search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சோனியா காந்தி
    X
    சோனியா காந்தி

    காங்கிரஸ் மாநாடு தொடங்கியது- 2024 தேர்தலுக்கான வியூகங்கள் வகுக்கப்படுகிறது

    காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாகவும், 2024 பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெறுவது தொடர்பாகவும் வியூகம் வகுக்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    2014 பாராளுமன்ற தேர்தலில் இருந்து காங்கிரஸ் கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

    உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி ஆட்சியையும் இழந்தது.

    இதையடுத்து நிரந்தர தலைமையை கோரியும், கட்சியை வலுப்படுத்துவதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்தியும் குலாம்நபி ஆசாத் தலைமையில் 23 மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். இந்த நிலையில் அதிருப்தியாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாகவும், 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பது தொடர்பாகவும், 3 நாள் மாநாடு நடத்துவது தொடர்பாகவும் சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இன்று தொடங்கியது. மாநாடு தொடக்க நாளான இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உரை நிகழ்த்தினார்.

    மாநாட்டின் இறுதி நாளில் ராகுல்காந்தி பேசுகிறார். இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் 430 மூத்த தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

    காங்கிரஸ் கட்சியில் உள்ள பிரச்சினைகள் குறித்து திறந்த மனதுடன் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. அடுத்துவர இருக்கிற சட்டசபை தேர்தல்கள், 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றுக்கு காங்கிரஸ் கட்சியை தயார்படுத்துவது தொடர்பாகவும் மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

    காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாகவும், 2024 பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெறுவது தொடர்பாகவும் வியூகம் வகுக்கப்படுகிறது.

    இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள், ஆலோசனைகள் தொடர்பாக அறிக்கைகள் தயாரிக்கப்பட உள்ளது. அவை இறுதி செய்யப்பட்டு சோனியாகாந்தியிடம் வழங்கப்படுகிறது. கடைசி நாளில் நடக்கும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்படுகிறது.

    காங்கிரஸ் கட்சியின் செயல்திட்டத்தை உருவாக்கும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாநிலம், மாவட்டம் மற்றும் வட்டாரம் அளவில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து மாநாட்டில் முடிவு செய்யப்படுகிறது.

    வருகிற தேர்தல்களில் ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் விவாதித்து முடிவு எடுக்கப்படுகிறது. உள்கட்சி பிரச்சினைகள், தற்போது நாடு சந்தித்து வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது.

    பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, விவசாயத்தை தனியார் மயமாக்கும் முயற்சி, சீனா அத்துமீறல், சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீதான தாக்குதல், மத ரீதியில் மக்களை பிளவுபடுத்தும் முயற்சி போன்றவை குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

    அரசியல், சமூகநீதி, பொருளாதாரம், கட்சியின் உள்கட்டமைப்பு, விவசாயிகள், இளைஞர்கள் என 6 குழுக்களாக தலைவர்கள் பிரிந்து விவாதித்து தங்களுடைய பரிந்துரைகள், ஆலோசனைகளையும் வழங்குகிறார்கள்.

    காங்கிரஸ் கட்சியின் தலைமையை ராகுல்காந்தி ஏற்க வேண்டும் என்று பல மூத்த தலைவர்கள் வலியுறுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×