search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடுகிறது- காணொலிக்காட்சி வழியாக சோனியா பங்கேற்பு
    X

    காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடுகிறது- காணொலிக்காட்சி வழியாக சோனியா பங்கேற்பு

    • காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டுக்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளார்.
    • காங்கிரஸ் கட்சி ஒற்றுமை நடைபயணம் நடத்தும் நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் சில வாரங்கள் தள்ளிப்போகலாம்.

    புதுடெல்லி:

    நாட்டின் முதுபெரும் கட்சியான காங்கிரஸ், கடந்த 2014, 2019 என தொடர்ந்து இரு பாராளுமன்ற தேர்தல்களில் அடுத்தடுத்து படுதோல்வியைத் தழுவியது. கட்சியின் மூத்த தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக காங்கிரசிலிருந்து விலகி வருகின்றனர்.

    ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கபில் சிபல், அமரிந்தர் சிங், சுனில் ஜாக்கர், அஸ்வினி குமார், ஆர்.பி.என்.சிங், ஹர்திக் படேல், ஜித்தின் பிரசாதா. ஜெய்வீர் ஷெர்கில் என பல தலைவர்கள் காங்கிரசில் இருந்து சமீப காலத்தில் விலகி உள்ளனர்.

    கட்சியின் மூத்த தலைவராக திகழ்ந்துவந்த குலாம் நபி ஆசாத்தும் கட்சியுடனான தனது 50 ஆண்டு கால தொடர்பை முடித்துக்கொண்டு, நேற்று முன்தினம் காங்கிரசில் இருந்து விலகினார். அதுமட்டுமின்றி, கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது அவர் சரமாரி குற்றச்சாட்டுகளை கூறினார். இது அந்தக் கட்சியில் பெருத்த சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டுக்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளார். அவருடன் ராகுலும், பிரியங்காவும் சென்றுள்ளனர்.

    குலாம் நபி ஆசாத் விலகல் பற்றி அவர்கள் நேரடியாக எந்தக் கருத்தும் இதுவரை வெளியிடவில்லை.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் அட்டவணையை இறுதி செய்வது தொடர்பாக கட்சியின் அதிக அதிகாரமிக்க அமைப்பான காரிய கமிட்டி கூட்டம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.

    வெளிநாட்டில் இருந்தவாறு சோனியா காந்தியும், ராகுல், பிரியங்காவும் இதில் காணொலிக்காட்சி வழியாக கலந்து கொள்கிறார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தேர்தல் அட்டவணை இறுதிசெய்யப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்படும்.

    கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் நோக்கி காங்கிரஸ் கட்சி ஒற்றுமை நடைபயணம் நடத்தும் நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் சில வாரங்கள் தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது.

    இந்த ஆண்டு ஆகஸ்டு 21 மற்றும் செப்டம்பர் 20-க்கு இடையே காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

    இன்றைய காரியக்குழு கூட்டத்தில் சோனியா காந்திக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆன தங்கள் ஆதரவை காரியக்குழு உறுப்பினர்கள் உறுதிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×