search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டை போட்ட மாணவிகள்
    X
    நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டை போட்ட மாணவிகள்

    நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டை போட்ட மாணவிகள்- பெங்களூருவில் பரபரப்பு

    சமீப காலமாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நடுரோட்டில் சண்டையிட்டு கொள்வது அதிகரித்து வருகிறது. சாதி பிரச்சினை தொடங்கி காதல் பிரச்சினை வரை மாணவ-மாணவிகளிடையே கடும் மோதல் போக்கை விளைவித்து வருகிறது.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புகழ்பெற்ற தனியார் பள்ளியின் சீருடையை அணிந்திருக்கும் மாணவிகள் சிலர் பள்ளியில் இருந்து வெளியில் வரும்போது கடும் வாக்குவாதம் செய்துகொண்டே வந்தனர்.

    ஒரு சந்தர்ப்பத்தில் வாக்குவாதம் அதிகமாகி அவர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். அப்போது ஒரு மாணவி மற்றொரு மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்து ஆக்ரோஷமாக தாக்கினார்.

    கையில் பேஸ்பால் மட்டைகளை வைத்துக்கொண்டு அடித்துக் கொண்டனர். பின்பு இரும்பு கதவுகளில் தலையை கொண்டு மோத செய்து சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.

    இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். சிறிது நேரத்தில் அங்கு மக்கள் கூட்டம் கூடியது. சிலர் மாணவிகளை தடுக்க முயன்றனர். இருப்பினும் மாணவிகள் தொடர்ந்து ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டார்கள்.

    சிலர் இந்த சண்டையை வேடிக்கை பார்த்ததோடு செல்போனிலும் படம் பிடிக்க தொடங்கினர். மக்கள் கூட்டத்தையோ, தங்களை வீடியோ எடுப்பதையோ மாணவிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை.

    மாறாக தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் ஒருவரை ஒருவர் தாக்குவதிலேயே குறியாக இருந்தனர். மாணவிகளின் இந்த குடுமிப்பிடி சண்டை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வெகுநேரத்துக்கு பின்னர் பொதுமக்களில் சிலர் அவர்களை விலக்கிவிட்டனர். இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் யாரும் எந்த புகாரும் அளிக்கவில்லை. மாணவிகள் சண்டையிட்டு கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோ அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது. இதில் ஒரு மாணவி தாக்கப்பட்டதில் மூக்கு உடைந்தது. அவரை காதலன் என சொல்லப்படும் மாணவன் பாதுகாக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளது.

    இந்த மோதலுக்கான சரியான காரணம் முழுமையாக தெரியவில்லை என்றாலும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் இதுவரை விளக்கமளிக்கவில்லை.

    இது தொடர்பாக போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது சண்டையில் ஈடுபட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக பள்ளி நிர்வாகிகள் தரப்பில் போலீசாரிடம் கூறப்பட்டது.

    காதலனுக்காக 2 மாணவிகள் மோதிக்கொண்டதாக தெரிகிறது. சம்பந்தப்பட்ட பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரை காதலிக்கு தெரியாமல் அவரது ஆண் நண்பர் வெளியே அழைத்துச்சென்று வந்துள்ளார். இதுதான் இந்த சண்டைக்கு காரணம் என கூறப்படுகிறது.

    இந்த பிரச்சினை தொடர்பாக மாணவிகள் 2 பேரும் ஏற்கனவே சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு மோதியுள்ளனர். பின்னரே நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கப்பன்பார்க் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்போன் கொண்டு செல்லக்கூடாது என கூறினாலும் கூட பலர் அதை பின்பற்றுவது இல்லை. கொரோனா காலத்தில் இணையவழி கல்விக்காக மாணவர்கள் செல்போன் பயன்படுத்திய நிலையில் அதனை தற்போது பள்ளி வகுப்பறைக்கும் எடுத்து சென்று பயன்படுத்துகின்றனர்.

    மேலும் பாடங்களை கவனிக்காமல் செல்போனில் விளையாடி பொழுதை கழிக்கின்றனர். இது மாணவர்களின் கல்வி கற்கும் திறனை பாதிக்கும். எனவே மாணவ-மாணவிகளிடையே ஒழுக்கத்தை போதிக்கவும், ஒழுங்கீனங்களை சரிசெய்ய சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் முன்வர வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

    Next Story
    ×