அனுப்பப்பட்டன. 3 நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வந்த போது வைரஸ் நோயின் அறிகுறிகளைக் காட்டினாலும், வாலிபரின் உடலில் சிவப்பு புள்ளிகள் அல்லது கொப்புளங்கள் இல்லை என்று கூறப்படுகிறது.

    இருப்பினும், அவருக்கு வலிப்புத்தாக்கங்கள் மற்றும் நோய் தொடர்பான பிற அறிகுறிகள் இருந்துள்ளன. எனவே அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸை விட்டு வெளியேறிய போது நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சுகாதாரத் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தபிறகு, இறந்த வாலிபரின் உடல் கோவிட் இறப்புகளைப் போன்ற நெறிமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யப்பட்டது.

    இதற்கிடையில், இந்தியாவில் முதலில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 35 வயது வாலிபர் குணமடைந்து திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

    Next Story
    ×