search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படும்: ஆய்வில் தகவல்
    X

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படும்: ஆய்வில் தகவல்

    • கர்நாடகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க பாஜக வியூகங்களை வகுத்து வருகிறது.
    • இதுவரை பாஜக தனி மெஜாரிட்டியில் ஆட்சியை பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பெங்களூரு

    கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள ஆளும் கட்சியான பா.ஜனதா உள்பட அரசியல் கட்சிகள் மும்முரமாக தயாராகி வருகின்றன. இந்த தேர்தலை மனதில் வைத்து பா.ஜனதா கட்சியின் பெரிய தலைவர்கள் கர்நாடகம் பக்கம் தங்களின் கவனத்தை திருப்பியுள்ளனர். பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் கர்நாடகத்திற்கு அடிக்கடி வர தொடங்கியுள்ளனர்.

    பிரதமர் மோடி சமீபத்தில் கர்நாடகம் வந்து ரூ.33 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கர்நாடக மேல்-சபையில் 4 இடங்களுக்கு நடந்த ேதர்தலில் ஆளும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றது. சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற பல்வேறு இடைத்தேர்தல்களிலும் காங்கிரஸ் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றது. பெலகாவி நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருந்த சுரேஷ் அங்கடி கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து கடந்த ஓராண்டுக்கு முன்பு அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இதில் பா.ஜனதா சார்பில் சுரேஷ் அங்கடியின் மனைவி போட்டியிட்டு வெற்றி பெற்றார். வாக்குகள் வித்தியாசம் 2 லட்சத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைந்தது. பா.ஜனதாவின் கோட்டையான அந்த தொகுதியில் அக்கட்சியின் வாக்கு வித்தியாசம் வெகுவாக குறைந்தது கட்சி தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே போல் பல்வேறு சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலிலும் காங்கிரஸ் சில தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    இது ஆளும் பா.ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. குறிப்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் சொந்த ஊரான ஹாவேரி மாவட்டத்தில் இருக்கும் ஹனகல் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் பா.ஜனதா தோல்வியை தழுவியது. முதல்-மந்திரியின் சொந்த மாவட்டத்திலேயே பா.ஜனதா தோல்வி அடைந்தது அக்கட்சி தலைவர்களை அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தல்களிலும் ஆளும் பா.ஜனதாவுக்கு இணையாக காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், மக்களின் மனநிலையை அறிந்து கொள்ள பா.ஜனதா ஒரு தனியார் நிறுவனம் மூலம் ஆய்வு நடத்தியது. அந்த நிறுவனம் மாநிலம் முழுவதும் ஆய்வை நடத்தியது. அதில் சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அக்கட்சி 70 முதல் 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று கூறப்படுகிறது.

    அக்கட்சியில் எம்.எல்.ஏ.க்களாக உள்ளவர்கள் மீது தொகுதி மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மைசூரு, மண்டியா, ஹாசன், சாம்ராஜ்நகர், ராமநகர், துமகூரு, சித்ரதுர்கா, கோலார், சிக்பள்ளாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பா.ஜனதாவுக்கு மிக குறைந்த அளவே ஆதரவு கிடைக்கும் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதனால் எந்தெந்த தொகுதியில் எம்.எல்.ஏ.க்கள் மீது அதிருப்தி உள்ளதோ அந்த தொகுதியில் புதிய முகங்களுக்கு டிக்கெட் வழங்கி மக்களின் மனதை வெல்ல முடியுமா? என்பது குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஆலோசிக்க தொடங்கியுள்ளனர். இந்த முறை எப்படியாவது கர்நாடகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அக்கட்சி வியூகங்களை வகுத்து வருகிறது. மாநிலத்தில் இதுவரை அக்கட்சி தனி மெஜாரிட்டியில் ஆட்சியை பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தென்மாநிலங்களில் கர்நாடகத்தில் மட்டுமே ஆட்சியில் இருக்கும் பா.ஜனதா இதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று கருதுகிறது.

    Next Story
    ×