search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தல்- வாக்காளர் பட்டியல் 20-ந் தேதி வெளியிட முடிவு
    X

    காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தல்- வாக்காளர் பட்டியல் 20-ந் தேதி வெளியிட முடிவு

    • சசிதரூர் உள்ளிட்ட 5 எம்.பி.க்கள் கட்சியின் தேர்தல் அதிகாரிக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதி இருந்தனர்.
    • காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி தேர்தலில் வாக்களிக்க இருக்கும் பிரதிநிதிகள் பட்டியல் வருகிற 20-ந் தேதி வெளியிடப்படும்.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோர் 17-ந்தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் வருகிற 24-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.

    வேட்பு மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 8-ந் தேதி கடைசி நாளாகும். காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வருகிற 22-ந்தேதி வெளியாகுகிறது.

    இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு வாக்காளிக்க இருப்பவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. சசிதரூர் உள்ளிட்ட 5 எம்.பி.க்கள் கட்சியின் தேர்தல் அதிகாரிக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதி இருந்தனர்.

    அதில் கட்சியின் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். அப்போதுதான் தேர்தலில் வெளிப்படைத் தன்மை இருக்கும் என்று அவர்கள் தெரிவித்து இருந்தனர்.

    இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி தேர்தலில் வாக்களிக்க இருக்கும் பிரதிநிதிகள் பட்டியல் வருகிற 20-ந் தேதி வெளியிடப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

    தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள மத்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் வருகிற 8-ந் தேதி வெளியிடப்படும் 9 ஆயிரம் பேர் கொண்ட பிரதிநிதிகள் (வாக்காளர்) பட்டியலை பார்த்துக் கொள்ளலாம் என்று அந்த கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மது சூதனன் மிஸ்திரி கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக சசிதரூர் உள்ளிட்டோருக்கு மதுசூதனன் மிஸ்திரி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தலைமை தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்யும்போது, தேர்தலில் வாக்களிக்க உள்ள ஒட்டு மொத்த பிரதிநிதிகளின் பட்டியலை பெற்றுக் கொள்ள முடியும்.

    அந்த பட்டியலில் இருந்து தங்களுடைய வேட்பு மனுவில் கையொப்பமிடுவதற்கான 10 ஆதரவாளர்களை போட்டியாளர்கள் தேர்வு செய்து கொள்ள முடியும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இந்த பதிலால் திருப்தி அடைந்து இருப்பதாக சசிதரூர், கார்த்தி சிதம்ரம் ஆகியோர் அந்த கடிதங்களை தங்களின் டுவிட்டர் பக்கத்தில் இணைத்து பதிவிட்டுள்ளனர்.

    Next Story
    ×