search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எம்.எல்.ஏ.க்கள் விரும்பினால் மீண்டும் முதல்-மந்திரி ஆவேன்: சித்தராமையா
    X

    எம்.எல்.ஏ.க்கள் விரும்பினால் மீண்டும் முதல்-மந்திரி ஆவேன்: சித்தராமையா

    • கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடக்கிறது.
    • கர்நாடகத்தில் பா.ஜனதா குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்தது.

    பெங்களூரு:

    முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடக்கிறது. இதில் பா.ஜனதாவை தோற்கடிப்பதற்காக போட்டியிடுகிறேன். அதுவே எனது கடைசி தேர்தல். அதன் பிறகு தேர்தலில் போட்டியிட மாட்டேன். 79 வயதுக்கு பிறகு தீவிர அரசியலில் ஈடுபடுவது கடினம். அவ்வாறு தீவிர அரசியலில் ஈடுபட உடல்நிலை நன்றாக இருக்க வேண்டும்.

    முதல்-மந்திரி பதவி மீது ஆசை இல்லை என்று சொல்ல மாட்டேன். மக்கள், எம்.எல்.ஏ.க்கள் விரும்பினால் மீண்டும் முதல்-மந்திரி ஆவேன். டி.கே.சிவக்குமார் முதல்-மந்திரி பதவி மீது ஆசைப்படுவதிலும் தவறு இல்லை. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி மேலிடத்தின் ஆதரவு இருந்தால் முதல்-மந்திரி ஆக முடியும். எனக்கு 75 வயது நிறைவடைவதால் எனது ஆதரவாளர்கள் பிறந்த நாளை கொண்டாட முடிவு செய்துள்ளனர். இதில் ராகுல் காந்தி கலந்துகொள்கிறார். நான் முதல்-மந்திரியாக வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யவில்லை.

    அவ்வாறு கூறி ஊடகங்கள் தான் விவாதத்தை ஏற்படுத்துகின்றன. எடியூரப்பா கூட 75-வது பிறந்த நாளை கொண்டாடினார். அதில் நானும் கலந்து கொண்டேன். அப்போது அதுகுறித்து யாரும் விவாதிக்கவில்லை. எனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை மட்டும் பெரிய அளவில் விவாதிப்பது ஏன்?. கர்நாடகத்தில் பா.ஜனதா குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்தது.

    ஆனால் நான் மக்களின் ஆதரவை பெற்று 5 ஆண்டுகள் ஆட்சி செய்தேன். மதவாத கட்சி பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். பா.ஜனதா மதத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்துகிறது. நான் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட மாட்டேன். நான் போட்டியிடுமாறு 15 தொகுதிகளை சேர்ந்த எங்கள் கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து நான் இன்னும் முடிவு செய்யவில்லை.

    நான் எனது தனிப்பட்ட தேவைக்காக எப்போதும் முதல்-மந்திரியிடம் பேசியது இல்லை. பொது பிரச்சினைகளுக்காக முதல்-மந்திரியை தொடர்பு கொண்டு பேசி உதவிகளை கேட்டுள்ளேன். எனது பிறந்த நாள் விழாவுக்கு ரூ.75 கோடி செலவு செய்யப்படுவதாக கூறப்படும் தகவல் தவறானது. விழாக்குழு பொருளாளர் உள்ளார். அவரை கேட்டால் எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பது தெரியவரும்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.

    சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி பதவியை பிடிக்க வேண்டும் என்பதில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×