என் மலர்

  இந்தியா

  சாம்ராஜ்நகர் அருகே 20 ஆண்டுக்கு முன்பே கட்டிய கல்லறையில் முதியவர் உடல் அடக்கம்
  X

  புட்டநஞ்சனப்பா, புட்டநஞ்சனப்பா தனக்கு தானே கட்டிய கல்லறை

  சாம்ராஜ்நகர் அருகே 20 ஆண்டுக்கு முன்பே கட்டிய கல்லறையில் முதியவர் உடல் அடக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சமாதியை தனது மனைவியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே அமைத்திருந்தார்.
  • இறுதிச்சடங்கு, திதி செலவுக்கு கல்லறையில் ரூ.1½ லட்சமும் வைத்திருந்தார்.

  சாம்ராஜ்நகர் :

  பொதுவாக சாமியார்கள், மடாதிபதிகள் தான் தாங்கள் இறப்பதற்கு முன்பே தங்களுக்கு சமாதி கட்டி வைத்து இருப்பார்கள். அதுபோல் கர்நாடகத்தில் விவசாயி ஒருவர் தனக்கு தானே கல்லறை கட்டி வைத்திருந்ததும், அதிலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட சம்பவமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

  சாம்ராஜ்நகர் தாலுகாவில் உள்ள நஞ்சதேவனபுராவை சேர்ந்தவர் புட்டநஞ்சனப்பா (வயது 85). இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். விவசாயியான இவரது மனைவி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை தனது தோட்டத்தில் அடக்கம் செய்து சமாதி கட்டினார். அங்கு அவர் தினமும் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தி வந்தார்.

  இதற்கிடையே 20 ஆண்டுகளுக்கு முன்பே புட்டநஞ்சனப்பா, தனது மகன்களுக்கும், குடும்பத்தினருக்கும் தொல்லை கொடுக்க கூடாது என கருதி தனக்கான சமாதியை தானே கட்டி முடித்துள்ளார். அதாவது சமாதியின் அடிப்பகுதியில் மட்டும் உடலை எடுத்து உள்ளே வைக்கும் அளவுக்கு மட்டும் பெரிய துளையிடப்பட்டு இருந்தது. அந்த துளை மணல் போட்டு மூடப்பட்டு இருந்தது. அந்த சமாதியை தனது மனைவியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே அமைத்திருந்தார்.

  இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக புட்ட நஞ்சனப்பா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். இதையடுத்து புட்டநஞ்சனப்பா உடலை, அவர் கட்டிய கல்லறையிலேயே அடக்கம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக கல்லறையில் கொட்டப்பட்டு இருந்த மணல் வெளியே அள்ளப்பட்டது.

  அப்போது அங்கு மண் பானை, விபூதி மற்றும் இறுதிச்சடங்கிற்கு தேவையான பொருட்களும் அதில் புட்டநஞ்சனப்பா வைத்திருந்துள்ளார். அவற்றை உறவினர்கள் வெளியே எடுத்தனர். மேலும் தனது இறுதிச்சடங்கு மற்றும் 11-வது நாள் திதி காரியம் செலவிற்காக ரூ.1½ லட்சத்தையும் அவர் அந்த கல்லறைக்குள் பத்திரமாக வைத்திருந்ததும் தெரியவந்தது. அதை எடுத்து மகன்களிடம் கொடுக்கப்பட்டது.

  இதையடுத்து மேளதாளம் முழங்க அவரது உடலுக்கு மகன்கள் இறுதிச்சடங்கு நடத்தினர். பின்னர் பாடையை மலர்கள், தோரணங்களால் அலங்கரித்து அதில் புட்ட நஞ்சனப்பா உடலை வைத்து ஊர்வலமாக நேற்று காலை தோட்டத்திற்கு எடுத்து வந்தனர். அங்கு அவரே கட்டிய கல்லறையில் புட்டநஞ்சனப்பா உடல் அடக்கம் செய்யப்பட்டது.

  இதுகுறித்து நஞ்சனதேவனபுராவை சேர்ந்தவர்கள் கூறுகையில், புட்டநஞ்சனப்பா, தனக்கு தானே கல்லறை கட்டி வைத்திருந்தார். அவர் ஒரு சுயமரியாதைக்காரர். அதனால் தனது இறப்புக்கு பிறகு மகன்கள் கஷ்டப்படக் கூடாது என நினைத்து கல்லறை கட்டியுள்ளார். மேலும் அதனுள் இறுதிச்சடங்கு பொருட்களையும், ரூ.1½ லட்சம் பணத்தையும் வைத்திருந்தார்.

  தான் இறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே 3 மகன்களுக்கும் சரிசமமாக சொத்துக்களையும் பிரித்து கொடுத்திருந்தார். தன்னால் தனது மகன்கள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக அவர் இவ்வாறு செய்துள்ளார் என்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பே தனக்கு தானே கல்லறை கட்டிவைத்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  Next Story
  ×