search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சபரிமலையில் உண்டியல் காணிக்கை நாணயம் எண்ணும் பணி தற்காலிகமாக நிறுத்தம்
    X

    சபரிமலையில் உண்டியல் காணிக்கை நாணயம் எண்ணும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

    • ரூபாய் நோட்டுகள் மூலம் ரூ.330 கோடி வரை கிடைத்துள்ளதாக தெரியவந்தது. அதேநேரம் காணிக்கை உண்டியல்களில் இருந்த நாணயங்களை எண்ணும் பணி பெரும் சவாலாக உள்ளது.
    • கடந்த சில நாட்களாக 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நாணயங்களை எண்ணும் பணியில் ஈடுபட்ட போதிலும், பெரிய செப்பு பாத்திரங்களில் சேகரிக்கப்பட்டிருந்த காசுகளில் பாதியைக் கூட எண்ணி முடிக்கவில்லை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு வழிபாடுகள் நடந்து முடிந்துள்ளன.

    இந்த விழாக்காலங்களில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வந்து தரிசனம் செய்தனர். அவர்கள் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களில் காணிக்கை செலுத்தி சென்றனர்.

    இதனால் கோவிலில் உள்ள அனைத்து உண்டியல்களும் நிரம்பி வழிந்தன. இவற்றை எண்ணும் பணியில் தேவசம்போர்டு ஊழியர்கள் ஈடுபட்டனர். இதற்கிடையில் காணிக்கை உண்டியல் குறிப்பிட்ட காலத்தில் திறக்கப்படாததால், அதில் இருந்த ரூபாய் நோட்டுகள் சேதமடைந்ததாக புகார் எழுந்தது.

    இதுகுறித்து கேரள ஐகோர்ட்டு விளக்கம் கேட்டது. அப்போது கூடுதல் பணியாளர்கள் தேவை எனக் கூறப்பட்டது. இதற்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணிகள் நடைபெற்றன. வருகிற 25-ந் தேதிக்குள் நாணயங்கள் எண்ணப்பட்டு விடும் என ஐகோர்ட்டில் தேவசம்போர்டு தெரிவித்தது.

    இதில் ரூபாய் நோட்டுகள் மூலம் ரூ.330 கோடி வரை கிடைத்துள்ளதாக தெரியவந்தது. அதேநேரம் காணிக்கை உண்டியல்களில் இருந்த நாணயங்களை எண்ணும் பணி பெரும் சவாலாக உள்ளது.

    கடந்த சில நாட்களாக 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நாணயங்களை எண்ணும் பணியில் ஈடுபட்ட போதிலும், பெரிய செப்பு பாத்திரங்களில் சேகரிக்கப்பட்டிருந்த காசுகளில் பாதியைக் கூட எண்ணி முடிக்கவில்லை.

    இந்த சூழலில் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் ஊழியர்கள் பலரும் சோர்வுடன் காணப்பட்டனர். இதனை தொடர்ந்து உண்டியல் காணிக்கை எண்ணும் பணியை தற்காலிகமாக நிறுத்தி தேவசம்போர்டு உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக காணிக்கை எண்ணும் பணியின் தலைமை அதிகாரி உன்னிகிருஷ்ணன், தேவசம்போர்டு தலைவர், கமிஷனர், விஜிலன்ஸ் அதிகாரி ஆகியோருக்கு கடிதம் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில் ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கவும், பிப்ரவரி 5-ந் தேதி முதல், இதுவரை பதார்த்தம் செய்யாதவர்கள், தற்போது கடமையாற்றுபவர்கள் மற்றும் கலாபீடம் மாணவர்களை பயன்படுத்தி நாணயங்கள் எண்ணும் பணியை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×