என் மலர்
இந்தியா

திருமணத்துக்கு மறுத்த பெண்ணை காருடன் ஏரியில் தள்ளி கொலை செய்த வாலிபர்
- ரவி, ஸ்வேதாவை காதலிப்பதாக அழுத்தம் கொடுத்தார்.
- உனக்காக குடும்பத்தை விட்டு வந்து விடுகிறேன் என்று மீண்டும் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி (34). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இதே பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா (32). இவர் திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார்.
ரவியும், ஸ்வேதாவும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இதனால் அவர்கள் நண்பர்களாக பழகி வந்தனர். இந்த நிலையில் ஸ்வேதா மீது ரவிக்கு காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பல முறை தனது காதலை ஸ்வேதாவிடம் தெரிவித்து உள்ளார். அதற்கு அவர் உங்களுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். அவர்களுடன் நீங்கள் வாழுங்கள் என்று கூறியுள்ளார்.
ஆனாலும் ரவிக்கு ஸ்வேதா மீது உள்ள காதல் குறையவில்லை. தொடர்ந்து தான் வலியுறுத்தியும் ஸ்வேதா தனது காதலை நிராகரித்து வந்ததால் ரவிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. சம்பத்தன்று ரவியும், ஸ்வேதாவும் ஒரே காரில் பயணித்தனர். அவர்கள் சந்தனஹள்ளி என்ற பகுதியில் உள்ள ஏரிக்கரையில் காரில் சென்றனர்.
அப்போதும் ரவி, ஸ்வேதாவை காதலிப்பதாக அழுத்தம் கொடுத்தார். மேலும் உனக்காக குடும்பத்தை விட்டு வந்து விடுகிறேன் என்று மீண்டும் கூறியுள்ளார். ஆனாலும் ஸ்வேதா வழக்கம் போல் ரவியின் காதலை நிராகரித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ரவி காருடன் ஏரியில் பாய்ந்தார். இதில் காருக்குள் இருந்த ஸ்வேதா தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். ஆனால் ரவி நீச்சல் அடித்துக்கொண்டு வெளியே தப்பி வந்து விட்டார்.
இதுப்பற்றி தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து காருடன் ஏரியில் மூழ்கி இறந்த ஸ்வேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிர் தப்பிய ரவியிடம் விசாரணை நடத்திய போது கார் தற்செயலாக ஏரியில் விழுந்ததாகவும், தான் நீந்திக்கொண்டு வந்து உயிர் தப்பியதாகவும் தெரிவித்தார். ஆனாலும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






