என் மலர்tooltip icon

    இந்தியா

    பெங்களூருவில் பஸ்சில் பொதுமக்களுடன் பயணம் செய்த ராகுல்காந்தி
    X

    பி.எம்.டி.சி. பஸ்சில் ராகுல்காந்தி பயணம் செய்ததை படத்தில் காணலாம்.

    பெங்களூருவில் பஸ்சில் பொதுமக்களுடன் பயணம் செய்த ராகுல்காந்தி

    • ராகுல்காந்தி, பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    • ஒரு பெண் ராகுல் காந்தியின் கன்னத்தை தொட்டி தடவி பாச மழை பொழிந்தார்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக நேற்று முன்தினம் பெங்களூருவுக்கு வந்த ராகுல்காந்தி, காலையில் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களில் பணியாற்றும் உணவு, பொருட்கள் விற்பனை பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அத்துடன் ஆன்லைன் பொருட்கள் விற்பனை பிரதிநிதி ஒருவருடன் ஸ்கூட்டரில் பயணித்தார்.

    அதைத்தொடர்ந்து ஆனேக்கல், சிவாஜிநகர் தொகுதிகளில் நடந்த பிரசாரக் கூட்டத்திலும் அவர் பங்கேற்று இருந்தார். இரவில் பெங்களூரு கன்னிங்காம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினார். நேற்று காலை அவர் ஓட்டல் அருகே உள்ள டீக்கடையில் பொதுமக்களுடன் அமர்ந்து டீ குடித்தார். அப்போது அங்கிருந்தவர்களிடம் அரசியல், பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

    பின்னர் அவர் அங்கிருந்து பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பி.எம்.டி.சி. பஸ்சில் ஏறினார். டிக்கெட் எடுத்து பொதுமக்களுடன் ராமமூர்த்தி நகர் வரை அந்த பஸ்சில் பயணம் செய்தார்.

    அப்போது அவர் சிறிது நேரம் நின்றபடியும், சிறிது தூரம் இருக்கையில் அமர்ந்தும் பயணம் செய்தார். அந்த சமயத்தில் ராகுல்காந்தி, பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களிடம் அவர்களின் வேலை பற்றியும், அவர்கள் பஸ் பயணம் மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

    அப்போது சில பெண்கள் விலைவாசி உயர்வு பற்றி கூறினர். அதையடுத்து ராகுல்காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகையும், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் அமல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார். அவர் பயணிகளுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதுபோல் பயணிகளும் அவரை தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    ராமமூர்த்தி நகர் வந்ததும் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் அவர் பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது அங்கு நின்றிருந்த பெண் பயணிகள் ராகுல்காந்தி அருகில் வந்து பேசினர். அப்போது ஒரு பெண் ராகுல் காந்தியின் கன்னத்தை தொட்டி தடவி பாச மழை பொழிந்தார். அந்த பெண்ணை ராகுல்காந்தி ஆரத்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். மேலும் அந்த பெண்ணின் தோளில் கைப்போட்டு படம் எடுத்துக்கொண்டார்.

    பின்னர் ராகுல்காந்தி காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பஸ்சில் அவர் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    தற்போது ராகுல்காந்தி, பஸ்சில் பயணித்து, பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×