search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சார்ஜாவில் இருந்து ஐதராபாத் புறப்பட்ட இந்திய விமானம் அவசரமாக பாகிஸ்தானில் தரை இறங்கியது
    X

    சார்ஜாவில் இருந்து ஐதராபாத் புறப்பட்ட இந்திய விமானம் அவசரமாக பாகிஸ்தானில் தரை இறங்கியது

    • விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார்.
    • விமானத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    புதுடெல்லி:

    இன்டிகோ நிறுவனத்தின் 6இ-1406 விமானம் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள சார்ஜாவில் இருந்து ஐதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்தது.

    அந்த விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார். 2-வது பக்க என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதுபற்றி விமானி கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

    இதை தொடர்ந்து இந்தியாவின் இன்டிகோ விமானம் பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய விமானம் பாகிஸ்தானில் தரை இறங்கியது. இதனால் விமானத்தில் உள்ள அனைத்து பயணிகளும் பத்திரமாக அங்கு இறங்கினர்.

    இதுகுறித்து இன்டிகோ விமான நிறுவனத்தின் அதிகாரி கூறும்போது, "ஜார்ஜா-ஐதராபாத் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதை விமானி அறிந்ததும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு திருப்பி விடப்பட்டு அவசரமாக தரை இறக்கம் செய்யப்பட்டது" என்றார்.

    அந்த விமானத்தில் இருந்த பயணிகளை ஐதராபாத் நகருக்கு அழைத்து வருவதற்காக கூடுதல் விமானம் ஒன்றும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

    விமானத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2 வாரங்களில் மட்டும் கராச்சியில் தரை இறக்கப்பட்ட 2-வது இந்திய விமானம் இதுவாகும்.

    இந்த மாதம் தொடக்கத்தில் டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக கராச்சியில் தரையிறக்கப்பட்டது.

    Next Story
    ×