

கேரளா மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தி, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது அந்த மசோதாவை சட்டமாக மாற்றி குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
கேரள அரசு கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் கேரளாவின் பெயரை கேரளம் என பெயர் மாற்றம் செய்ய கேரள சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.
கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்தில், “மலையாள மொழியில் மாநிலத்தின் பெயர் 'கேரளம்'-ஆக உள்ளது. 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி மொழி அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
கேரளா உருவான தினமும் நவம்பர் 1 ஆம் தேதியே கொண்டாடப்படுகிறது. தேசிய சுதந்திர போராட்ட காலம் முதலே, மலையாள மொழி பேசும் மக்களுக்காக ஒருங்கிணைந்த கேரளாவை உருவாக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கை இருந்து வருகிறது.
ஆனால், அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் நமது மாநிலத்தின் பெயர் 'கேரளா' என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 3 ஆம் பிரிவின்படி, பெயரை 'கேரளம்' என மாற்றுவதற்கு அவசர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை இந்த சட்டமன்றம் ஒருமனதாக வலியுறுத்துகிறது” என்று குறிப்பிட்டது.
அரசியலமைப்பு பிரிவு 3-ன் கீழ், ஒரு மாநிலத்தின் பெயர் அல்லது எல்லையை மாற்றும் மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய குடியரசுத் தலைவரின் முன்அனுமதி (Prior Recommendation) கட்டாயமாகும்.
அதன்படி குடியரசுத் தலைவர் இந்த மசோதாவை கேரள சட்டமன்றத்தின் கருத்து அறிவதற்காக அனுப்பி வைத்தார். இதையடுத்து கேரள சட்டமன்றம் குறிப்பிட்ட காலத்திற்குள் தன் கருத்துகளைத் தெரிவித்து அதை மீண்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது.
குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு பின், மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
குடியரசுத் தலைவர் ஒப்புதல்
இந்த மசோதா கடந்த செவ்வாய்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, அடுத்த நாள் மாநிலங்கள் அவையிலும் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து இந்த மசோதா சட்டமாக மாற்றப்படுவதற்கு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டமாக மாற்றப்படுவதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.
இந்த மசோதாவானது மாநிலத்தின் பெயரை கேரளா என்பதில் இருந்து, கேரளம் என மாற்றுவதற்கும், அதற்கேற்ப அரசியலைப்பின் முதல் அட்டவணையை 3-வது பிரிவின் கீழ் திருத்துவதற்கும் வழிவகை செய்கிறது.
இந்த நிலையில் கேரளா மாநிலத்தின் பெயர் திருத்தம் செய்யப்பட்டு, ‘கேரளம்’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.