search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தவறு செய்திருந்தால் தூக்கில் போடுங்கள்- பிரதமர் மோடி
    X

    தவறு செய்திருந்தால் தூக்கில் போடுங்கள்- பிரதமர் மோடி

    • பா.ஜனதா தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்கும்.
    • நான் ஒருபோதும் இந்து-முஸ்லிம் அரசியல் செய்ததில்லை. அதைச் செய்யவும் மாட்டேன்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    கேள்வி:- இந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பாரதிய ஜனதா எவ்வாறு தயாரானது?

    பதில்:- வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் வரை காத்திருக்காமல் உழைக்குமாறு கட்சி உறுப்பினர்களை ஓராண்டுக்கு முன்பே கேட்டுக் கொண்டேன். நாங்கள் அனைவரும் தாமரைக்காக உழைத்தோம். எதிர்க்கட்சிகள் கூட தாமரைக்காக உழைக்கின்றன. அவர்கள் எவ்வளவு சேற்றை அள்ளுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக தாமரை மலரும்.

    பா.ஜனதா தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்கும். அடுத்து வரும் எங்களின் ஆட்சியின் முதல் 125 நாட்களுக்கான திட்டங்களை வகுத்துள்ளேன். இதில் 25 நாட்கள் நாட்டின் இளைஞர்களுக்கு பிரத்தியேகமாக இருக்கும்.

    கேள்வி:- மத்திய புலனாய்வு அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை எழுப்புகிறார்களே?

    பதில்:- மத்திய புலனாய்வு அமைப்புகளில் ஒன்றான அமலாக்க இயக்குநரகம் 2014-ம் ஆண்டுக்கு (காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ்) முன் பயனற்றதாக இருந்தது. தற்போது திறம்பட செயல்படத் தொடங்கி உள்ளது.

    ஊழல்வாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை, ஏழைகளுக்கு திருப்பி அளிக்கும் வகையில், சட்டத்தை உருவாக்க வக்கீல்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினேன். அமலாக்கத்துறையால் இதுவரை கைப்பற்றப்பட்ட ரூ.17 ஆயிரம் கோடியை ஏழைகளுக்கு திருப்பி கொடுத்துள்ளேன்.

    கேள்வி:- ஒரே நாடு, ஒரே உடையை நோக்கிய நகர்வாக பொது சிவில் சட்டம் முன்வைக்கப்படுகிறதே?

    பதில்:- கோவா மக்கள் ஒரே மாதிரியான ஆடைகளை அணிகிறார்களா? கோவா மக்களும் ஒரே மாதிரியான உணவை சாப்பிடுகிறார்களா? பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. இது எந்த அரசியல் கட்சியின் விவகாரமும் அல்ல. இது அரசியல் நிர்ணய சபையில் இருந்து வந்தது.

    கேள்வி:- நாட்டின் அரசியலமைப்பை மாற்றவும், கல்வி-வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை நீக்கவும் பா.ஜனதா விரும்புவதாக கூறப்படுகிறதே?

    பதில்:- ஜவகர்லால் நேருவில் தொடங்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெவ்வேறு காலங்களில் அரசியலமைப்பை கிழித்தெறிந்தனர். அரசியலமைப்பை அவர்கள் தாக்கிய காலம் வெகு தொலைவில் உள்ளது. அதனால்தான் இன்று நான் தைரியமாக மக்களிடம், மோடி உயிருடன் இருக்கிறார் என்று சொல்கிறேன். இந்தியாவில் மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு இருக்காது என்று கூறிய அரசியல் நிர்ணய சபையின் அடிப்படை உணர்வுக்காக போராடுவேன். அதற்காக என் உயிரையும் தியாகம் செய்வேன்.

    கேள்வி:- பா.ஜனதா அரசு பணக்காரர்கள் சிலருக்கு பலன்களை அளிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது பற்றி?

    பதில்:- என்னால் நேர்மையற்ற முறையில் யாரேனும் பயனடைந்தால் தண்டனையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். நான் தவறான வழியில் யாருக்காவது நன்மை செய்திருந்தால் நான் தூக்கிலிடப்பட வேண்டும். ஆனால் எனது நாட்டில் செல்வத்தை உருவாக்குபவர்களை நான் மதிப்பேன். செல்வத்தை உருவாக்குபவர்கள்-தொழிலாளர்களைப் பற்றி சமமாக கவலைப்படுகிறேன்.

    கேள்வி:- நீங்கள் வகுப்புவாத அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் கூறுகிறார்களே?

    பதில்:- நான் ஒருபோதும் இந்து-முஸ்லிம் அரசியல் செய்ததில்லை. அதைச் செய்யவும் மாட்டேன். ஆனால் முத்தலாக் தவறு என்று நான் சொன்னால், முஸ்லிம் விரோதி என்று முத்திரை குத்தப்பட்டேன்.

    நான் இப்படி முத்திரை குத்தப்பட்டால் அது விமர்சிப்பவர்களின் நிர்ப்பந்தம் ஆகும். என்னுடையது அல்ல. நீங்கள் (எதிர்க்கட்சிகள்) வகுப்புவாதத்தை பின் பற்றினீர்கள். நான் அதை அம்பலப்படுத்தினேன். அவர்களின் தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினரை ஒப்பந்த முறையில் கொண்டு வருவோம் என்பதை நான் எதிர்த்தால், அதை மதச்சார்பின்மை காரணமாக செய்கிறேன். இதனால் நான் சிறு பான்மையினரை தாக்குவது போல் காட்டப்படுகிறது.

    கேள்வி:- 400 தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றும் என்று கூறுவது பற்றி?

    பதில்:- வெற்றி தோல்வி பற்றி நான் ஒருபோதும் கூறவில்லை. 400 இடங்களைப் பற்றி முதலில் பேசியது மக்கள்தான். மக்களின் பார்வையை அறிந்துதான் அதை கூறினேன். 2019-ம் ஆண்டு தேர்தலில் 400 இடங்களைப் பெற்றுள்ளோம். எனவே, இந்த முறை 400-யை தாண்டிச் செல்ல வேண்டும் என்று சொல்வது ஒரு தலைவராக எனது கடமையாகும்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    Next Story
    ×